Advertisement

சொல்கிறார்கள்

மக்களின் ஆதரவு, அன்பைமறக்க முடியாது!


இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர், வசந்தகுமாரி: என்னுடைய, ஒன்றரை வயதில், அம்மா இறந்து விட்டார். அப்பா, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், சித்திக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.பின், சித்தியின் தங்கையையும் திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் பிள்ளையை பெற்றெடுத்த பெருமையில், ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த சித்தி, அப்பா சொத்தில் கொஞ்சம், மூத்த சித்திகளின் பெண்களுக்கு கொடுத்து, மீதியை தானே வைத்துக் கொண்டார்.
என்னுடைய, 19 வயதில், ஏற்கனவே திருமணமான, நான்கு பெண் குழந்தைகள் உள்ள மாப்பிள்ளையை, திருமணம் செய்ய சம்மதித்தேன். எனக்கு, ஒரு ஆண், பெண் என, இரு குழந்தைகள் பிறந்தன.தற்போது, நெல்லை கழகமாக செயல்படும், அப்போதைய நேசமணி போக்குவரத்து கழகத்தில், ஓட்டுனராக, 1993ல் பணியில் சேர்ந்தேன். துவக்கத்தில், நகர பஸ், நிறுத்தமில்லா பஸ் என இயக்கி, பின், நாகர்கோவில் -- திருவனந்தபுரம் இடையே பஸ்சை இயக்கி வந்தேன்.இந்நிலையில், 'ஸ்ட்ரோக்' வந்து கணவர் இறந்து விட்டார். இந்த வேதனையில் தலைச்சுற்று வந்தது; பஸ் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.என் உடல் நிலையை கவனித்த மருத்துவர், சான்றிதழை கொடுத்து, ஆபீசில், இலகு பணி பார்க்க கூறினார். மருத்துவ சான்றிதழ் கொடுத்தும், 'முடியலைன்னா போ' என்றனர்.எனக்கு பின் சென்னையில், ஒன்றிரண்டு பெண் ஓட்டுனர்களுக்கு, இலகு பணி கொடுத்துள்ளனர்; ஆனால், எனக்கு மட்டும் தரவில்லை.இப்போது மருந்துக்கு அதிகமாக செலவாகிறது. இந்த மூன்று ஆண்டில், எந்த வருமானமும் இல்லாமல், அரசு ஆஸ்பத்திரிக்குத் தான் போகிறேன். இன்னும் ஐந்து மாதத்தில் ஓய்வு வந்துவிடும். அதுவரை, இந்த சம்பளம் இல்லாத விடுப்பைக் கழித்து விட்டால், பென்ஷனாவது கிடைக்குமே என, காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவும், 'பனிஷ்மென்ட், சஸ்பெண்ட்' என, 'சர்வீஸ்' எல்லாம் குறைத்து, என்ன தரப் போகின்றனரோ தெரியாது.முதல் பெண் டிரைவர் என்று பாராட்டி என்ன புண்ணியம்... என்னை வேலை செய்ய விடவில்லை. வேலை செய்த வரை, பொதுமக்கள் எனக்கு கொடுத்த ஆதரவும், காட்டிய அன்பும் மறக்கவே முடியாது. ஸ்டியரிங்கைப் பிடித்தால், எல்லா பிரச்னைகளையும் மறந்து விடுவேன்; பயணியரின் பாதுகாப்பு மட்டும் தான் மனதில்
இருக்கும்.என் எல்லா சோகத்துக்கு மத்தியிலும், என் கணவரின் நான்கு பெண்களுக்கு என்னால் முடிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளது சந்தோஷமாக உள்ளது; அது ஒன்று போதும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement