Advertisement

டீ கடை பெஞ்ச்

பெண் போலீஸ் அதிகாரியின் 'டார்கெட் டார்ச்சர்!'


''விசாரணையை நினைச்சு, கதிகலங்கி போயிருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம், ராணுவ கட்டுப்பாட்டுல இருக்கு... இதுல, ஏழு வார்டுகள்லயும், அ.தி.மு.க., தான் ஜெயிச்சிருக்கு வே...
''இவங்களுக்குள்ள பன்னீர், பழனிசாமி அணின்னு முட்டல், மோதல் வந்துட்டு... ஒருத்தர் மேல ஒருத்தர், புகார்களை சொல்லிட்டு இருக்காவ வே...
''மறுபக்கம், மக்களும், வார்டு உறுப்பினர்கள் பத்தி புகார் அனுப்புனாவ... இதை பார்த்த ராணுவ அதிகாரிகள், எல்லாத்தையும் விசாரிக்க, குழு அமைச்சுட்டாவ...
''சீக்கிரமே விசாரணை நடக்க இருக்கு... இதுல, நிறைய விதிமீறல்கள், ஊழல்கள் அம்பலமாகும்கிற பயத்துல உறுப்பினர்கள் இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''ஸ்டாலினை வரவேற்றதுல, கோஷ்டிப்பூசல் அப்பட்டமாகிடுச்சு பா...'' என்றார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''கடலுார் மாவட்ட, தி.மு.க.,வை, கிழக்கு, மேற்குன்னு ரெண்டா பிரிச்சதுல இருந்தே பிரச்னை தான்... போக போக, ரெண்டு மாவட்ட நிர்வாகிகள் வீட்டு நல்லது, கெட்டதுகள்ல கூட, நிர்வாகிகள் பங்கேற்காம புறக்கணிச்சாங்க பா...
''சமீபத்துல, செயல் தலைவர் ஸ்டாலின், கடலுார் வழியா தான், கதிராமங்கலம் போனாரு... மேற்கு மாவட்ட செயலர் கணேசன் தரப்பு, விருத்தாசலம் கடை வீதியிலயும், கிழக்கு மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் தரப்பு, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயும், அவருக்கு, தனித்தனியா வரவேற்பு கொடுத்தாங்க...
''இதுவரை, மாவட்டத்துக்குள்ள இருந்த கோஷ்டிப்பூசலை, ஸ்டாலின் முன்னாடி போட்டு உடைச்சுட்டாங்க பா...'' என, முடித்தார்
அன்வர் பாய்.''தினம், ௫௦ லைசென்ஸ்களை ரத்து செய்யணும்னு, 'டார்கெட் பிக்ஸ்' பண்ணியிருக்காங்க ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற பெண் போலீஸ் அதிகாரி, 'எல்லா சப் - டிவிஷன்கள்லயும், தினமும் குறைஞ்சது, 50 பேரோட, 'டிரைவிங் லைசென்ஸ்'களை ரத்து பண்றா மாதிரி வழக்கு பதிவு செய்யணும்...
'இல்லேன்னா, உங்க மேல நடவடிக்கை எடுப்பேன்'னு மிரட்டறாங்க ஓய்... 'தண்ணி' அடிச்சுட்டு வண்டி ஓட்டறவாளை பிடிச்சு, கேஸ் போடச் சொன்னா நியாயம்...
''ஆனா, லைசென்ஸ்களை ரத்து பண்றதுக்காகவே, 'ஓடி ஓடி பிடிங்கோ'ன்னு சொன்னா, என்ன பண்றதுன்னு, போலீசார் புலம்பறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''கவர்மென்ட்டோட உத்தரவு என்னன்னா, ரோட்ல போற வாகனங்கள் எல்லாம் முறைப்படி, 'பிட்னெஸ் சர்ட்டிபிகேட்'டோட ஓடுதா, லைசென்ஸ் வாங்கி இருக்கான்னு, 'தரோ'வா பார்த்து, அறிக்கை குடுக்கணும்ங்கறது தான் வே... இவங்க அதை தப்பா புரிஞ்சிட்டிருக்காங்க போல...'' என, விஷயத்தை விளக்கினார் அண்ணாச்சி.
டீக்கடை ரேடியோவில், 'செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்...' என்ற, டி.ஆர்.மகாலிங்கத்தின் பழைய பாடல் ஒலிக்க, பெரியவர்கள் கண்களை மூடி, ரசிக்க ஆரம்பித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Umashankar - Salem,இந்தியா

    எல்லாமே காசுக்காக தான். உரிமம் கொடுக்கும் போது 50 அடியிலேயே பரிசோதனைகளை முடித்து ஒரே நாளில் பலருக்கு உரிமம் வழங்குவதும் , பின் வாகனத்தனிக்கை என்ற பெயரில் அனைவரிடமும் பரிசோதனை செய்வதும் பல நேரங்களில் காசுக்காக தானே அன்றி வேறு ஒன்றில்லை.

  • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

    வாகன விதிகள் கடைப்பிடித்தல் ஒட்டுதலிலும் உரிமம் காண்பிப்பதிலும் சரியாக இருக்கிறதா என பார்க்கவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement