Advertisement

பக்க வாத்தியம்

இவர் சொல்றது புரியலையே...!
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற, த.மா.கா., தலைவர் வாசன் கூறுகையில், 'ரஜினி, கமல் மட்டுமல்ல; கலை, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட எந்த துறையைச் சேர்ந்த யாராக இருந்தாலும், ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வரலாம்; அது, அவரவர் விருப்பம். அவர்கள் கொள்கைகள் ஏற்கப்பட்டதா என்பது, மக்கள் போடும் ஓட்டுகள் மூலமே தெரிய வரும்' என்றார்.நிருபர் ஒருவர், 'ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை, இவர் வரவேற்கிறாரா, இல்லையா... தெளிவா சொல்ல மாட்டேங்குறாரே...' எனக் கேட்க, பக்கத்தில் இருந்த மூத்த நிருபர், 'இது தான் வாசன் ஸ்டைல்' என, 'கமென்ட்' அடித்தார்.
விவசாயிகளை கவர, தி.மு.க., 'ஸ்டன்ட்!'

திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, நீர் திறக்க, ஜூலை, 26ல், விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தி.மு.க.,வினர் சிலர், அணை முன் திரண்டு, புதிய ஆயக்கட்டுக்கு நீர் திறக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். அதிகாரிகள், 'அரசு உத்தரவு சிறிது நேரத்தில் கிடைத்து, புதிய ஆயக்கட்டுக்கும் நீர் திறக்கப்படும்' என தெரிவித்தனர்.உடனே, தி.மு.க.,வினர், தண்ணீர் குறைவாகச் செல்லும் ஆற்றுக்குள் இறங்கி, கோஷம் எழுப்பினர். இதைப் பார்த்த ஆளுங்கட்சியினர், 'போராட்டம் நடத்துறதா, 'ஸ்டன்ட்' அடிச்சு, தி.மு.க.,காரங்க, நல்ல பேர் வாங்கிட்டு போயிருவாங்க... இந்த அரசியல் நமக்கு தெரிஞ்சிருந்தா, மூன்று அணியா பிரிஞ்சு அடிச்சுக்க மாட்டோம்...' என புலம்பியபடி சென்றனர்.


எம்.ஜி.ஆருக்கு இப்படி ஒரு அர்த்தமா!

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, ஆகஸ்ட் 5ம் தேதி பெரம்பலுாரில் நடந்தது. முதல்வர் பழனிசாமி பங்கேற்ற இந்த விழாவில், எம்.பி., வைத்திலிங்கம் பேசுகையில், 'தன்னிகரில்லாத ஒரே தலைவர், எம்.ஜி.ஆர்., தமிழகத்துக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே ஒரே தலைவர், எம்.ஜி.ஆர்., தான்.'வறுமையில் வாடியபோதும், எம்.ஜி.ஆர்., மனம் தளரவில்லை. 'வறுமை வந்தால் வாடாதே; வசதி வந்தால் ஆடாதே' எனச் சொன்னவர், எம்.ஜி.ஆர்., ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் பெரம்பலுார் இருந்தபோது, பாப்பாக்குறிச்சியில் முதன்முதலாக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். 'எம்' என்றால் மஞ்சள், 'ஜி' என்றால் கோல்டு, 'ஆர்' என்றால் ரோஜாவை குறிக்கும். மங்களகரமான மூன்று நிறத்துக்கும் சொந்தக்காரர்' என்றார்.'எம்.ஜி.ஆருக்கு இப்படி ஒரு அர்த்தம் சொல்லிட்டார்... ஜெ.,க்கு ஒரு அர்த்தமும் சொல்லலியே...' என, தொண்டர்கள் கிசுகிசுத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement