Advertisement

இது உங்கள் இடம்

உதயம் கவனத்திற்கு!

வி.தமிழ் ஆசை, வாடிப்பட்டி, மதுரை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, உயர் பதவிகளுக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில், ஆங்கில மொழியில் பேசுபவர்களுக்கே, முன்னுரிமை வழங்கப்படுகிறது.தொடக்கப் பள்ளி முதல் உயர் கல்வி வரை, ஆங்கில பாடத்தை படிக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தொடக்க கல்வி முதலே கற்பித்தல் குறைபாடு அல்லது கற்றல் குறைபாடு காரணமாக, அப்பாடத்தை படிப்பதற்கு, மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவதில்லை.அறிவியல், மருத்துவம், வானியல், கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் உயர்ந்த அறிவையும், சிறந்த சிந்தனைகளையும் உருவாக்கக்கூடிய புத்தகங்கள் ஆங்கில மொழியில் உள்ளன. ஆங்கில மொழி அறிவை வளர்க்க வேண்டியது அடிப்படை தேவையாகி விட்டது.முதன்மை தேர்வை தமிழ் மொழியில் எழுதினாலும், வெற்றி பெறத் தேவையான புத்தகங்கள் ஆங்கில மொழியிலேயே அதிகமாக கிடைக்கின்றன. ஒரு சில அகில இந்திய தேர்வுகளில், அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள், மொழி பெயர்க்கப்பட்டு தரப்படுகிறது. அது, சரியானதாகவும், தெளிவானதாகவும் இல்லை.ஆங்கில பாடத்தை பயிற்றுவிக்க புதிய மாற்றங்களை, தமிழக பள்ளி கல்வித் துறை அமல்படுத்த வேண்டும். தற்போதுள்ள மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைத் தவிர, மற்ற பாடங்களை விரைவில் புரிந்து, நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும், கற்பிக்கும் முறைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. ஆங்கில மொழிப் பாடத்தை அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும், ஆங்கில மொழியில் இலக்கண பிழையின்றி எழுதவும், சரளமாக பேசவும் தெரியும் அளவுக்கு, கற்பித்தல் முறைகளில் மாற்றங்கள் தேவை. கவனத்தில் கொள்வாரா, பள்ளி கல்வித் துறை செயலர் உதயசந்திரன்!

எங்களை மீண்டும்நோகடிக்காதீர்!

கா.ரங்கராஜன், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர், (பணி நிறைவு), காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மிக அதிகம்' என, இதே பகுதியில், வாசகர்கள் பலர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.அரசு ஊழியர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் நடக்கிறது. ஏழாவது ஊதிய ஒப்பந்தப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்காக, நியமிக்கப்பட்ட குழு, இதுவரை அறிக்கை அளிக்கவில்லை; புதிய சம்பளமும் அமல்படுத்தப்படவில்லை.மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய ஒப்பந்தம் இன்னும் பேசி தீர்க்கப்படவில்லை.அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், பல கட்ட பேச்சுக்கு பின் முடிவாகிறது. ஆனாலும், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை. 33 ஆண்டுகளுக்கு மேல், பணி முடித்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே!அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மின் வாரிய, போக்குவரத்துக் கழக ஊழியர்கள், உரிய கல்வி தகுதியோடு, நியமனம் பெறுகின்றனர். பணியில் சேர்ந்து, 58 வயது வரை தொடர்ந்து உழைத்து ஓய்வு பெறுகிறோம். ஒப்பந்த காலவரையறை நிர்ணயித்து குழு அமைத்து, கருத்துகள் கேட்டு மசோதா நிறைவேற்றி, புது ஊதியம் வழங்க, அரசு ஆணை பிறப்பிக்கிறது.இந்த விதிமுறைகள் எல்லாம், எம்.எல்.ஏ.,க்களுக்கு பொருந்தாது போலும். மாதம், ௫௫ ஆயிரம் பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் இனி, ௧.௦௫ லட்சம் பெறப் போகின்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராடுகின்றனர்; அதை, எப்படி விமர்சனம் செய்ய முடியும்...சிறு வணிகர், கைவினைஞர், பழம் விற்போர், குடிசை தொழில் செய்வோர், சலுான்காரர், காய்கறி, மீன் வியாபாரிகள், பூக்கடைக்காரர் என, பல தொழிலில் ஈடுபடுவோர் உள்ளனர். அவர்கள் சம்பாதிக்கும் வருமானம், அரசு ஊழியர்கள் மாதச் சம்பளத்தை விட அதிகம்.எனவே, அரசு ஊழியர்களை நோகடிக்கும் வகையில், மீண்டும் மீண்டும் யாரும் கருத்து கூற வேண்டாம்!

'அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்தான்!'

அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'வாத்தியார் பிள்ளை மக்கு, போலீஸ் பிள்ளை களவாணி' என, கூறுவதுண்டு. ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் நடந்த, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில், 'அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்தான்' என, போற்றி புகழும் வகையில் நடந்தேறியது.ஆசிரியர்கள் பிள்ளை களில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கு செல்வோருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.அதிக மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களின் பிள்ளைகள், பெற்றோருடன் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். விழாவின், வி.ஐ.பி., யான, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன், 'அரசியல்வாதியாக இருந்தாலும், எம்.ஏ., (டெமோ), எம்.ஏ., (பொருளாதாரம்), எம்.பில்., - பி.எட்., - எம்.பி.ஏ., படித்து உள்ளேன். 'எனக்கு கல்வியில் ஆர்வம் இன்னும் குறையவில்லை. தற்போது ஒரு, 'டிப்ளமா கோர்ஸ்' படிக்கிறேன்' என்றார்.மயிலாடுதுறையில் நடந்த விழாவை, தமிழகத்தின் அனைத்து சங்கங்களும் பின்பற்றினால், மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்கலாம். ஆசிரிய, பெற்றோருக்குள்ளும் ஒருவித போட்டி உருவாகி, மாணவர்கள் இடையே கூடுதல் அக்கறை செலுத்துவோராக மாறுவர். இதன் மூலம், திறமைசாலிகள் இனம் காண வாய்ப்பு ஏற்படும்!சம்பள உயர்வு, சலுகைகளை பெற போராடும் ஆசிரியர்கள், கல்வித் தரத்தை உயர்த்தவும் பாடுபட வேண்டும். குறிப்பாக, காவலர் குடியிருப்புகளில், இதுபோன்ற விழாக்கள் நடத்தி, காவலர்களின் பிள்ளைகளும் படிப்பில் சாதிப்பர் என்பதை சமுதாயத்திற்கு காட்ட வேண்டும்!


ரசிகர்களை கோமாளி ஆக்காதீர்!
மா.செந்தில்குமரன், வேடசந்துார், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி சரியாக நடக்கவில்லை. விலைவாசி ஏற்றம், மணல் கொள்ளை, டாஸ்மாக் போராட்டம், எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என, தினமும் அறிக்கை விட்டு சாடுகிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்.போதாக்குறைக்கு, 'எல்லா அரசு துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது' என்றார், நடிகர் கமல். 'தமிழகத்தில், சிஸ்டமே சரியில்லை; அதை முழுவதும் மாற்றி அமைக்க வேண்டும்' என்றார், நடிகர் ரஜினி.இரு நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்தனர். ஆனால், ஒரு சில பேட்டிகளுடன் தன் பேச்சை நிறுத்திய ரஜினி, சினிமா படப்பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். பல வருடங்களாக அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என, ரஜினி குழப்பத்தில் இருந்தார்.எப்படியும் அரசியலுக்கு வந்து விடுவார் என தீர்க்கமாக ரசிகர்கள் நினைக்கும் போது, ரஜினி வாயடைத்து போய் விட்டார். அரசியல் பேச்சால் திடீர் அவதாரம் எடுத்த கமலுக்கு, ஆளும் கட்சி அமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.கமலோ அல்லது ரஜினியோ அல்லது இருவரும் இணைந்தோ உடனடியாக தெளிவான முடிவை தெரியப்படுத்த வேண்டும். கைதட்டி கைதட்டி உங்களை திரையுலகத்தில் உச்சாணி கொம்பில் அமர வைத்து, அழகு பார்க்கும் ரசிகர்களுக்காக விரைந்து முடிவு எடுங்கள்.இல்லை என்றால், 'அரசியலுக்குள் வர விருப்பமில்லை' என, திட்டவட்டமாக அறிக்கை விடுங்கள்; அதை விடுத்து, உங்களை வாழ வைத்த ரசிகர்களை, இனியும் கோமாளி ஆக்காதீர்கள்!

ஜெ., வழியில்நடப்போரைகுறை கூறாதீர்!

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கோடிக்கணக்கில், ஊழல் செய்து விட்டார். வருமான வரித் துறையின் சோதனைக்கு ஆளாகினார்...'குட்கா விற்பனையில் கோடிக்கணக்கில் கமிஷன் வாங்கினார். அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும்' என, போர்க்கொடி துாக்கியுள்ளார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்.'அ.தி.மு.க., மந்திரி களே... யாரும் லஞ்சம் வாங்காதீர்; ஊழல் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழாதீர்' என, ஜெயலலிதா ஒரு போதும், தன் சக அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்னதில்லை.ஊழல், லஞ்சத்தால் கோடி கோடியாக சம்பாதித் தார், ஜெயலலிதா. அப்படி இருக்கையில், அவரது அமைச்சர்கள் புடம் போட்ட தங்கங்களாக, புனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை.'அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., புனிதர்களாக வாழ்ந்திருக்கலாம். அதற் காக, நாமும் அப்படி வாழ முடியுமா...' என, சிந்தித்து நொந்து போனதால் தான், ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தார்; வைர, தங்க நகைகள் வாங்கிக் குவித்தார். சுதாகரனின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார்.சசிகலாவின் பிடியில் சிக்கிய ஜெயலலிதா, வழக்குகளை சந்தித்தார்; சிறை சென்றார். மக்கள் செல்வாக்கால் மீண்டும், ௨௦௧௬ல் ஆட்சியை பிடித் தாலும், அவர் மறைந்து விட்டார். அவரது இறப்பில் புதைந்துள்ள உண்மைகளை, இந்நாள் வரை யாரும் கண்டறிய முடியவில்லை.விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து, வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட தலைவர் கருணாநிதியின் தவப்புதல்வனின் கோரிக்கை நியாயம் தான்.ஜெயலலிதா காட்டிய பாதையிலும், சசிகலா அமைத்து சென்ற, 'அற நெறி'யிலும் பயணம் செய்கிறார், அமைச்சர், விஜயபாஸ்கர்; இதை அறியாத, ஸ்டாலின் அவரை பதவி விலக கூறுகிறார்.'கொள்ளையடிப்பதும் ஒரு கலை' என, 'டயலாக்' எழுதினார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அவரது ஆட்சிக் காலத்தில் ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடியதை சொல்லி மாளாது!அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள, காங்கிரஸ் கட்சியினர் மீது, போபர்ஸ் பீரங்கி வழக்கு, நிலக்கரி சுரங்க வழக்கு என, எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஊழல் செய்வது, லஞ்சம் வாங்குவது பாவம்... அதை சொல்லிக் காட்டுவது, அதை விட பெரிய பாவம்!

பலகை வைக்க நேரிடும்... உஷார்!

கே.பி.ஆர்.கோவிந்தராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடகா மாநிலத்தில், கன்னடத்தில் படித்தோருக்கு, கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.பெங்களூரில், பல் வேறு மாநிலத்தவர் பெருமளவில் வாழ்ந்து வந்தாலும், மொழி உணர்வு காரணமாக, கன்னடமே அங்கு பிரதானமாக பேசப்படுகிறது. வர்த்தக விளம்பரங்களிலும், கன்னடத்திற்கு அடுத்தே ஆங்கிலம் இடம் பெற்றுள்ளது,ஆனால், தமிழகத்தில் தமிழ் மொழியை எப்படியெல்லாம் சிதைக்க முடியுமோ, அந்தளவிற்கு ஆங்கிலம் கலந்து பேசி, குற்றுயிராக்கி வருகின்றனர்.கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், டில்லியில் சந்தித்தால், ஒருவருக்கொருவர் தங்கள் தாய் மொழியில் பேசிக் கொள்கின்றனர்; தமிழகத்தை சேர்ந்த, இரு அதிகாரிகள் பேசிக் கொண்டால் ஆங்கிலத் திலேயே பெரும்பாலும் பேசிக் கொள்கின்றனர்.தனியார், 'டிவி' ஊடகங்களில் அரைகுறை தமிழில், ஆங்கிலம் கலந்து பேசி தொகுப்பாளர்களும், மற்றவர்களும் செய்யும் கொடுமை காண சகிக்க முடியவில்லை.கடந்த காலங்களில், ஜெயலலிதா தலைமையில் நடந்த, கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், அவர் ஆங்கிலத்தில் தான் பேசி உள்ளார்.அண்டை மாநிலத்தை சேர்ந்த, அதிகாரிகள் பங்கேற்பதால், ஆங்கிலத் தில் கலந்துரையாடல் நடை பெற்றதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆங்கிலத்தில் பன் மடங்கு புலமைவாய்ந்த அண்ணாதுரை, தமிழகத் தில், ஒருபோதும் ஆங்கிலத் தில் பேச மாட்டார்.உயர் பொறுப்புக்களில் இருப்போர், தமிழ் மொழி மீது ஆர்வம் கொள்ள வேண்டும். 'தமிழுக்கென்று ஒரு பல்கலை அமைக்க வேண்டும்' என, ஆர்வம் கொண்ட, எம்.ஜி.ஆர்., தஞ்சை மண்ணில் தமிழ் பல்கலையை ஏற்படுத்தினார்.தமிழகத்தில், தமிழ் பேசுவதை தவிர்த்தால், வரும் காலங்களில் தமிழ் பற்றாளர்களின் இல்லம் முன், போயஸ் தோட்டத்து தமிழ் உணர்வாளர் முஸ்தபா வைத்துள்ள பலகையில் இடம் பெற்றுள்ள, 'தமிழில் பேசுவோம்' என்ற வாசகம் வைக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    கே.பி.ஆர்.கோவிந்தராஜ், நீங்க என் கணவர் எனக்கு சொன்னதை சொல்றேன் யோசித்து பாருங்க, வீட்டிலே ஒரு மொழிலயும் வெளியிலே தமிழ் மொழியும் பேசுபவர்கள்தான் (அதிகாரிகள்) பேசிக் கொண்டால் ஆங்கிலத் திலேயே பெரும்பாலும் பேசிக் கொள்கின்றனர், ஏனென்றால் அவர்களுக்கு தாய்மொழி வேறு , தமிழ் மற்றோரை ஈர்க்கும் மொழி அதாவது கருவி, முஸ்லிம்களை பாருங்க, பெரும்பாலும் ஹிந்தி திரைப்படங்களை மட்டுமே பார்ப்பார்கள், வீட்டிலேயும் ஹிந்தி/உருது தான், இவர்கள் வெளியிடத்தில் வந்தால் அஸ்லாமு அலைக்கும் என்றுதான் வேறொரு மொழியில் கூறுவார், அதே உங்களிடம் அமைதி நிலவட்டும் என்று தமிழில் கூறுவார்களா? வீட்டில் தெலுகு பேசுபவர்கள் வெளியில் ஒப்புக்காக தமிழ் பேசுவார், அவருக்கு ஏதோவொரு ஜாதி கோட்டாவும் வந்து விடும், அதுதான் பிரச்சனையே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement