Advertisement

தடய மொழியியலால் சிக்கும் குற்றவாளிகள்

இருபதாம் நுாற்றாண்டின் மிகப் பெரிய வரப்பிரசாதமே மொழியியல். மொழியை அறிவியல் பார்வையோடு அணுகி ஆராய்வது தான் இதன் நோக்கம். இன்றைய காலக்கட்டத்தில் மொழியை சிறப்பாகக் கற்பிப்பதற்கும், கற்பதற்கும், பாடநுால்கள், அகராதிகள் உருவாக்கத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும், கணினி தொடர்பான அனைத்து ஆய்வுகளுக்கும் மொழியியல் உதவுகிறது. பயன்பாட்டு மொழியியலின் ஒரு கூறான, 'தடய மொழியியல்' தளிர் நடை போட்டு வளர்ந்து வருகிறது. தடய அறிவியல் பற்றி எல்லாரும் அறிவோம். கொலை நடந்த இடத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள், ரத்தம், கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் போன்றவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்தி துப்பு துலக்குவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் துணை நிற்பது தடய அறிவியல். இதைப் போன்றே இக்காலக்கட்டத்தில் தடய மொழியியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. தடய மொழியியல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது, பயனாகிறது என்பதைப் பற்றி இனிப் பார்க்கலாம்.
குற்றவாளிகள் ஏதாவது தடயத்தை தங்களை அறியாமல் விட்டுச் செல்வர் என்பது காவல் துறையின் அழியாத கொள்கை; அசைக்க முடியாத நம்பிக்கை. பேசுகிற அல்லது எழுதுகிற நடையில் பயன்படுத்தும் சொற்களில், வாக்கியங்களில் தடயம் கிடைக்கும் என்பது தான் இப்போதைய கொள்கையும், நம்பிக்கையும்.

வாக்குமூலம் : முதன் முறையாக, 1968ல், பேராசிரியர் ஜான் ஸ்வார்ட்விக் என்பவர், தடய மொழியியலை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். திமோத்தி ஜான் இவான்ஸ் என்பவர் தம் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து விட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, 1953ல் இங்கிலாந்தின் மையக் குற்றவியல் நீதிமன்றத்தால் துாக்கு தண்டனை பெற்றார்.
கடந்த, 1960ல் திரும்பவும் இந்த வழக்கு எடுக்கப்பட்டு, அவர் கொடுத்த வாக்குமூலத்தைப் பேராசிரியருக்கு கொடுத்து ஆய்வு செய்யச் சொன்னபோது தான், அந்த வாக்குமூலத்தில் எழுத்து மற்றும் பேச்சு ஆங்கிலத்தில் இருப்பதையும், வேண்டும் என்றே அது தயாரிக்கப்பட்டு இருப்பதையும் நிரூபித்தார். நிரபராதி தண்டிக்கப்பட்டு விட்டாரே! ஆனால், புதியதொரு துறை வளர்வதற்கு அது துணை நின்றது. ஒருபுறம் மொழியும், மறுபுறம் சட்டமும் இணைந்து வழக்குகளை ஆராயும் முறையே, 'தடய மொழியியல்.' அதாவது, மொழியியல் அறிவு, அதன் ஆய்வு முறைகள், குறிக்கோள்கள் எல்லாம் சேர்ந்து, தடயச் சட்டம், மொழி, குற்றம் மற்றும் குறுக்கு விசாரணை, வழக்கு, நீதிமன்ற வாதங்கள், குற்றவாளிகளை கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படுவதே, தடய மொழியியலின் நோக்கமாகும்.
நான்கு எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம். சம்பவத்தில் வரும் நபர்கள் மற்றும் ஊர்ப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. முதலாவதாக, ஒருவர் ஒரு நாள் தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு ஓடி வந்து, 'சார், என்னோட தங்கச்சிய யாரோ கொலை செய்து வயலில் வீசியிருக்கிறாங்க; வந்து பாருங்க சார். பாவிங்க எதுக்குக் கொன்றாங்க'ன்னு தெரியலே சார்' என்று முறையிட்டார். போலீசாரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, எல்லா வழிகளையும் பின்பற்றியும் கொலையாளியைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த உதவிக் கமிஷனருக்குப் பொறி தட்டியது. 'யாரோ கொலை செய்து வயலில் வீசியிருக்கிறாங்க' என்று முறையிட்ட அண்ணனுக்கு, இது கொலை என எவ்வாறு தெரியும்? அண்ணன் பிடிபட்டார். இரண்டாவதாக, திருநெல்வேலியில் ஒரு கல்லுாரியில் உதவிப் பேராசிரியராக இருந்த செந்தில்வேலன், காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டு, அறிக்கை ஒன்றை எழுதிக் கொடுத்தார்.

விசாரணை : அதில், 'என் மனைவியை இரண்டு நாட்களாகக் காணவில்லை; என்ன ஆனாள் என்றே தெரியவில்லை. ஐயா, அவளை எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டாள்; தயவு செய்து கண்டுபிடித்து தாருங்கள்...' என, முறையிட்டிருந்தார். அவருடைய கைபேசி, அவர் மனைவியின் கைபேசி இரண்டையும் அலசி ஆராய்ந்தபோது, அவருடைய மனைவியும், அவரும் பாளையங்கோட்டைக்கு வந்திருந்தது தெரியவந்தது.'ஐயோ, அவளை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாள்' என, எப்படி உறுதியாகச் சொல்கிறார் என்ற ஐயமும் வந்தது. பின்னர் விசாரணையின் போது, கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் தன் வாக்குமூலத்தில், 'நான் மட்டும் தான் கொலை செய்தேன்' என, மூன்று இடங்களில் கூறியிருந்தார். அந்த வாக்குமூலத்தின் வாயிலாக அவருடைய காதலியும் பிடிபட்டார். பிறகு என்ன? தண்டிக்கப்பட்டனர். மூன்றாவது வழக்கில், செல்வி என்ற பெண்ணை அவருடைய மாமாவும், அத்தையும் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டனர்.
பிடிபட்ட பிறகு, அவர் தம் வாக்குமூலத்தில், 'நீ தான் உன் அப்பனை துாண்டி விடுகிறாயா. நான் உன்னை கொல்லாமல் விடமாட்டோம்' எனச் சொன்னதாக ஓர் இடத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தம் மனைவியை காப்பாற்ற நினைத்தவர், 'நான்' என எழுவாயையும், 'கொல்லாமல் விடமாட்டோம்' எனப் பயனிலையிலும் உளறி எழுதியது / கூறியது, இருவரையும் கைது செய்து தண்டனை வாங்கித் தர ஏதுவானது. நான்காவது, சேலத்தில் ஒரு கொலை வழக்கு; எந்த விதமான துப்பும் துலங்காமல் போலீஸ் திணறியது.
ஒரு நாள், 'சார், அன்று அந்த வீட்டிற்கு வந்தவர்கள் பேசிய பேச்சு தமிழாக இருந்தாலும், மலையாளம் போலவும் இருந்தது' என்று, பக்கத்து வீட்டுக்காரர் கூற, காவல் துறைக்கு கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கின் நினைவு வர, குற்றவாளிகள் பிடிபட்டனர்.
ஆக, குறிப்பிட்ட நான்கு கொலை வழக்கிலும், குற்றவாளிகள் பயன்படுத்திய மொழியே அவர்களை காட்டிக் கொடுத்தது. தடய மொழியியல் இந்த வழக்குகளில் பயனாவதைத் தெளிவாக உணரலாம்.
இவற்றைப் போலவே, வழக்கின் செயல்பாடு, குறுக்கு விசாரணை, காவல் துறையின் புலன் விசாரணை, சாட்சிகளின் வாக்குமூலங்கள், நீதிமன்றத்தின் தீர்ப்புகள், நீதிபதியின் கட்டளைகள், நீதிமன்றத்தில் காவல் துறை கொடுக்கும் அறிக்கைகள்.

எளிதில் தீர்வு : கைபேசி அழைப்புகள், பணத்திற்காக ஆள் கடத்திவிட்டுப் பேசும் பேச்சுகள், தற்கொலை குறிப்புகள் / கடிதங்கள். 'சைபர் கிரைம்' என்னும் இணையவழிக் குற்றங்கள் போன்ற எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் மொழியின் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடித்து தண்டிப்பதற்கு, தடய மொழியியல் பெரிதும் துணை செய்யும். போலீஸ் விசாரணையின் போதும், நீதிமன்றத்தில் நடக்கும் போதும் நடவடிக்கைகளை ஒலி - ஒளி காட்சிப் பதிவுகள் நடத்தினால், பெரும்பாலான வழக்குகளின் சிக்கல்களை எளிதில் தீர்த்துவிடலாம்.
இந்தியா போன்ற பன்மொழி பேசுகிற நாடுகளில் மட்டுமல்ல, மாநிலங்களிலும் வளர்ந்து வரும் இத்துறை மிகவும் பயனாகும் என்பதில் ஐயமே இல்லை.

-- முனைவர் ந.விசயன் -

கட்டுரையாளர், இந்திய பல்கலைகழகங்களில் முதன்முறையாக தடயமொழியியலில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் மொழியியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழக மொழியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். மொபைல் எண் : 95660 60804

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • kandhan. - chennai,இந்தியா

    அருமையான தகவல் மொழி தடயவியல் படிப்பவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும், இக்கட்டுரையை வெளியிட்ட தினமலருக்கு நன்றி கந்தன் சென்னை

  • N.Nadaraja Pillai - Mysuru,இந்தியா

    மிக அருமையான தகவல். இப்படி ஒரு துறை இருப்பதையே இப்போதுதான் அறிவோம். இன்னும் செய்திகளைத் தந்திருக்கலாம். இன்னும் இதைப் பற்றிய பல்வேறு விளக்கங்களும் தேவை. மொழியியல் பற்றிய வேறு கட்டுரைகளும் படிக்க ஆசை. மொழி/தமிழ் கற்பிப்பதற்கு எவ்வாறு உதவும் என்றும் அறிய ஆவல். தடய மொழியியல் பற்றிக் காவல்துறை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். பதிப்பாசிரியருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். தினமலரின் மொழிநடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement