Advertisement

ரயில்வே துறை வேகமாக முன்னேறுமா?

ரயில் பட்ஜெட், தனியாக இனி இல்லை என்பது முடிவான விஷயம் என்றாகி விட்டது. காலம் காலமாக ரயில்வே என்பது, பொதுமக்கள் போக்குவரத்து அமைப்பு என்பதும், அதனால், அது கவர்ச்சித் திட்டங்களுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ரயில்வே அமைச்சர்களை விட, ரயில்வே போர்டு பல முடிவுகளை எடுக்கும் நடைமுறை இருந்தாலும், மம்தா, லாலு போன்றவர்கள் ரயில்வே அமைச்சர்களாக இருந்த காலத்தில், அதை முற்போக்கான உந்து சக்தியுடன் மாற்றவில்லை. ஜெர்மனி, ஜப்பான், சீனா உட்பட பல நாடுகளில், ரயில் சேவை, மக்களுக்கு வசதி வாய்ந்த சாதனமாக இருக்கும் போது, நாம் அதைக் கோட்டை விட்டோம். மத்திய நிதியமைச்சகம் இனி ரயில்வேக்கு தேவைப்படும் நிதியை, லட்சக்கணக்கான கோடி ரூபாய்களில் தருவது என்பது சாத்தியமற்றது. அதேசமயம், பல்வேறு மாநிலங்களில் கார்பன் நச்சு பாதிப்பைக் குறைக்கும், விரைவு சாதனமாக ரயில்வேயை வளப்படுத்தும் தேவை வந்திருக்கிறது. மிகப்பெரிய நாட்டின், சரக்கு போக்குவரத்துக்கு இந்த சாதனம் எப்படிப் பயன்படப் போகிறது என்பதும் அடுத்த கேள்வி. அதற்கு, ஜி.எஸ்.டி., வரி உதவலாம் என்கின்றனர். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, முதற்கட்டமாக புதிய ரயில் திட்டங்களை அனுமதிப்பதில் அர்த்தமற்ற அரசியல் தலையீடுகளை தவிர்த்திருக்கிறார்.
தமிழகத்தின் தென் மாநிலங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதை பணிகள் சூடுபிடித்திருப்பது ஒரு அடையாளம். கிழக்கு கடலோரப் பகுதிகளில் ரயில் பாதை அமைக்கும் திட்டமாக, புதுச்சேரிக்கு பயண நேரம் குறைவாக செல்லும் வசதிக்கான ஆரம்ப திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், அதிக அளவு சரக்குக் கட்டண வருவாய் கிடையாது என்பது உண்மை என்றாலும், பயணியர் ரயில் என்பது மக்களுக்கு வசதியானது.
தற்போது, ரயில்வே எளிதாக வருமானம் ஈட்ட, விளம்பரங்களை அமைக்க பேனர்கள், மற்ற அர்த்தமற்ற செலவினங்களை குறைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இவற்றை விட முன்பதிவு டிக்கெட் மோசடி குறைந்திருக்கிறது. அதேசமயம், டிக்கெட்டில்லா பயணியரால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, சோதனையாளர்கள், பெண் பயணியருக்கு உதவ ரயில்வே போலீஸ் உதவி, ரயில்வே பிளாட்பாரங்களில் துாய்மை ஆகியவை, எந்தவித அரசியல் ஆர்ப்பாட்டமும் இன்றி நடக்கின்றன. ரயில்வே பாதுகாப்பு போலீசார், ஸ்டேஷன்களில் பணிபுரிவோர், அப்பகுதி உள்ளூர் போலீசார் ஒத்துழைப்பு தேவை என்பது, நீண்ட நாள் யோசனை. அது நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனால் அப்பாவி பயணியரை மட்டும் மிரட்டி போலீசார் பணம் பறிக்கும் செயல் நடந்திருக்கிறது. பயணியர் ரயில், சரக்கு ரயில் சேவை, பிளாட்பாரங்கள் ஆகிய எல்லாவற்றிலும் குற்றங்கள் நடப்பது செய்தியாகிறது. ரயில்வே என்பது மிகப்பெரிய எண்ணிக்கையில் ஊழியர்களை கொண்ட அமைப்பு. அந்த ஊழியர்கள், இப்போது நேரப்படி வேலை செய்ய முன் வந்திருப்பதும், ரயில்வே வெறும் கவர்ச்சி இயக்கம் என்ற கருத்து மாற உதவும். நாட்டில் அதிக அளவு வருவாய் பிரிவு குறைந்தோர் இருப்பதால், அதன் சமூக நலன் கொண்ட திட்டங்களை ஒரேடியாக நீக்கிவிட முடியாது. அவற்றில் முறைகேடின்றி செயல்படுத்துவதே இப்போதுள்ள பிரச்னை. ஆனால், மும்பை, சென்னை, டில்லி, கோல்கட்டா உட்பட, பல பெரிய நகரங்களில் உள்ள புறநகர் ரயில் பயணியர் நலன் காப்பது அவசியம். இதற்கான பயண டிக்கெட்டில் கிட்டத்தட்ட, 40 சதவீதம் சலுகை உள்ளதால், கட்டண உயர்வு வரலாம். சிறிய நகரங்களை இணைக்கும் புறநகர் ரயில் சர்வீஸ்களில், அதிக வசதி ஏற்படுத்த ரயில்வே, நிதி ஆதாரத்தை தேடுகிறது. இனி, காலப்போக்கில் மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கணிசமான நிதி, தேவைப்படும் நில ஆர்ஜிதப் பணிகளை இழுத்தடிக்காமல் தர முன்வந்தால் ஒழிய, ரயில் நிர்வாகத்தின் வருவாய் குறைந்து விடும். உதாரணத்திற்கு, சென்னை அருகே உள்ள தாம்பரம் முனையமானால், புறநகர் வளர்ச்சி சிறப்பாக அமையும். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை, எளிதாக ரயில்கள் செல்ல பாதை வசதிகள் அதிகரிக்க, பல முட்டுக்கட்டைகள் உள்ளன. சென்னையில் இருந்து நெல்லை வரை இரட்டை ரயில் பாதையை, 20 ஆண்டுகளாக நிறைவேற்றாத அக்கறையின்மை, இப்போது மாறி வருவது நல்ல அறிகுறி.
மொத்தத்தில், ரயில்வேத் துறை புதிய வேகத்துடன் செயல்பட, பன்முகச் செயல் பரிமாணம் இன்று தேவை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement