Advertisement

இது உங்கள் இடம்

மாஜிஸ்திரேட் ஜியாவுதீனுக்கு பெரிய வணக்கம்!


க.அருச்சுனன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தச்சு வேலைக்காக, மதுரையில் இருந்து, தாராபுரம் வந்த வாலிபர் ஒருவர், பஸ் ஸ்டாண்டில் பசி தாளாமல் அங்கும், இங்கும் அலைந்தார். வேறு வழியின்றி, அங்கிருந்த ஒரு கடையில் பன்னை திருடி சாப்பிட்டார். கடைக்காரர், வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.மறுநாள், நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் முன் வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்த விபரத்தை போலீசாரிடம் கேட்டார், மாஜிஸ்திரேட், ஜியாவுதீன். 'ஐயா, பசிக்காக, பன்னை திருடி விட்டான்' என, போலீசார் கூறினர். அதை கேட்டு கடுப்பான அவர், 'பசின்னு ஒரு பன்னை திருடி விட்டான்; அதுக்குப் போய் சிறையா' என்றார்.'இன்னும் புலன் விசாரணை முடியவில்லை' என்றனர், போலீசார். அதற்கு, மாஜிஸ்திரேட், 'இதிலே என்னய்யா இன்வஸ்டிகேஷன்' என்றார். வாலிபரை பார்த்த அவர், 'நேத்து காலை, ஒண்ணுக்கு, இரண்டுக்கு போனியா?' எனக் கேட்டார்.'ஆமாங்கய்யா போனேன்' என, வாலிபர் தலையாட்ட, 'அதெல்லாம் சரி, எங்க போன' எனக் கேட்டார், மாஜிஸ்திரேட். 'போலீஸ் ஸ்டேஷன்லே தான்யா' என, வெட்கத்துடன் சொல்ல, போலீஸ் பக்கம் திரும்பினார், மாஜிஸ்திரேட்.'அப்புறம் இதிலென்னய்யா இன்வஸ்டிகேஷன்; அவன் திருடின பன்னை, உங்க ஸ்டேஷன்லே இன்னைக்கு வேறு விதமா விட்டுட்டு வந்துட்டான். ஆக, திருடு போன, 'பிராபர்ட்டி ரிகவரி' ஆயிடுச்சில்ல. அப்புறம் எதுக்கு ஜெயில்' என, மாஜிஸ்திரேட் கேட்க, இன்ஸ்பெக்டரும், ஏட்டும் 'திருதிரு'வென முழித்தனர்.பசிக்கு திருடிய வாலிபருக்கு, பெரிய சைஸ் பன்னும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி தர, மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார். மேலும், சொந்த ஊர் திரும்ப, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.நீதி என்பது, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தேடும் சட்டப் புத்தகங்களில் இல்லை; இதயங்களில் தான் இருக்கிறது என, அனைவருக்கும் புரிய வைத்த, மாஜிஸ்திரேட்டிற்கு பெரிய வணக்கத்தை தெரிவிப்போம்!


இலவசங்களைஅடியோடுநிறுத்துங்கள்!

சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை, 5 லட்சம் கோடி ரூபாய்.அதில், நஷ்டத்துடன் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு, 81 ஆயிரம் கோடி ரூபாய். இலவச மானியங்கள் அறிவிப்பின் மூலம் அரசுக்கு இழப்பு, 28 ஆயிரம் கோடி ரூபாய்.இவற்றை எல்லாம், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை.சமீபத்தில் நடந்த சட்ட சபை தொடரில், விதி எண் - 110ல், பல்வேறு இலவச மானியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை, முதல்வர் அறிவித்தார்; அவற்றின் மதிப்பு, 28 ஆயிரத்து, 314 கோடி ரூபாய்.
எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்தியை போக்கும் வகையில், அவர்களின் சம்பளத்தை, 5௫ ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்ச ரூபாயாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுக்கான ஒதுக்கீட்டு நிதி, 2 லட்சத்தில் இருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சியில் விட்டுச் சென்ற கடன் சுமை, 97 ஆயிரம் கோடி ரூபாய். 2011ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, 'தமிழக அரசின் கஜானாவை, தி.மு.க., அரசு காலியாக்கி விட்டது' என்றார்.அ.தி.மு.க.,வின் தொடர் ஆட்சியில், ௩ லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி, மாநில அரசு தத்தளிக்கிறது. வாங்கிய கடனுக்கு மாதந்தோறும், 20 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டியுள்ளது.இனி நடக்கவுள்ள சட்டசபை தொடரில், ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். மாநில வளர்ச்சிக்கு தேவைப்படும் திட்டங்களை நிறைவேற்ற, எதிர்க் கட்சிகளுடன் சுமுகமாக, அரசு நடந்து கொள்ள வேண்டும்.
இலவச மானியங்களை அடியோடு நிறுத்தினால், கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது. ஓட்டை மறந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம்
அரசுக்கு இருக்கிறது!


வீண்வதந்திகளைநம்பாதீர்!


வை.ச.மோகன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: அன்று, உதயகுமார் என்பவரின் துாண்டுதலால், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடந்தது.கடந்த, 1980ல் துவக்கப்பட்ட கல்பாக்கம் அணுமின் நிலையம், எந்த பாதிப்பும் இன்றி செயல்படுவதை மறந்து, மக்களை மறக்க செய்து, பல அப்பாவி மக்களை ஒன்றிணைத்து போராடினார், உதயகுமார் என்பவர்.'கூடங்குளத்தில் அணு உலை அமையக் கூடாது' என, அண்டை மாநிலமான, கேரளாவும் வலியுறுத்தியது. போராட்டங்களை, மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கின.இன்று, 'கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தங்கள் மாநிலத்திற்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்' என, கோருகிறது, கேரளா; இதை எல்லாம் புரிந்து, மக்கள் போராட வேண்டும்.ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக, தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் போராட்டம் நடக்கிறது. சில அரசியல் கட்சி, இயக்கம், கல்லுாரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர்.ஓ.என்.ஜி.சி., நேற்று துவக்கி, இன்று ஆய்வு நடத்தவில்லை. பல ஆண்டுகளாக, டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது; நாகையில் உள்ள நரிமணம் அதற்கு சாட்சி!பல ஆண்டுகளுக்கு முன், டெல்டா மாவட்ட கிராமங்களில், ஓ.என்.ஜி.சி., ஆய்வு நடத்தியது; அதை யாரும் எதிர்க்கவில்லை.வட மாநிலங்களைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., ஊழியர்களுக்கு, கிராம மக்களே உதவி செய்துள்ளனர். இன்று, திடீர் போராட்டம் நடப்பதற்கு, சிலர் துாண்டுதல் தான் காரணம் என, தெரிகிறது.மக்களுக்கு துளியளவு பாதிப்பு இல்லாத வகையில் தான், மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை தீட்டுகின்றன.தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு, கதிராமங்கலத்தில் நன்கு ஆய்வு செய்து, 'மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது' எனக் கூறிய பின் தான், திட்ட நடவடிக்கைகள் நடக்கின்றன; வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
ஓ.என்.ஜி.சி., நன்மைகளை புரிந்து கொள்ளாமல், யாரோ சிலர் காசு ஆசைக்காக துாண்டி விடுவதை நம்பி, வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் புறக்கணிக்கக் கூடாது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement