Advertisement

இது உங்கள் இடம்

தேள், பூரானை தின்னும் கோழியை சாப்பிடுகிறோமே!


சி.துரைராஜ், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்: 'மீன் சாப்பிடுவோரே எச்சரிக்கை' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்து இருந்தார்; அவரது கருத்து தவறானது.பல ஆறுகளின் நீரும், கடலுக்குத் தான் செல்கிறது. வழி இடையில், ஆலைகளின் கழிவுநீர் ஆற்று நீரின் மூலமாகவும், சில தொழிற்சாலைகளின் கழிவுநீர் நேரிடையாகவும், கடலில் சேர்கிறது. இதுவரை, கடல் மீன்கள் சாப்பிடுவதால் உடல் நலக் குறைவோ, நோய் தொற்றோ ஏற்பட்டதாக, எந்த மருத்துவ அறிக்கையும் சொல்லவில்லை.அரசும் எச்சரிக்கை மூலம், 'கடல் மீன்களை சாப்பிட வேண்டாம்' என, அறிவிக்கவில்லை. மீன் உணவு எளிதில் ஜீரணமாகும். மீனை உப்பில் ஊற வைத்து, கருவாடாக்கி மாதக் கணக்கில் வைத்து சாப்பிடலாம்; யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது!
பல ஆலைகளின் கழிவுநீர் கலக்கும் கடல் நீரில் தான், உப்பு தயாரிக்கப்படுகிறது. உப்பை நேரிடையாகவும், சமைக்கும் உணவுப் பொருட்கள் மூலமாகவும் உடலுக்குள் செலுத்துகிறோம்; யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.கடலில் கழிவுநீர் கலப்பது, காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு; அதை தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகளை நாட்டுக் கோழி கொத்தி தின்று வளர்கிறது. அந்த கோழியை சமைத்து சாப்பிடும் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. கோழிக்கு நோய் பரவும் காலங்களில் மட்டும் சிக்கன் உணவை யாரும் சாப்பிடுவதில்லை.
பொத்தாம் பொதுவாக, 'கடல் மீன்களை சாப்பிடாதீர்கள்' என, வாசகர் கூறியுள்ளார். கடல் மீன்களை யாரும் சாப்பிடவில்லை என்றால், மீன் மூலம் நடைபெறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும்; மீனவர்களின் வாழ்வு இருண்டு விடும்!


அடிமட்டம் முதல்மேல்மட்டம் வரைஊழலோ ஊழல்!

எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அன்று, காமராஜருக்கு நெருக்கமாக இருந்தார், மதுரை டி.வி.சுந்தரம் ஐய்யங்கார்.அவர் நடத்திய பஸ் கம்பெனி உட்பட தனியார் பஸ் அதிபர்களை பழிவாங்க, ஏதோ காரணத்திற்காக திட்டமிட்ட, அப்போதைய முதல்வர் கருணாநிதி, தனியார் பஸ்களை அரசுடைமையாக்கினார்.டி.வி.எஸ்., கம்பெனி ஈட்டிய அதே லாபத்தை, அரசுடைமை ஆக்கப்பட்ட அரசு பஸ் கார்ப்பரேஷன் சம்பாதித்திருக்க வேண்டும்.அப்படி நடந்து இருந்தால், கருணாநிதியை வெகுவாக பாராட்டலாம். ௫௦ ஆண்டுகளாக, அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன.ஐந்து ஆண்டுகளில் அரசு பஸ்களால் உயிரிழந் தோர், ௮,௨௬௧ பேர்; இழப்பீடு தராத காரணத்துக்காக, ௨௦௧௧ முதல் கோர்ட் வளாகங்களில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பஸ்கள் எண்ணிக்கை, ௪,௭௭௧; விபத்து காப்பீடு என்ற வகையில், ௨௦௦ கோடி ரூபாய் தண்டனை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.
அரசு கார்ப்பரேஷனில், ௨௨ ஆயிரம் பஸ்களுக்கு மேல் இயங்குகின்றன. பஸ்களுக்கு, மூன்றாவது நபர் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டுவதே இல்லை. ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டில் நிற்கும் அரசு பஸ்களின் பாகங்கள் அடிக்கடி திருடுப் போகின்றன.பயணியர் அதிகரிப்பிற்கு ஏற்ப, பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்களின், பி.எப்., - கிராஜுட்டி பணப் பயன்களை தராமல் இழுத்தடிக்கிறது, அரசு போக்குவரத்து கழக நிர்வாகங்கள்!ஒரு பஸ் முழுமையாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டால், ஆண்டு பிரீமியம், ௩௫ ஆயிரம் ரூபாய் தான்.விதிப்படி இயக்கினால் தான் விபத்துக்குள்ளான பஸ்சில் பயணித்த பயணியருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கும். ஆனால், விதிப்படி அரசு பஸ்கள் இயங்குவது
கிடையாது!தேவையான பஸ், பணியாளர், பராமரிப்பு, நேர்மையான நிர்வாகம் இருந்தால் மட்டுமே, அரசு பஸ்களை லாபத்தில் இயக்க முடியும்.அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஊழலால் அரசு போக்குவரத்து நிர்வாகங்கள் திளைத்து உள்ளதால், அரசு பஸ்களின் கதி அம்போ தான்!

நெசவுதொழிலாளிக்குமரண அடி!

டாக்டர் டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கோவை, சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில், ஒன்பது லட்சம் பேர் விசைத்தறி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தின் பங்களிப்பாக இருக்கிறது. விவசாயத்திற்கு அடுத்து, அதிக தொழிலாளிகளை கொண்டிருப்பது ஜவுளித் துறை!ஜி.எஸ்.டி., வரியை எதிர்த்து, தமிழகம், குஜராத் போன்ற மாநிலங்களில், விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின், ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; இந்த உண்மையை,
தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ஏற்றுக் கொண்டுஉள்ளார்.நுால் உற்பத்தியிலிருந்து, துணி தயாரிப்பு வரை, பல நிலைகளில் தனித் தனியாக வரி விதிக்கப்பட்டிருக்கிறது.உதாரணமாக, நுாற்பு ஆலையில் இருந்து வெளியேறும் நுாலுக்கு, 8 சதவீதம், நுாலுக்கு வண்ணம் கொடுக்கும் சாயப் பவுடருக்கு, 8 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.நுாலுக்கு பசை ஏற்றுவதற்கு, 8 சதவீதம், நுாலிலிருந்து உருவாக்கப்படும், நெசவுக்குத் தேவையான பாவுக்கு, 8 சதவீதம், சேலையாக நெய்து விற்பனைக்கு வரும்போது, அதற்கு, 15 சதவீதம் என, 50 சதவீத வரி விதிப்பு செய்யப்படுகிறது.உற்பத்தி செய்யப்பட்ட சேலையின் பழைய விலையிலிருந்து, 25 சதவீதத்தை கூட்டி விற்றால் தான், ஓரளவுக்காவது விலை கட்டுபடியாகும் என்கின்றனர், விசைத்தறி உரிமையாளர்கள்.சிலர், சேலையின் விலையை கூட்டாமல், தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியில் கை வைக்கப் பார்க்கின்றனர்.இது மட்டுமின்றி, நெசவாளிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் முதலாளிகளுக்கு, சேவை வரியாக கூலிக்கு வேலை செய்வோர், 5 சதவீதம் கொடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையும் வந்திருக்கிறது.பல்வேறு வரி விதிப்பு முறைகளால், நாள் ஒன்றுக்கு, 200 அல்லது 300 ரூபாய் சம்பாதிக்கும் நெசவுத் தொழிலாளிக்கு, இது மரண அடி!நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டால், கூலி நெசவாளிகள் பட்டினிச் சாவை தான் சந்திக்க வேண்டி வரும்.பல லட்சம் நெசவுத் தொழிலாளிகளின் நலனை கருதி, நெசவுத் தொழிலுக்கான, ஜி.எஸ்.டி., வரியை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    சி.துரைராஜ், புதுச்சேரி- உங்கள் அறியாமைக்கு வருந்துகிறேன். அமெரிக்க பத்திரிகை ஓட்டுனரில் வந்த ஆராச்சி படி, தூனா மீன்கள் போன்றவற்றில் 40 40 க்கும் மேற்படட பிளாச்டிக், ரசாயணங்கள், மனிதர்களால் கடலில் கலந்த விஷ மருந்துகள், பூச்சி கொல்லிகள்.. இன்று வரும் கேன்சர் போன்றவற்றிக்கு காரணம் என்கிறது. கடலுக்கு வாடகை இல்லை பேராசையால் அளவுக்கு அதிகம் மீன் பிடித்து அவை அழிவதாகவும் சொல்லப்படுகிறது. 5 % மக்களுக்கே சிந்தனை செய்யும் திறன் இந்தியாவில் இருக்கிறது என்னும் போது அரசாங்கத்த்துக்கு இது எப்படி தெரியும். லஞ்ச வியாதிகள்தானே அரசாங்க வியாதிகள். மின் வலை தளத்தில் தேடி உங்கள் அறியாமையை போக்கி கொள்ளுங்கள். எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் - கருணாநிதியின் கொள்ளை திட்டத்தில் இதுதான் முதல் படி. அரசாங்க பணத்தை , டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு அதிக அளவில் முதலில் கொடுத்து, அதை திரும்ப வாங்கி கொண்டார். அனால் அது அவரது தனி கணக்கிற்கு போனது. உதாரணமாக, ஐயா ஒங்க கார் கம்பனியை அரசுடமை ஆக்க போகிரோம். உங்களுக்கு தேவையான நல்ல காரர்களை விற்று விடுங்கள், உங்கள் உதடை ஓடைசல்களுக்கு விலையாக 1 கோடி. அனால் 10 கோடி மக்கள் வரிப்பணத்தை தருவோம். 9 கோடியை ஹாவாளா மூலம் நீங்கள் திரும்ப தரவேண்டும். இது பற்றி வருமான வருட துறைக்கு தெரியவேண்டாம். - இதுதஹ்ன் விஞ்ஞான லஞ்சமுறை. இதையே கள்ளுகடையிலும் செய்தார். டிவிஎஸ் முட்ட கணக்கர் (தற்போது இல்லை), சிறந்த பச டிரைவர்கள் நேரில் சொன்னது. திருடர்கள் கழ தொண்டர்கள் தங்கள் பங்கிற்கு என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே தவிர, வேறு என்ன செய்ய முடியும். கமலின் அடிமையகளும் அடுத்த கொள்ளைக்கு தயாராகிவருகிறார்கள். "கோவணம் காட்டாத ஊர்லே, கட்டினவன் பைத்தியக்காரன் " - எனவே எந்த கொள்ளை அடிக்க விரும்பாத தலைவனும் திராவிடர்களை காப்பாரா வரமாட்டான். நம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாழ்வோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement