Advertisement

சொல்கிறார்கள்

'காஸ்மெடிக் சர்ஜரி'க்கு இன்சூரன்ஸ்கிடையாது!



காஸ்மெட்டிக் சிகிச்சை நிபுணர், டாக்டர் சசிகுமார் முத்து:'பிளாஸ்டிக் சர்ஜரி' என்றாலே அழகுக்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சை என, பலரும் கருதுகின்றனர். ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரியின் ஒரு பிரிவு தான், 'காஸ்மெடிக் சர்ஜரி!' இது, முழுக்க முழுக்க அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை.இயற்கையாகவோ அல்லது ஏதாவது விபத்தின் காரணமாகவோ உடலில் ஏதேனும் உறுப்புகள் சேதம் அடைந்தால், அறுவை சிகிச்சையால் சரி செய்வது தான், பிளாஸ்டிக் சர்ஜரி. உதாரணமாக, மூக்கு சேதமடைந்தாலோ, ஒரு விரல் துண்டிக்கப்பட்டாலோ, ஆறு மணி நேரத்திற்குள், பிளாஸ்டிக் சர்ஜரியால் மீண்டும் சீரமைத்து விட முடியும். பிறந்த, ஆறு மாதம் ஆன குழந்தை முதல், 70 வயது முதியவர் வரை, இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.மற்ற அறுவை சிகிச்சை செய்தால், இன்சூரன்ஸ் மூலமாக பணம் பெறலாம்; ஆனால், 'காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு' இன்சூரன்ஸ் கிடையாது. மேலும், காஸ்மெட்டிக் சிகிச்சை கவனமாக செய்ய வேண்டிய சிகிச்சை. ஏனெனில், ஆரோக்கியமான ஒருவர் தன்னை அழகு படுத்திக் கொள்ள வருவதால், தவறாக சிகிச்சை அளித்து, அவரை நோயாளியாக்கி விடக் கூடாது. மேலும், இந்த சர்ஜரி செய்யும் போது, மருத்துவரின் அனுபவம், மருத்துவமனை வசதி ஆகியவற்றையும்;
சர்ஜரி செய்வது சரி தானா என்றும் ஆராய வேண்டியது அவசியம்.குண்டாக இருப்போரின் எடையை, 'லைப்போசக் ஷன்' என்ற சிகிச்சை மூலம் குறைக்கலாம். இந்த சிகிச்சையில், உடலில் இருக்கும் கொழுப்பு அகற்றப்படும். மேலும், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதால், பக்க விளைவு இருக்காது. இந்த சிகிச்சை, பெண்களுக்குத் தான் அதிகம் பயன்படுகிறது.
இது தவிர, முடி கொட்டுகிற பிரச்னைக்கு, 'ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன்' என்ற, முடி மாற்று அறுவைச் சிகிச்சையை, நிறைய பேர் செய்து கொள்கின்றனர். இதற்கடுத்து, மூக்கு சரி செய்யும் சிகிச்சை, மார்பக சிகிச்சை, இடுப்புப் பகுதியை அழகாக்கும் சிகிச்சை போன்றவை பிரபலமாகி வருகின்றன.விபத்து என்றால், தோல் பகுதி எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது, எலும்புகளில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை, முதலில் பார்க்க வேண்டும். எலும்பு சேதம் இல்லை எனில், தொடை அல்லது அக்குள் பகுதி சதையை எடுத்துத் தைத்து, சரி செய்யலாம்.எலும்புகள் சேதம் அடைந்தால், செயற்கையான முறையில் எலும்புகளை வைத்து, பின் தோலை வைத்து, சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு, மூன்று வாரம் முதல், ஆறு வாரம் ஆகும். அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர்களை ஆறு மாதம் கண்காணிக்க வேண்டும். தீ விபத்தால் உடலில் காயம் ஏற்படும் போது, அது, பல தீமைகளை உண்டாக்கும். உதாரணத்துக்கு, கழுத்துப் பகுதி தீயால் பாதிக்கப்பட்டால், அவர்கள் சரிவர கழுத்தை அசைக்க முடியாது. இந்த பிரச்னையை, பிளாஸ்டிக் சர்ஜரியால் சரி செய்யலாம்.
காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது, நம் தோற்றத்துடன் செயல் திறனையும் மேம்படுத்தக் கூடியது. மேலும், அழகுடன் ஆரோக்கியமும் கிடைக்கிறது. இந்த சிகிச்சையில், தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்து அகற்றப்படுவதால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எலும்பு சம்பந்தமான, ஆர்த்தரைட்டிஸ் நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் வருவதும் குறையும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement