Advertisement

ஆராய்ச்சி மலர்

மனச் சோர்வு உள்ளவர்கள், 'இன்ஸ்டாகிராம்' தளத்தில் பதிவிடும் படங்கள் இருண்ட படங்களாகவே இருப்பதாக 'இ.பி.ஜே., டேட்டா சயின்ஸ்' இதழில் வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. 166 பேரின் அனுமதியுடன், அவர்களது இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்த, 43 ஆயிரம் படங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 71 பேர், மருத்துவர்களிடம் மனச்சோர்வுக்கென சிகிச்சை பெற்று வருவோர். ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படங்களை ஒரு கணினி நிரல் அலசியது. அவர்களில் யாருக்கு மனச்சோர்வு உள்ளது என்பதை, 70 சதவீத துல்லியத்துடன் கணினி நிரல் கணித்துச் சொன்னது. ஆக, சமூக வலைதளங்களில் இருப்பவர்கள், தங்கள் மன நிலையையும் தங்களையும் அறியாமல் வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

#####

மனிதர்களுக்கு பணிவிடை செய்யும் ரோபோக்களை தயாரிப்பதற்கான ஆய்வுகள் இப்போது வேகமெடுத்துள்ளன. பிழையின்றி வேலைகளைச் செய்யும் ரோபோ, அவ்வப்போது மனிதர்களைப் போலவே சில பிழைகளை செய்யும் ரோபோ ஆகிய இரண்டில் எதை மனிதர்கள் விரும்புகின்றனர் என்பது குறித்த ஒரு ஆய்வு, 'பிரான்டியர்ஸ் இன் ரோபோட்டிக்ஸ் அண்ட் ஏ.ஐ.,' இதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, பிழையின்றி வேலை செய்யும் ரோபோவை விட, லேசான தடுமாற்றத்துடன் பிழைகளைச் செய்யும் ரோபோவையே மனிதர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்ற ஆச்சரியமான உண்மை தெரியவந்துள்ளது.

#####

மூளை சுறுசுறுப்பாக இருப்பது ஆண்களுக்கா, பெண்களுக்கா? மூளையை அலசும், 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கேன்களை வைத்து செய்யப்பட்ட பிரமாண்டமான ஆய்வு ஒன்று, பெண்களின் மூளை தான் அதிக சுறுசுறுப்புடன் இயங்கியபடியே இருக்கிறது என்கிறது. அண்மையில், 'ஜர்னல் ஆப் அல்சைமர்ஸ் டிசீஸ்' இதழில் வெளிவந்த இந்த ஆய்வின்படி, கவனத்தை கட்டுப்படுத்தும் மூளையின் முன்பகுதி, நடத்தையையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் மூளையின் நடுப்பகுதி ஆகியவை பெண்களுக்கு எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம், ஆண்களுக்கு, பார்வை மற்றும் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிகள் மட்டும் அதிக சுறுசுறுப்பாக இயங்குவதாக தெரியவந்துள்ளது.

#####

உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகளை விட, தனிமையே உயிருக்கு ஆபத்தானது என்கிறது, 'யுனிவர்சிட்டி பேப்பர்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு. உலகெங்கும், மூன்று லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட, 200க்கும் மேற்பட்ட ஆய்வுத் தகவல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட விரிவான இந்த ஆய்வின்படி, உடல் நலத்திற்கும், நீடித்த ஆயுளுக்கும் பிறருடன் தொடர்பில் இருப்பது முக்கியமானது என்று தெரிய வந்துள்ளது. நல்ல சமூகத் தொடர்புகள் இருப்பவர்களுக்கு, அல்பாயுசில் மரணமடையும் வாய்ப்பு, 50 சதவீதமாகக் குறைவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement