Advertisement

இது உங்கள் இடம்

தும்பை விட்டு வாலை பிடிக்க கூடாது!

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவை மத்திய அரசு இதுவரை, ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை; இதில், மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மத்திய அமைச்சர்கள் பலரை சந்தித்து, கோரிக்கை வைத்தனர், தமிழக அமைச்சர்கள். ஆனால், 'நீட் தேர்வை நடத்தியே தீர வேண்டும்' என, உறுதிபட கூறி விட்டது, உச்ச நீதிமன்றம். மேலும், தமிழக பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு என்ற அரசின் கொள்கைக்கு, உச்ச நீதிமன்றம் முற்றிலும், தடை விதித்து விட்டது.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், 'நீட்' தேர்வை எதிர்ப்பதில் மட்டுமே, தமிழக ஆட்சியாளர்கள் குறியாக இருப்பதையும், நீதிமன்றம் வன்மையாக சுட்டிக் காட்டியிருக்கிறது.
தமிழகத்துக்கு, 'நீட்' தேர்வில் இருந்து, ஓராண்டுக்கு விதிவிலக்கு அளித்து, இனி வரும் ஆண்டுகளில், 'நீட்' தேர்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி இருந்தது, மத்திய அரசு.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல, பாடத் திட்டத்தை மாற்றுவதிலும், 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதிலும் கவனம் செலுத்தவில்லை. மருத்துவ படிப்பிற்காக, கடைசி கட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிறது, தமிழக அரசு.

'நீட்' தேர்வு விவகாரத்தில், இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. மருத்துவர்களாக இருந்து அரசியலுக்கு வந்த, விஜயபாஸ்கர், ராமதாஸ், அன்புமணி போன்றோர் கூட, தகுதித் தேர்வின் முக்கியத்துவத்தை உணராமல் இருப்பது
துரதிர்ஷ்டவசமானது.

தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக, துணிந்து குரல் கொடுக்கும் ஒரே அரசியல்வாதி, புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், மருத்துவருமான கிருஷ்ணசாமி மட்டும் தான்!அனைத்து மாநிலங்களும், 'நீட்' தேர்வை ஆதரிக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே, கிராமத்து மாணவர்கள் படிப்பதை போலவும், பிற மாநிலங்களில், கிராமத்தில் மாணவர்களே இல்லாததை போலவும், இங்குள்ள அரசியல்வாதிகள் நாடகமாடுகின்றனர்.

மாணவர்கள் நலனில் அக்கறை உள்ளது போல், பூச்சாண்டி காட்டுவதை விடுத்து, கல்வியின் தரத்தையும், அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளையும் ஆட்சியாளர்கள் உயர்த்த வேண்டும்.அகில இந்திய அளவில், நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் எளிதில் போட்டியிடும் அளவுக்கு, தகுதியை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்!

மேட்டூரையும்'பிளாட்' போட்டுவிற்று விடுவர்!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'காவிரி நீரை, தமிழகத்திற்கு திறந்து விடக் கூறி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.'மேட்டூர் அணை போன்ற நீர்த்தேக்கங்கள் இருக்கும் போது, அதில் அதிகளவு நீரை தேக்கி வைக்க, ஏன் முயற்சி எடுக்கவில்லை?

'நீரை சேமித்து வைத்திருந்தால், வறட்சி காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பதில், தமிழக அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை? நதி நீர் தொடர்பான விவரங்கள் குறித்து விளக்குவதற்கு, வல்லுனர் குழுவை அழைத்து வர வேண்டும்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி, உத்தரவிட்டனர்.

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடக அரசு காவிரியில் நீரை திறந்து விட வேண்டும் அல்லது நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய வேண்டும். கர்நாடக அரசு திறந்து விடும் தண்ணீர், பாசனத்திற்கே போதவில்லை.ஏரி, குளம், குட்டை, கால்வாய், ஓடை, கிணறு என, அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து, வீடுகள் கட்டினால், எப்படி மழைநீர் சேமிக்க முடியும்!

கட்டடங்கள் கட்ட மணல் தேவை; ஆறுகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் மணல் அள்ள முடியாது. அதனால் தான், தண்ணீர் தேங்குவதை இங்கு பலரும் விரும்புவதில்லை,கடந்த, 1960களில் சென்னையில் ஒரே ஒரு, எல்.ஐ.சி., கட்டடம் மட்டுமே உயரமாக இருந்தது. 2015ல், எல்.ஐ.சி., கட்டடத்தை விட, இரண்டு, மூன்று மடங்கு உயரமான கட்டடங்கள் உருவாகி, வானளாவ நிற்கின்றன.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதால், குடிநீருக்கு இன்று பஞ்சம் வந்து விட்டது! தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளது, தமிழக அரசு. ஆனால், நீர்நிலைகளை பாதுகாப்பதில் அக்கறை எடுக்கவில்லை.இதே நிலை நீடித்தால், மேட்டூர் அணையையும் துார்த்து, 'பிளாட்' போட்டு சமூக விரோதிகள் விற்று விடுவர்!

கமலுக்குஇதெல்லாம்தெரியாதா?

ஆர்.சேஷாத்ரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்:
'மற்ற மதங்களில் உள்ள குறைபாடுகள் தெரியாது; ஹிந்து மதத்தில் உள்ள குறைகள் தான் அதிகம் தெரியும். ஏனென்றால், அதை தான் நிறைய படித்துள்ளேன்' எனக் கூறியுள்ளார், நடிகர் கமல்.

'அதற்காக, அது சம்பந்தமான புத்தகங்களை மற்றவர்கள் படிக்க வேண்டாம்; சாதாரணமாக நடைமுறையில் பார்த்தால் தெரியும். ஹிந்துக்களின் அலகு குத்தல், தீ மிதித்தல் ஆகியவை மூட நம்பிக்கைகள் தான்' என, சொல்கிறார் போலும்!மொஹரம் பண்டிகை அன்று, முஸ்லிம் இளைஞர்கள், தங்களை கத்தியால் குத்தி கொள்கின்றனர்; உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டுகிறது. பாகிஸ்தானில், 'என் சிறிய பையன், மொஹரம் பண்டிகையின் போது, உடலை கீறி இறந்து விட்டான்' என, ஒரு தாய் பேட்டி கொடுத்துள்ளார்.

கிறிஸ்தவ மதத்தில், 'பெந்தகோஸ்த்' என்ற பிரிவினர், உடல்நிலை சரியில்லை என்றால், மருந்து, மாத்திரை கூட சாப்பிடுவதில்லை. நோய் தீர, மருந்து உண்ணாமல் இறக்கின்றனர்; இது, கமலுக்கு தெரியுமா?
எல்லா மதத்திலும் கொஞ்சம் மூட நம்பிக்கைகள் இருக்கும். ஏனெனில், எல்லா மதங்களும் பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. மற்ற மதங்களை விட்டு விட்டு, ஹிந்து மதத்தை மட்டும் ஏன், கமல் போன்றோர் துாற்ற வேண்டும்?

மதச்சார்பற்ற வகையில் பேசுவோர் எல்லாம், எல்லா மதங்களிலும் உள்ள நன்மை, தீமைகளை பேசினால் ஏற்றுக் கொள்ளலாம். ஹிந்து மதத்தின் மீது மட்டும் பாய்வதால், மதச் சார்பற்ற தன்மையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?கமல் போன்றோர் இனியாவது புரிந்து பேச வேண்டும்!

இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலானவற்றில், வைணவ தெய்வத்தை பற்றி, எதாவது ஒரு பாடலாவது அல்லது வரியாவது கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்; உன்னிப்பாக கவனித்தால் இது தெரியும்.கமல் மொழியில் சொல்வதென்றால், 'போலி வேடம் தவிர்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  கமல் தம்மை பகுத்தறிவாளராக காட்டிக்கொள்ள முயல்கிறார், உண்மையான பகுத்தறிவாளராக இல்லை, நம்ம ஊர் பகுத்தறிவாளராக. அது போலியில்தான் போய் முடியும் என்பதை சொல்லத்தேவையில்லை.

 • தலைவா - chennai,இந்தியா

  சேஷாத்திரி கமல் அவருடைய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை களையாமல் அடுத்தவர் மதத்தை விம்சிக்க முடியாது? அவரவர் மதத்தைத்தான் விமரிசிக்க முடியும்.

 • C,.Nehru - dindigul,இந்தியா

  சார், இன்று (14-8-2017) முதல் பக்கத்தில் மனதை வருடும் வகையில் இருந்தது. கண்ணீர் பக்கத்தில் கிரிக்கெட் களிப்பு நியாயமா? தங்கள் நீண்ட நாள் வாசகன் என்று சொல்ல வருந்துகிறேன் தங்கள் உண்மையுள்ள சி.நேரு, வேடசந்தூர்

 • Darmavan - Chennai,இந்தியா

  கமல் ஒரு ப்ராமண வகுப்பில் பிறந்தாலும் நாஸ்திகம் பேசும் துரோகி... சொந்த மண வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாதவர். அந்த புத்திதான் பொது வாழ்க்கையிலும் வரும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement