Advertisement

சொல்கிறார்கள்

நம் நாடு தவறு செய்கிறது!



நிலத்தை பாதுகாக்க ஆலோசனை கூறும், சூழலியல் செயற்பாட்டாளர், பாமயன்: விவசாயம் அழிவதால், கிராமங்களும் அழிகின்றன. அதனால், மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், 52 சதவீதம் மக்கள், நகரத்தில் வாழ்கின்றனர். இதனால், நிலங்கள் அதிகம் மாசுபட்டு, மலடாகின்றன.
பசுமைப் புரட்சியும் கூட, நிலங்கள் அழியக் காரணம். தொடர்ந்து ரசாயனங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி பயன்படுத்தியதால், மண் வளம் படிப்படியாக குறைந்து, இன்று மலடாகி, அழிந்தே விட்டது.முன்பெல்லாம், வீட்டுக்கு அருகிலேயே தண்ணீரும், அடுப்பிற்கு எரிபொருளான விறகும் கிடைத்தது. இன்று வளர்ச்சி என்ற பெயரில், பல
கி.மீ., தண்ணீருக்காக அலைகின்றனர்.வீராணம் பகுதி தண்ணீர், அந்தப் பகுதி நிலங்களுக்கானது. ஆனால், அவற்றை குழாய் போட்டு, சென்னைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதி நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் அல்லல்படுகின்றனர். சென்னைக்கு தேவையான தண்ணீரை, அங்குள்ள நீர்நிலைகளை மீட்டெடுத்து, பாதுகாத்து பெறலாம்.
தமிழகத்தில் நிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில், தொழிற்சாலைகளுக்கு பெரிய பங்கு உண்டு. 10 ஆண்டுகளுக்கு முன், திருப்பூரில் சாயத் தொழிற்சாலைக்கு சென்றிருந்தபோது, சீன தொழில் வல்லுனரை சந்தித்தோம்.'சாயக்கழிவு பிரச்னையை உங்கள் நாட்டில் எப்படிச் சமாளிக்கிறீர்கள்' என, அவரிடம் கேட்டதற்கு, 'நாங்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பே, எல்லா சாயத் தொழிற்சாலைகளையும் மூடி விட்டோம்' என்றார். 'துணிக்கு என்ன செய்வீர்கள்...' என்றதற்கு, 'அதான் நீங்கள் தருகிறீர்களே' என்றார்.
சாயத் தொழிற்சாலை கழிவுநீர் கலந்து, நொய்யல் ஆறு, வைகை ஆற்றை முற்றிலும் அழித்துவிட்டோம்.பொதுவாக, தோல் பொருட்களை, குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் தான் அதிகம் அணிவர். ஆனால், அந்த நாடுகளில் தோல் தொழிற்சாலைகளே இல்லை. நாம் அதை வைத்து, நிலங்களை வீணாக்குகிறோம்.கார் தொழிற்சாலைகளும் அதுபோலத் தான். எதுவெல்லாம் உலகில் தடை செய்யப்பட்ட தொழிலோ, அது இந்தியாவுக்கு வருகிறது; இந்தியாவில் தடை செய்யப்பட்ட தொழில், தமிழகத்துக்கு வருகிறது.
இங்கு வேளாண்மை தான், அதிக அளவில் மக்களுக்கு வேலை வாய்ப்பை தருகிறது. அதனால், வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளைத் தான், இங்கு துவங்க வேண்டும். அது தான் விவசாயத்தையும் வளர்க்கும்; அனைவருக்கும் வேலை வாய்ப்பும் தரும்.நிலங்களை மேம்படுத்த வேண்டுமானால், இயற்கையை சிதைக்கும் தொழிற்சாலைகளை இங்கே அனுமதிக்கக் கூடாது; விளை நிலங்களில் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டை தவிர்த்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.அதுபோல், கட்டுமானத்தில் கூட அதிக மணல், சிமென்ட் பயன்படுத்தாமல் மரபார்ந்த கட்டுமானத்தை ஊக்குவிக்க வேண்டும். நிலவளம் கெட்டுப் போக எல்லாவற்றையும் விட முக்கியக் காரணம், பிளாஸ்டிக் தான். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தால் தான், நிலவளம் மேம்படும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement