Advertisement

பதில் சொல்வீர்களா கமல்?

'காந்திக்குல்லா... காவிக்குல்லா... கஷ்மீர் குல்லா! தற்போது கோமாளி குல்லா... தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா...' - கமல்ஹாசனின் சமீபத்திய இந்த, 'டுவீட்'டை படித்ததும், குல்லாக்களின் கனத்தால் தலை கனத்தது. கோமாளி குல்லாவை தலையில்இருந்து உருவி, உள்ளிருந்த குல்லாக்களை எல்லாம் எடுத்து கவிழ்த்தால் உள்ளிருந்து உதிர்ந்தன இந்த கேள்விகள்... பதில் சொல்வீர்களா கமல்...
l 'அரசியல் கற்றுக் கொள்வதில் நான், 'ஸ்லோ லேர்னர்' என, சமீபகாலமாய் சொல்லும் நீங்கள், ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த மறுநாள், 'அரசியல் என் தொழில் அல்ல; எனக்கு நன்கு தெரிந்த வேறு தொழில் இருக்கிறது. தெரிந்த வேலையை விட்டுவிட்டு, தெரியாத வேலையை நான் ஏன் பார்க்க வேண்டும்?' என்றீர்கள்.
l சமீபத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட உங்கள் நற்பணி இயக்கத்தின் கொள்கைகளை மேற்கோள் காட்டி, அரசியல் தெளிவு அப்போதே வந்துவிட்டது என்கிறீர்கள்... இவற்றில் எது நிஜம்?
l ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு. 'எதற்காக எங்களை அழைத்திருக்கிறீர்கள்?' என, முதல் கேள்வியை வீசுகிறார் ஒரு நிருபர்.
l ஏனென்றால், சந்திப்பு நடந்ததுஉங்கள் வீட்டில்! 'நான் அழைக்கலேங்க... நாமெல்லாம் கூடியிருக்கிறது நம்மளோட கடமைக்காக! உங்க கடமையை நீங்க செய்ய வந்திருக்கீங்க; நான் என் கடமையை செய்ய வந்திருக்கேன்' என, வித்தியாசமான பதிலைச் சொன்னீர்கள்.
l இது தான் தன்மான தற்காப்பா... ஆமாம், ஏன் அப்போது நீங்கள் வெகுண்டு எழவில்லை?
l 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்து, உங்களை கைது செய்ய வேண்டும் என, இந்து முன்னணி கட்சி கோரிக்கை வைக்கிறது. மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு, உங்கள் வீட்டில்! முதல் கேள்வியாக, 'எதற்காக எங்களை அழைத்திருக்கிறீர்கள்?' எனும் அதே கேள்வி.
l 'நான் கூப்பிட்டேங்கிறதை விட நீங்க வந்தது தான் உண்மை. ஒவ்வொரு முறையும் நான் கூப்பிட்டு தான் நீங்க வரணும்னு இல்லை. நான் கூப்பிடாமலும் பல தடவை நீங்க வந்திருக்கீங்க. இதுதான் எனக்கு பெருமை' என, மறுபடியும் ஒரு தன்மான தற்காப்பு பதில்; இது ஏன் கமல்?
l 'தங்களின் விளம்பரத்துக்காக கட்சிகள் உங்களை எதிர்க்கின்றனவா?' என்றால், 'ஆமாம், இல்லை' என்று சொல்லாமல், 'அப்படி நீங்க நினைக்கிறீங்களா?' என, கேள்வியை திருப்பி விடுகிறீர்கள்.
l கூடவே, 'கிண்டி கிண்டி விட்டா, உப்புமா நல்லா வந்திரும்னு சொல்ல முடியாது. சில நேரம் அடி பிடிச்சிரும்' என்று தத்துவம் சொல்கிறீர்கள். அரசுத் துறைகளில் எதில் ஊழல், எவ்வளவு ஊழல் என ஆதாரபூர்வமாக நிரூபிக்காமல், எல்லா துறைகளிலும் ஊழல் என, பொத்தாம் பொதுவாக நீங்கள் கிண்டி விட்டபடியே இருந்தால், உங்கள் உப்புமா மட்டும் நன்றாக வந்து விடுமா?
l 'யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி மணியை அடித்து விடலாம் என்பதில்லை. கன்றை இழந்த பசு தான் அடிக்க வேண்டும். அந்த நீதி தெரிந்த சட்டம், இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது.
l 'அதன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு; அந்த சட்டம் என்னை பாதுகாக்கும்; நீதி என்னை பாதுகாக்கும்' என, 'கைது செய்தால் பயமில்லை' என்ற ரீதியில் வார்த்தை உதிர்த்த நீங்கள், எந்த கன்றை இழந்ததற்காக ஆராய்ச்சி மணியை இவ்வளவு வேகமாக அடிக்கிறீர்கள்? இப்படி கேட்பதினால், நாட்டில் எந்த கன்றுமேசாகவில்லை என்பது அர்த்தமல்ல; உங்களை இப்படி கொந்தளிக்க வைத்த கன்று எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே!
l 'சிஸ்டம் சரியில்லை என, ரஜினி சொல்வதற்கு முன்பே சொன்னவன் நான்' எனச் சொல்லும் நீங்கள், தமிழகமக்களை அப்போதே, இ - மெயில் அனுப்பச் சொல்லாதது ஏன்? ஜெயலலிதா உயிரோடு இருந்தது காரணம் என்றால், அவர் காலமாகி, ஓ.பி.எஸ்., பதவிக்கு வந்த பின்பாவது சொல்லி இருக்கலாமே!
l ஆனால், நீங்கள் செய்தது என்ன... 'பன்னீர்செல்வம் ஆட்சித்திறனில் திறமையின்மைக்கான அறிகுறி இல்லாதபோது, ஏன் அவரை மாற்ற வேண்டும்?' எனக் கேட்டீர்கள். ஆக, முதல்வர் பழனிசாமி மீது தான் கமலுக்கு கோபம்; அப்படி தானே?
l 'நான் மக்களில் ஒருவன்; மக்கள் பிரதிநிதி' என குரல் உயர்த்தி வரும் நீங்கள், ஊழலற்ற நல்லாட்சியை மக்களுக்கு தர வேண்டும் என, விரும்பும் நீங்கள்; வரி கட்டும்விஷயத்தில் மக்களுக்கு முன்மாதிரியாய் இருக்கும் நீங்கள், திரைத்துறையில நடக்கும் ஊழல்கள் பற்றி, அங்கு புழங்கும் கறுப்பு பணம் பற்றி, அதில் ஊறித் திளைத்து அரசை ஏமாற்றுபவர்கள் பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டுமா; இல் லையா! சரி, அரசு மீது நம்பகத்தன்மை இல்லையென்றால், பொது வெளியில் மக்கள் மன்றத்தில்அதை எடுத்து வைப்பது தானே முறை...
l 'திரையரங்க நுழைவுச்சீட்டு கட்டணத்தை சினிமாக்காரர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்' என சொல்லும் நீங்கள், 'டிக்கெட் விலை அதிகம்னு நினைச்சா, படம் பார்க்க வராதீங்க' என கோபப்படுகிறீர்கள்...
l கூடவே, 'சினிமாவுல இருந்து அரசியல்வாதி வந்துட்டே இருக்கானேன்னு சங்கிலி போட்டு கட்டுப்படுத்த நினைக்கிறீங்களா...' என, அரசிடம் முகம் சிவக்கிறீர்கள். அப்படியென்றால், அரசியல் இந்த அளவிற்கு நாறிப் போனதற்கு சினிமாக்காரனும் ஒரு காரணம் என, மறைமுகமாக சொல்கிறீர்களா?
l விஸ்வரூபம் பிரச்னை சமயத்தில், அரசுக்கு எதிரான வழக்கில் ஜெயித்த நேரத்தில், 'நீதி, நியாயத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது' எனச் சொன்ன கமல், அதையே இப்போது, 'பிக் பாஸ்' பிரச்னை சமயத்திலும் வழிமொழிந்திருக்கிறார்.
l இப்படி சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர், அரசுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை திரட்டி, இன்னும் வழக்கு தொடுக்காமல் இருப்பது ஏன்? உங்கள் ரசிகர்கள் கண்டுபிடித்த முட்டை ஊழலுக்கு கூட, 'அது குப்பையில் வீசப்படுவதற்காக வைத்திருந்த அழுகிய முட்டை' என, அரசு தரப்பு விளக்கம் கொடுத்தது. அந்த விளக்கத்திற்கு கூட, இப்போது வரை, உங்களிடம் இருந்து மறுப்பு வரவில்லையே!
l எல்லாவற்றிற்கும் மேலாய், 'நான் குறி வைக்கப்பட்டதால் தான், எனக்கு இத்தனை கோபம். இன்னும் நான் அரசியலுக்கு வரவில்லை; வர வைத்து விடாதீர்கள்' என கொப்பளிக்கிறீர்கள். ஆக, உங்களுடைய நோக்கம், ஊழலற்ற ஆட்சி தந்து, தமிழக மக்களுக்கு உதவுவதுஅல்ல; உங்களை குறி வைப்பவர்களை மிரட்டுவது! அப்படித்தானே?
l இல்லையென்றால், இந்நேரம்நீங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டுமே!
கமல்ஹாசனே... தமிழர்களில்ஒருவராகிய உங்கள் தலையிலும் நீங்கள் சொன்ன குல்லா மாட்டப்பட்டிருப்பதால், நீங்கள் வெகுவாய் வெகுண்டெழுவீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது. எல்லாரையும் போல் நீங்களும் குரல் மட்டுமே கொடுத்து கொண்டிருப்பவராகி விடக்கூடாது எனும் அக்கறையே, இக்கேள்விகளுக்கான விதைகள்!
மாற்று கருத்துடையோர் பகிர்ந்து கொண்ட, 'முரசொலி' பவள விழா மேடையில், புதிய கலாசாரம் பயின்று சென்றிருக்கும் நீங்கள், நிச்சயம் இதற்கெல்லாம் பதில் சொல்வீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.

- வாஞ்சிநாதன்
vanjinath40@gmail.com

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

 • Rajkumar - coimbatore,இந்தியா

  நல்ல கேள்விகள். அவரால் பத்தி கூற முடியாது. கூத்தாடிகள் அரசாண்டு நாட்டைக்கெடுத்தது போதும்.

 • ஏணிப்படிகள் - chennai,இந்தியா

  நடிகர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே நாட்டிற்கு நல்லது. மக்களை முட்டாள் ஆக்குவதில் முன் அனுபவம் கொண்டவர்கள். மேலும் குட்டையை குழப்பி விடுவார்கள் .

 • Raja - London,யுனைடெட் கிங்டம்

  அருமையான கேள்விகள் திரு வாஞ்சி ஆனால் கமலால் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் முன்னால் அடிபட்டதிற்கு இப்போ revenge mode இல் இருக்காரு.

 • Mani Ramesh - Vietnam,வியட்னாம்

  திரு. வாஞ்சிநாதனின் கேள்விகளும் சாமானியனின் முணறல்களே. அரசியல் காட்சிகள் குழப்பத்தில் இருந்தாலும் வெகு சில பக்குவமான அதிகாரிகளின் குழப்பமற்ற மேதகையினால் அரசு எந்திரம் பழுதடையாமல் நாட்களை கடந்து செல்ல ஒத்துழைக்கின்றனர். எனினும் வேகமாய் சப்தம் கேட்க்கும் தமுக்கு வைத்திருக்கும் திரு. கமலஹாசன் அவர்களும் தெளிவான நோக்கோடு தனது கருத்துக்களை பதிவிட முனைய வேண்டும் என்பதே எமை போன்ற சாமானியனின் வேண்டுகோளும். கலங்கி கிடைக்கும் (அரசியல்) குட்டையில் குழப்பினால் மீன் பிடிக்கவே என்று சமூகமும் அறிந்துள்ளதே. ஆகவே, சமுதாய அக்கறை உள்ளோர் இத்தருணம் வெகுண்டெழுவது விழைய தக்கதே. எனினும் உளநோக்கற்ற தெளிவான விளிகளையே வேள்வியுள்ள கேள்விகளாயும் வித்திடும் விடைகளாயும் நேர்பட ஒழுக விரும்புகின்றோம்.

 • Manian - Chennai,இந்தியா

  Well done Mr.Vanjinath.

 • Ramacahandran - chennai,இந்தியா

  இவ்வளவு நாள் தினமலர் எங்கே போய் இருந்தது? அரசை விமர்சனம் செய்ய ஆரம்பித்ததும் பொறுக்க வில்லையா? அ தி மு கவுக்கு கொஞ்சம் கம்மியாவே ஜால்றா அடிக்கலாமே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement