Advertisement

இது உங்கள் இடம்

நண்டு, தவளை எல்லாம் கத்துகின்றன!


என்.சாண்டில்யன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'ஜனநாயக நாட்டில், போராட்டம் நடத்த எல்லாருக்கும் அடிப்படை உரிமை உள்ளது. மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, மனிதநேயம் சிறிதும் இன்றி, பழனிசாமி அரசு கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து
தெரிவித்து இருந்தார்.'அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார். அதை, பன்னீர்செல்வம் கண்டிக்காமல், அவரது கூற்றை வாழ்த்தி வரவேற்றார். 'தமிழகத்தில், 'சிஸ்டம்' கெட்டுப் போய் விட்டது' என, 'கமென்ட்' அடித்தார் நடிகர் ரஜினி. அதற்கு, வாயை திறக்கவில்லை, பன்னீர்!அ.தி.மு.க., அமைச்சர்கள் அடிக்கடி, 'பிரஸ் மீட்' வைக்கின்றனர். அதில், பன்னீர், கமல், ரஜினியை சரமாரியாக திட்டி பேட்டி கொடுக்கின்றனர்.சமீபத்தில், 'தெர்மாகோல் புகழ்' அமைச்சர் ராஜு, 'நாங்கள் யாருக்கும் கொத்தடிமை இல்லை; யாருக்கும் எஜமானர்கள் இல்லை' என்றார். அவர் தினகரனை திட்டுகிறாரா அல்லது முதல்வர் பழனிசாமியை திட்டுகிறாரா என்பது புரியவில்லை.
ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வில் அத்தனை தலைவர்களுக்கும், குளிர்விட்டுப் போயிருப்பது நன்கு தெரிகிறது; நண்டு, தவளை எல்லாம் கத்த துவங்கி விட்டன.ஜெயலலிதா உயிருடன் இருந்து, ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை, பன்னீர்செல்வம் கண்டித்து இருந்தால், அவரை மனமார பாராட்டலாம். அன்று, சட்டசபையில், ஸ்டாலினை பார்த்தால் ஓடி ஒளிந்தார்; இன்று, புன்முறுவல் பூக்கும் துணிச்சல், அவருக்கு எப்படி வந்தது...
சிவபெருமானை பார்த்து, குற்றம் சொன்னார் புலவர், நக்கீரன். அதனால், இன்று வரை, நக்கீரன் புகழ் பேசப்படுகிறது. ஜெயலலிதாவை பார்த்து, கை விரல் நீட்டி, 'நீங்கள் செய்தது குற்றம் தான்' என, பன்னீர் அன்று சொல்லியிருந்தால், அவரது புகழ் இன்று எங்கோ போய் இருக்கும்!
'சசிகலாவின் காலில் விழுந்ததை பெரிய புண்ணியம்' என நினைத்த எனக்கு, ஸ்டாலின் புகழ் பாடுவதால் எந்த குறையும் வந்து விடாது' என, பன்னீர் நினைத்து விட்டார் போலும்!திராவிட கட்சிகளால்நாடே சிரிக்கிறதுமிஸ்டர் ஸ்டாலின்!


கு.அருண், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இந்தியாவிற்கே, அரசியல் சித்து விளையாட்டுக்களை கற்று கொடுக்கும் கட்சிகள் என்றால், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தான்.அன்று, திருமங்கலம் இடைத் தேர்தலில், ஓட்டுக்கு பணம் என்ற, 'பார்முலா'வை, நாட்டிற்கே அர்ப்பணித்த கட்சி என்ற பெருமை, தி.மு.க.,வுக்கே!இன்று, எல்லா மாநிலத்திலும் ஓட்டுக்கு பணம் என்ற கலாசாரம் வேகமாக பரவி வருகிறது.தி.மு.க.,வை விட, ஒரு படி தாண்டி, அ.தி.மு.க., இன்று பெரும் குழப்பத்துடன் ஆட்சியையும் தக்க வைத்திருப்பது, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்!
முதல்வர் பழனிசாமி தலைமையில், ஒரு அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், மற்றொரு அணியும் செயல்படுகின்றன. இவர்களை தவிர, தினகரன் தலைமையில் ஒரு கோஷ்டியும் முட்டி மோதுகிறது.ஆனால், ஆட்சிக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை. 'நாங்கள் நினைத்தால், அ.தி.மு.க., ஆட்சியை துாக்க முடியும்' என, ஊருக்கு ஊரு வெத்துவேட்டு விட்டு கொண்டிருக்கிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்.அ.தி.மு.க., பிளவுப்பட்டதும், தமிழக சட்டசபையில், மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் உத்தரவிட்டார்.பன்னீர் அணியை தவிர, மற்றஎம்.எல்.ஏ.,க்களை, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரில் ஒரு சொகுசு விடுதியில் அடைத்து வைத்தனர். பணத்தாலும், பொருளாலும் அவர்களை நனைய வைத்தனர், சசிகலா, தினகரன் அன் கோவினர்.
குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, கர்நாடக மாநில அமைச்சர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனால், ஆத்திமடைந்த மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, வருமான வரியை ஏவி, சிவகுமார் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதில், ௧௦ கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.திராவிட கட்சிகள் தான், நாடு முழுவதும் அரசியலில் சதுரங்கம் எப்படி ஆடுவது என்பதை கற்று தருகின்றன... அ.தி.மு.க.,வின் கூவத்துார், 'ஸ்டைலில்' கர்நாடகாவில், குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நன்கு கவனிக்கப்பட்டனர்.
இதை பொறுக்க முடியாத, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், 'அமைச்சர் சிவகுமார் வீட்டில் சோதனை நடத்திய, வருமான வரித் துறையினர், அன்று, ஏன் கூவத்துாரில் சோதனை நடத்தவில்லை' எனக் கேட்கிறார்.அதுவும் சரிதான்... எல்லாம், உங்கள் தந்தையும், அவருக்கு வழிகாட்டிகளாக இருந்தோரும் காட்டிய வழியில் தானே, நாடே செல்கிறது, மிஸ்டர் ஸ்டாலின். திராவிட கட்சிகளின் செயல்பட்டால் இன்று நாடே சிரிக்கிறது!


மேனகாவைகட்டுப்படுத்தவேண்டும்!


ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அமெரிக்கா போன்ற நாடுகளில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப் பட்டுள்ளது; இதன் மூலம் போதைப் பொருட்கள் பயன்பாடு குறைந்துள்ளது. இந்தியாவிலும் அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்' என, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா பேட்டி அளித்து இருந்தார்; இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலை நாட்டு கலாசாரத்தை, பாரம்பரியமிக்க நம் கலாசாரத்துடன் ஒப்பிட்டு பேசும் இத்தகைய குரூரமான கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது.கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண், 'தன் மகளின் பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் அவசியமில்லை' என கூறினார்; அப்பெண்ணின் கருத்திற்கு அமைச்சர் மேனகா ஆதரவு தெரிவித்து இருந்தார்.இது, நாட்டில் பெரும்பாலான மகளிர் சமுதாயத்தினர் மனங்களை காயப்படுத்தியது.அவரது இத்தகைய கருத்துக்கள், நாட்டில் எதிர்மறையான விபரீதங்களை ஏற்படுத்தும்; ஆனால், அதை அறியதோர் போல், வில்லங்கமான கருத்துக்களை கூறுவதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நாட்டில் உன்னதமான ஒரு துறைக்கு பொறுப்பு வகிக்கும், மத்திய அமைச்சரின் வில்லங்கமான கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது.அவரது இத்தகைய பேச்சு, பா.ஜ., கட்சிக்கும், மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் நிச்சயம் களங்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, சர்ச்சைக்குரிய கருத்துகளை இனியும், மேனகா கூறாத வகையில், கட்சி மேலிடம் தடுக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    திராவிடம் என்பதே ஒரு புதிரான சொல். அவர்களின் செயல்பாடும் அப்படியே இருப்பதில் என்ன அதிசயம்?

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    மொள்ளமாரிகள் முடிச்சி அவிக்கிகளின் சங்கமம்தான் திராவிட கட்சிகள்? இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு? உலகத்துக்கே தெரிஞ்ச விக்ஷயம்தானே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement