Advertisement

அக்கம் பக்கம்

கோபம் தணியவில்லை!

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், தன் தந்தையுமான, முலாயம் சிங் யாதவின் கோபம் இன்னும் தணியாததால், கவலையில் ஆழ்ந்துள்ளார், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.உ.பி.,யில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்து, பா.ஜ., ஆட்சி அமைத்தது.தேர்தலுக்கு முன், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான், இந்த தோல்விக்கு காரணம் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.'இந்த தோல்விக்கு பின்பாவது, இருவரும் இணைந்து விடுவர்' என்று தான், அனைவரும் எதிர்பார்த்தனர். இதற்கான முயற்சிகளை, அகிலேஷ் யாதவ், அவ்வப்போது செய்தாலும், முலாயம் சிங் யாதவ், பிடி கொடுக்க மறுக்கிறார்.சமீபத்தில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ராம்கோபால் யாதவ், பார்லிமென்ட் உறுப்பினராக, 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்ததை கொண்டாடும் வகையில், அகிலேஷ் யாதவ், டில்லியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு, தன் தந்தை கண்டிப்பாக வருவார் என நம்பினார், அகிலேஷ். ஆனால், முலாயம் சிங் யாதவ், இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார்.இது குறித்து முலாயமிடம், அவரது நண்பர்கள் கேட்ட போது, 'சமாஜ்வாதியில் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணமே, ராம்கோபால் தான்; அவரது நிகழ்ச்சிக்கு நான் எப்படி போவேன்?' என, ஆவேசமாகி விட்டார் முலாயம். நண்பர்கள் வாயடைத்துப் போயினர்!

மறந்துடுவாங்களோ?

'காங்., துணை தலைவர் ராகுலை, அரசியலில் இருந்து அடியோடு விரட்டப் போவதாக, சபதம் செய்திருப்பாரோ...' என, உ.பி., முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத் பற்றி, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், உ.பி., மாநில அரசியல்வாதிகள்.ராகுல், உ.பி., மாநிலம், அமேதி தொகுதியிலிருந்து, லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். இந்த தொகுதியிலிருந்து அவர், மூன்று முறை, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன், இந்த தொகுதியிலிருந்து, ராகுலின் தந்தை ராஜிவ், சித்தப்பா சஞ்சய், தாயார் சோனியா ஆகியோரும், எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நேரு குடும்பத்தின் இரும்புக் கோட்டையாக, அமேதி திகழ்கிறது. இந்த கோட்டையை தகர்ப்பதற்கான அதிரடி வியூகத்தை வகுக்கும் பொறுப்பை, ஆதித்யநாத்திடம் ஒப்படைத்துள்ளது, பா.ஜ., மேலிடம்.அவரும், முழுவீச்சில் களத்தில் குதித்துள்ளார். அமேதி தொகுதியில், மத்திய அரசின் நிதி உதவியின் கீழ், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இதுதவிர, கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு, அதை இலவசமாக கட்டித் தருவதற்கான திட்டமும், அமேதியில் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது.'யோகியின் இந்த அதிரடி தொடர்ந்தால், அமேதி மக்கள், ராகுலை மறந்து விடுவர் போலிருக்கிறதே...' என, காங்கிரஸ் கட்சியினரே, பீதியுடன் கூறி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement