Advertisement

சுமையா, சுகமா...இன்ஜினியரிங் கல்வி!

ஒரு காலத்தில் பொறியியல் படிப்புக்கு கல்லுாரி கல்லுாரியாக அலைந்து இடம் தேடிய காலம் மாறி, இரண்டாவது கவுன்சிலிங் மூலம் சேர்ப்பு நடப்பது மாற்றத்தின் அடையாளம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளுக்கு கூட, தமிழகத்தில் கிராக்கி இல்லை. மொத்தம் உள்ள, 1.47 லட்சம் பொறியியல் படிப்புக்கான, 'சீட்'களில், தற்போது, 68 ஆயிரத்து, 735 மாணவ மாணவியர் மட்டுமே சேர்ந்து உள்ளனர். பலர் சீட் கேட்டு விண்ணப்பித்தும், கலந்தாய்வுக்கு வரவில்லை. சில தனியார் கல்லுாரிகள், தன்னாட்சி பெற்ற சில அமைப்புகள், அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகள் எல்லாமே பிரச்னையின் விளிம்பில் நிற்கின்றன. திடீரென தமிழகத்தில் அதிக பொறியியல் கல்லுாரிகள் முளைத்ததும், அவை தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட உத்திகளும் மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் கவர்ந்தன. தமிழகத்தில் அதிக அளவு வங்கிக்கடன் வசதிகளும் அதற்கு உதவின. முதல் தலைமுறை இன்ஜினியர்கள் நிறையப் பேர் உருவானதும் உண்டு. ஆனால், பொறியியல் படிப்பில், 'டிராப் அவுட்' என்ற இடைநின்ற மாணவ மாணவியருக்கு என்ற தனி புள்ளி விபரம் கிடையாது. இவர்களில் சிலர் கலைக் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு படித்து, பி.பி.ஓ., என்ற சாதாரண கணினித் தொழிலை மேற்கொண்டிருக்கின்றனர். அதைத் தவிர, இப்படிப்பில் ஆர்வமுடன் தமிழ் மீடியத்தில் படித்ததால், அதைச் சமாளிக்க முடியாமல், அதிக அளவு தோல்வியைத் தழுவியதை, அண்ணா பல்கலைக் கழகம் மதிப்பீடு செய்யவில்லை. தமிழக உயர்கல்விக்குழு இதை முன்கூட்டியே கண்டறிந்து மாற்று வழி காணவில்லை.
தமிழகத்தில், 250 பொறியியல் கல்லுாரிகள் கல்வித்தரம், கற்பிக்கும் திறன் குறைவாக கொண்டிருப்பதாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்ததாக, முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி கூறியுள்ளார். கல்வியில் நிறைந்த கட்டமைப்பு இல்லாமல், மற்ற வசதிகள் இல்லாத கல்லுாரிகள் அதிகம் வந்ததும், கடந்த சில ஆண்டுகளாக இக்கல்லுாரி கள், ஐ.டி., என்னும் பாடப்பிரிவில் அதிகம் மாணவர்களை சேர்த்ததும் ஒரு காரணமாகும். இதனால், படிப்பின் தரம் சரியாக இருந்ததா அல்லது கற்பிக்கும் பேராசிரியர்கள் அதிக தகுதி பெற்றவராக இங்கு இருந்தனரா என்பதும், மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழகத்தில், உள்ள சில கல்லுாரிகளில் மாணவ மாணவியரைத் தேர்வு செய்த, பெங்களூரு, ஐ.டி., நிறுவனங்கள், தங்கள் பணிகளுக்கு தேவையான அடிப்படைத் தொழில் திறமை இவர்களிடம் இல்லை என்று நிராகரித்தது. மத்திய மனித வள மேம்பாடு அமைச்சக ஆய்வுகளில், வேலைவாய்ப்பு, மேற்படிப்பிற்கான அதிக தகுதி அல்லது தொழில் துவங்க வாய்ப்புகள் தொடர்ந்து, குறைவாகி விட்டதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், தனது அறிக்கையில், 'கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த இடங்களில், 30 சதவீதம் கூட நிரம்பாத கல்லுாரிகளை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை' என்றிருக்கிறது.அந்த அமைப்பின் மற்றொரு தகவலாக, நாடு முழுவதும், 37 லட்சம் இடங்கள் பொறியியல் படிப்புக்காக உள்ளன. அதில் இன்றைய நிலையில், 27 லட்சம், 'சீட்'கள் நிரம்பவில்லை. தமிழகம், கர்நாடகா ஆகியவை அதிக கல்லுாரிகள் கொண்டவை என்பது வேறு விஷயம்.இதைவிட உலக அளவிலான கல்வி குறித்த ஆய்வரங்கில், அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் தலைவர் சஹஸ்ர புதே, வெளிப்படையாக, 'இக்கல்வியில் தரம் உயர்த்துவது அவசியம்' என்றும், 'மூட விருப்பப்படும் கல்லுாரிகளை அனுமதிப்பதுடன் அதற்கு எவ்வித அபராதமும் இருக்காது' என்பது நல்ல தகவலாகும்.அடுத்த ஆண்டில் கல்லுாரி சேர்க்கைக்கு முன், மூடப்படும் கல்லுாரிகளின் முழுப்பட்டியல் ெவளிவரலாம். மேலும், இரண்டாவது கவுன்சிலிங் என்பது எத்தனை சதவீத இடங்களை நிரப்பப் போகிறது என்பதையும், எளிதில் மதிப்பிட முடியாது.மாணவ மாணவியர், அவர்களுடைய பெற்றோர் பலர், பொறியியல் படிப்பில் உள்ள மாயையை அறிந்து, இப்போது கலைக்கல்லுாரியில் உள்ள பல புதிய பாடங்களை தேர்வு செய்வது புதிய திருப்பமாகும். ஆனால், அதிக எதிர்பார்ப்புளைக் கொண்ட இக்கல்வி, இப்போது சுமையானதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதை விரைவில் சீராக்க வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement