Advertisement

மரபணு கடுகு மீண்டும் நம் கதவை தட்டுகிறது-

ரபணு கடுகு, மீண்டும் நம் கதவை தட்டுகிறது. இம்முறை நீதிமன்றத்தில் அபாய கட்டத்தில் கிடக்கிறது. ஏனென்றால், மக்களுக்கு ஒவ்வாத, மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தடுக்கும் வகையிலான, அரசியல் ரீதியாக துணிச்சலாக முடிவெடுக்க, மத்திய அரசால் முடியவில்லை.
நீதிமன்றத்தில், 2005ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் மரபணு பற்றிய வழக்கில், இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம், ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைத்தது.
அவர்களின் இறுதி அறிக்கை, பல கேள்விகளை எழுப்பியது; மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின், மரபணு பொறியியல் ஒப்புறுதி குழுவின், கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை பற்றி நம்பிக்கையின்மையை தெரிவித்தது.
'நம் நாட்டில் தோன்றிய பயிர்களுக்கு, அந்த பயிரின் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது; பத்து ஆண்டுகளுக்கு களப்பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும்; தேர்ந்த நடுநிலை அறிஞர்களை வைத்து ஆய்வு நடத்த வேண்டும்; உயிரி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்' என்றெல்லாம் கூறி, முடிவாக, 'இது நம் நாட்டிற்கு தேவை இல்லை' என, திட்டவட்டமாக
அறிவித்தது.
முக்கியமாக, களைக்கொல்லிகளை தாங்கும் பயிர்களை விடவே கூடாது என்றது.
சமீபத்தில் காலமான, விஞ்ஞானி புஷ்பா பார்கவா, நாட்டின் மரபணு தொழில்நுட்பத்தின் தந்தை என, அறியப்படுபவர். அவர், 'இவை வேண்டவே வேண்டாம்' என்றார். அதற்கான முக்கிய காரணங்கள்:
● உயிரி பாதுகாப்பு சோதனைகள் போதாது
● ஆய்வுகளில் ஒழுங்குமுறை
சரியில்லை
● இது இன்னும் நிலையற்ற தொழில்நுட்பம்
● ஒருமுறை உயிரில் (வெளியில்) கலந்து விட்டால், எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
வெளியிலிருந்து ஒரு தாவரத்துக்குள், அல்லது வேறு உயிர்ப் பொருளுக்குள் புகுத்தப்பட்ட மரபீனி, எந்தெந்த வகைகளில் அத்தாவரத்துடன் இணையும் அல்லது இணையாது என்பது பற்றிய நமது அறிவு மிகவும் குறைவே. எனவே நாம், அபாயகரமான, புரியாப்புதிரான, ஒரு ஆற்றலுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பது திண்ணம்.
தாவரங்களில் நுழைக்கப்படும் பல்வேறு மரபணுகள், எந்தப் புழு, பூச்சியினங்களுக்கு எதிராக நுழைக்கப்படுகிறதோ அவை மட்டுமின்றி, வேறு உயிரினங்களையும் பாதிப்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் உயர்மட்டக் குழுவின் அறிக்கையிலும், திட்டவட்டமாக, 'இந்த மரபணு பயிர்களும், உணவும் நமது நாட்டிற்கு தேவை இல்லை; களப்பரிசோதனை கூட அறவே தேவை இல்லை' என்றே குறிப்பிட்டுள்ளன.
களைகொல்லியை தாங்கும் பயிர்களை அனுமதிக்கப்படவே கூடாது என்றும் எச்சரித்தது.
ஏன் அப்படி கூறியது?
களைகொல்லிகளை தாங்கக் கூடியது என்றால், கொடிய விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை மொத்தமாக ஒரு நிலத்தில் அடித்தால், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மட்டுமே தாங்கி நிற்கும்; மற்ற பயிர்களெல்லாம் சாகும்.
மேலும், 'க்ளூபோசினேட்' என்ற களைக்கொல்லி, எப்பேர்பட்டது என, நாம் முன்பே பார்த்திருக்கிறோம். 'பேயர்' என்ற பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் தான் இதன் உற்பத்தியாளர்; காப்புரிமையும் அவர்களிடமே உள்ளது.
பல கொடிய விஷங்களை, நிலத்திலும், காற்றிலும், நீரிலும் ஏற்படுத்தும். மிகக் கொடிய பின் விளைவுகள் நிறைந்தது. நம் சாப்பாட்டு தட்டு வரை வந்து, பல உடல்
உபாதைகளை உண்டாக்கும்.
மேலும் நிலத்தின் நுண்ணுயிரிகளை கொன்று, மண்ணை மலடாக்கும்; பின், பயிர்கள் விளைவிப்பது மிகவும் கடினமாகும்.
விதைகள் ஏற்கனவே மீண்டும் முளைக்காதவாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் மீண்டும் அதே நிறுவனங்களிடமே, ஒவ்வொரு ஆண்டும் விதை வாங்கி, அவர்களை கொழுக்க வைக்கும்.அதன் படி, ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு முறையும், பெரிய சந்தையாக, அந்த நிறுவனம் உருவெடுக்கும்.
'க்ளைபோசேட்' எனும் மற்றொரு களைக்கொல்லிக்கு, புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை உள்ளது என, ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஆய்வு தெரிவிக்கிறது. அதை மேற்கோள் காட்டி, பல நாடுகளும் அந்த, மொன்சான்டோவின் களைக்கொல்லியை தடை செய்துள்ளன.
முக்கியமாக, நம் நாட்டில் அது பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. களையெடுக்கும் பெரும்பாலான பெண்கள் அகற்றப்படுவர். அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்கள் சம்பாதிக்கும் அற்பமான பணத்தை கூட
இழக்க நேரிடும்.
அப்படிப்பட்ட களைக்கொல்லிகளை தாங்கும் திறன் படைத்த மரபணு கடுகு தேவையா?
மத்திய அரசின், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு என்ன செய்தது... முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது.
இது, களைக்கொல்லிகளை தாங்கும் பயிர் என்பதை கூறாமல் மறைத்தது; மறுத்தது. எப்படியேனும் பொய் சொல்லி, அவசரமாக பொது விற்பனைக்கு கொண்டு வர வேண்டுமாம்!
இந்த அரசும், தன் அட்டர்னி ஜெனரல் மூலம், நீதிமன்றத்தில், மரபணு கடுகு, களைக்கொல்லிகளை தாங்கும் பயிர் என்பதை மறைத்து, பொய் சொல்லி இருக்கிறது.
அவர்களது வாதம், பொய் தான். இது, களைகொல்லியை தாங்கி வளரக் கூடியது என, தெரிந்த பின், அதன் உபயோகத்தையும், அதீத தெளிப்பையும், அதனால் வரும் கேட்டையும் யார் கண்காணிப்பர், யார்
தடுப்பர்?
எப்படியேனும், இதை நம் சாப்பாட்டு தட்டில் திணிக்க என்ன காரணம் இருக்க முடியும்?
மண்ணுக்கு, மக்களுக்கு, மாக்களுக்கு, தேனீக்களுக்கு, அடுத்த தலைமுறைக்கு, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு, விதை இறையாண்மைக்கு, பனமயத்திற்கு, எல்லாவற்றிற்கும் கேடு மட்டுமே விளைவிக்கும், இத்தகைய ஒரு தொழில் நுட்பம்.
மேலும், இதிலிருந்து வரும் மரபணு கடுகு ஏன் வேண்டும், மரபணு மாற்று பயிர்கள், நம் நலனுக்கு எதிரானவை அல்ல என, இதுவரை நம் விஞ்ஞானிகள் நிரூபிக்கவில்லை.
மரபணு வளர்ப்பு நுட்பங்கள் மூலம் மரபணுக்களை உருவாக்க, 15 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. வழக்கமான இனப்பெருக்க நுட்பங்கள், பத்து லட்சம் டாலர்களுக்குள் அடங்கும்.
எது சிறந்தது? எதற்காக நாம் இவ்வளவு ஆபத்து நிறைந்த இந்த மரபணுக்களை ஊக்குவிக்க வேண்டும்?
மரபணு மற்றப்பட்ட கடுகின் மரபு பரவலாக்கத்தை தடுப்பது இயலாத காரியமாகும். இது, இயற்கை வழி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும். மேலும், பல மாநில அரசுகள் மரபணு பயிர் மற்றும் உணவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிக நுகர்வு மாநிலங்களான ராஜஸ்தான், பீஹார், பஞ்சாப் ஆகியன, மரபணு வேண்டாம் என்ற தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
பீஹார், டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள், மரபணு வேண்டாம் என, மத்திய அரசுக்கு எழுதியுள்ளன.
ஆம்... அவற்றுள் பல, மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் ஆட்சி நடக்கும் மாநில அரசுகளே!
இது வெறும் கடுகினை பற்றி மட்டும் அல்ல. இதன் பின், சோளம், நெல், கோதுமை, கம்பு, துளசி, அஷ்வகந்தா வரை, 50க்கும் மேல் கொண்டு வர துடிக்கிறது, சில
நிறுவனங்கள்.
நம் நாட்டையும், நமது உணவு பாதுகாப்பிற்கும், நமது பொருளாதாரம் முன்னேறவும் தான் அவர்கள் இதை செய்கின்றனரா?
இதை முன்னிறுத்தும் சிலர், அந்த நிறுவனங்களின் லாபத்தில் பங்கு, ஏதேனும் ஒரு வழியில்
கிட்டுபவராக மட்டுமே இருப்பர்.
இது, ஏதோ அறிவியல் மூலம் நமக்கெல்லாம் கிட்டிய, ஒரு பெரும் வரம் போல நினைக்கின்றனர். அவர்கள், வெறும், பொன்னுக்கு பாட்டெழுதும் நவீன புலவர்கள். அவர்கள், இதனை வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு வர முயலுவதில்லை.
நடுநிலை விஞ்ஞானிகளால் ஆய்வு செய்ய விடுவதில்லை. வேறு, விலை குறைந்த, நீடித்து நிலைக்கும் தன்மை கொண்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத, விவசாயிகளுக்கு எளிதான, ஏதுவான மாற்று உண்டா என, பார்ப்பதில்லை. வெளியே
சொல்வதில்லை.
ஏனென்றால், இந்த தொழில்நுட்பத்திற்கு தான் இன்று உலகளவில் பெரும் பணம், ஆராய்ச்சிக்கு கொட்டப்படுகிறது. அதுவும் ஏன் என்றால், இதில் ஈடுபட்டுள்ள வெகு சில பகாசுர நிறுவனங்களின் பெரும் லாபத்திற்காக மட்டுமே.
இந்த மரபணு கடுகிற்கு பதிலாக, அதிக மகசூல் தரும் மாற்றுகள் உண்டா... உண்டு!
அதுவும், ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், மத்திய அரசின், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களிலும், கடுகு ஆராய்ச்சி நிலையங்களில் செய்த பரிசோதனைகளிலிருந்தே இதற்கு தீர்வு உள்ளது.ஆனால், அவை எல்லாம் மறைக்கப்பட்டுள்ளன.
நாம் அவற்றை தகவல் உரிமை சட்டம் மூலமே பெற்றோம். அவர்கள் கூறும், 25 சதவீத உயர்வு, இன்றைய ரகங்களுடன் ஒப்பிட்டு அல்ல, 40 சதவீதம் வரும் பிந்தைய ஒரு ரகத்துடன், ஒப்புக்கு ஒப்பிட்டு.
இப்படி தான் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என, பொய் சொல்லி வரும் போது பல குறுக்கு வழிகளையும் நேர்மையற்ற, அறமில்லா வழிகளில் வரும்.
அட, நம், செம்மை வேர் சாகுபடி செய்தாலே, பன் மடங்குக்கு மேலே கிட்டும் என, பல இயற்கை வேளாண் குழுக்களும் கூறுகின்றன.
மத்திய அரசின், ஐ.சி.ஏ.ஆர்., ஆய்வுகளில், 45 சதவீதம் முதல், 130 சதவீதம் வரை, மகசூல் உயர்வு, செம்மை வேர் சாகுபடி மூலம் கிடைத்துள்ளது உறுதியாகிறது. ஆம், தரவுகள் தகவல் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டு நம்மிடம் உள்ளன.
www.indiagminfo.org என்ற இணையதளத்தில் இவை சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
வேறு பல பாரம்பரிய தொழில்நுட்பங்களும் உண்டு. அதுவுமில்லாமல், இன்றைய பல ஒட்டு ரகங்கள் இந்த மரபணு கடுகை விட, பன்மடங்கு மகசூல் கொண்டவை.
இருந்தும் ஏன் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகை நம் மீது திணிக்கின்றனர் என, ஆச்சரியப்படுகிறீர்களா?
பெரும் வியாபாரம்; கொழுத்த கொள்ளை லாபம்; அமெரிக்க/பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் தான். அதை மீற மக்கள் சக்தியால் மட்டுமே முடியும். நமது விழிப்புணர்வால் மட்டுமே.
ஆம்... பல மாநிலங்கள், பல கட்சிகள், விவசாயக் குழுக்கள், நுகர்வோர் சங்கங்கள், எல்லாம் எழுதியுள்ளன. தமிழகத்தில் இன்றைய அரசும், தி.மு.க., மற்றும் எல்லா அரசியல் கட்சிக்களும் தெளிவாக மரபணு தேவை இல்லை என தெரிவித்துள்ளன.
அதனால் பெருவாரியாக, மத்திய அரசுக்கும்,- பிரதமருக்கும், சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் நாம் எழுத வேண்டும். குறைந்தபட்சம், ஒரு தபால் அட்டையாவது போட வேண்டும். அல்லது 'டுவிட்டர் அல்லது பேஸ்புக்'கில் தொடர்பு கொண்டு, மரபணு மாற்றப்பட்ட கடுகு வேண்டாம் என, கூற வேண்டும்.
அதே நேரத்தில், ஏன் வேண்டாம் என, நாம் தெரிந்து, தெளிந்து, நம் சுற்றம், வட்டத்தில் இதை பரப்ப வேண்டும்.

அனந்துசூழலியலாளர் மற்றும்பாதுகாப்பான உணவிற்கானகூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement