Advertisement

டீ கடை பெஞ்ச்

அதிகாரியின் ஆசையால் உயிரிழந்த வாலிபர்!


''குடி மராமத்து பணிகள்ல நடக்குற ஊழலை தடுக்க, கோர்ட்டுக்கு போக போறாங்க பா...'' என, பெஞ்ச் விவாதத்தை துவக்கினார் அன்வர் பாய்.
''எந்த ஊருல வே...'' என, விசாரித்தார் அண்ணாச்சி.
''திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்கள்ல இருக்கிற ஏரி, குளங்கள்ல, குடி மராமத்து திட்டத்துல, துார்வாரும் வேலைகள் நடக்குது... இதுல, குறிப்பிட்ட சில கான்ட்ராக்டர்களும், ஆளுங்கட்சியினரும், கூட்டணி போட்டு, வேலையே செய்யாம, செஞ்சதா கணக்கு காட்டி மோசடி
பண்றாங்க பா...
''இதனால, எந்தெந்த குளங்கள், ஏரிகள்ல துார் வாரும் பணிகள் நடந்தது, எவ்வளவு ரூபாய்க்கு வேலை நடந்தது, யாரு கான்ட்ராக்ட் எடுத்ததுங்கிற விபரங்களை, தகவல் பலகையில எழுதி வைக்கணும்னு கேட்டு, பாதிக்கப்பட்ட சில கான்ட்ராக்டர்கள், ஐகோர்ட்ல பொது
நல வழக்கு போட இருக்காங்க பா...''
என, முடித்தார் அன்வர் பாய்.
''தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,வை பேச விடாதது, அதிருப்தியை கிளப்பிட்டு வே...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் அண்ணாச்சி.
''அவர் வாயை கட்டி போட்டது யாருங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.
''போன, ௫ம் தேதி, பெரம்பலுார்ல, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்துச்சுல்லா... விழாவுல, ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கம், குன்னம், எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் எல்லாம் பேசினாவ வே...
''விழாவுல கலந்துக்கிட்ட, பெரம்பலுார் தொகுதி, எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் பேச வாய்ப்பு தரலை...
இத்தனைக்கும், விழாவே அவரது தொகுதியில இருக்கிற பாலக்கரையில தான் நடந்துச்சு...
''ஏற்கனவே அவர், சசிகலா குடும்பம் மூலமா தான், 'சீட்' வாங்கி, ரெண்டாவது முறையா ஜெயிச்சிருக்கார்... தினகரன் அணியில இருக்கிற அவரை பேச விட்டா, சசிகலா, தினகரன் புகழ் பாடிடுவார்னு தான், அவரை பேச விடலை வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.''அதிகாரியின் ஆசை, வயசு பையன் உயிரை பறிச்சிடுத்து ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.
''அடப்பாவமே... யாரை சொல்றீங்க பா...'' என, விசாரித்தார் அன்வர் பாய்.''தென்மாவட்டத்தைச் சேர்ந்த வன அதிகாரி ஒருத்தருக்கு, 'பால் பன்'னுங்கிற இனிப்பு ரொம்பவும் பிடிக்கும்... சில நாட்களுக்கு முன்ன, அவருக்கு பால் பன் ஆசை வந்துடுத்து ஓய்...
''உடனே, தனக்கு கீழே வேலை பார்த்த, வனச்சரகரிடம் அதை வாங்கீண்டு வரும்படி கேட்டிருக்கார்...
அவர், தனக்கு கீழே இருக்கற கார்டுகிட்ட சொல்ல, கார்டு, 28 வயசு மகனை, பால் பன் வாங்க, பைக்குல அனுப்பினார் ஓய்...''ஆனா, போறச்சே, பைக், 'ஆக்சிடென்ட்' ஆகி, அந்த புள்ளையாண்டான் செத்துப் போயிட்டான்... இது, அதிகாரிக்கு தெரிஞ்சும், அந்த பையன் இறுதிச் சடங்குல கூட தலை காட்டாம இருந்துட்டார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''திண்டுக்கல்ல இருந்து, நாகநாதன் நேத்து பேசினாராங்க...'' என, அந்தோணிசாமி விசாரிக்க, அரட்டை திசை மாறியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • N S Sankaran - Chennai,இந்தியா

    வன அதிகாரி மீது தப்பில்லை. ஏட்டாளுக்கு ஒரு மூட்டாள், மூட்டாளுக்கு ஒரு நொண்டிக் குதிரை னு ஒரு பழமொழி உண்டு. இவர் வன சர்கரை ஏவ, அவர் கார்டை ஏவ, அவர் மகனை ஏவ ....அந்த பையனின் விதி.

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    இயற்கையா நடைபெற்ற அந்த சவுக்கு வன சரகர் என்ன பண்ணுவார் பாவம். அவரு பால் பன்னு சாப்பிட ஆசைப்பட்டது தப்பாயா இதை போய் பெரிசா சித்தரிக்கிறீங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement