Advertisement

இது உங்கள் இடம்

அரைவேக்காடுகளே... திருந்துங்கள்!


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்,மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமேஸ்வரம் பேக்கரும்பில்,முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை, பிரதமர் மோடிசமீபத்தில் திறந்து வைத்தார்.கலாம் சிலை அருகில், பகவத்கீதை இருந்தது. அவ்வளவு தான்... திராவிட கட்சி தலைவர்களும், திராவிடம் என்ற போர்வையில் வேஷம் போடும் இதரகட்சித் தலைவர்களும் பொங்கி எழுந்தனர்.'கலாம் மதச்சார்பற்றவர்; அவர் சிலை அருகில் எப்படி இந்துக்களின் புனித நுாலாகிய பகவத் கீதையை வைக்கலாம்' எனக் கூறி, ருத்ரதாண்டவம் ஆடினர். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ரஷ்ய புரட்சி, பிரெஞ்சு புரட்சி, கிரேக்க நாகரிகம், ஏதென்ஸ் நகரின் கலாசாரம் என, பேச துவங்கினால், மணிக்கணக்கில் பேசுவார். அப்படிப்பட்ட அறிவு ஜீவி, 'அப்துல்கலாம் சிலை அருகில், பகவத் கீதையை அகற்றி, திருக்குறள் வைக்க வேண்டும்' என்கிறார்.
அதுமட்டுமல்லாமல், பகவத் கீதை, திருக்குறளை விடச் சிறந்ததா என, பட்டிமன்றம் போடுகிறார். இந்த அதிமேதாவியின் அறிவுத்திறன் கண்டு புல்லரிக்கிறது. திருக்குறளை உயர்த்த வேண்டி, இந்துக்களின் புனித நுாலை குறைத்து மதிப்பிடும், இவர் செயல் கண்டிக்கத்தக்கது.பைபிளையும், குரானையும் போற்றி வரவேற்கும், ஜி.கே.வாசன், முத்தரசன் போன்ற அரசியல் பெருந்தலைவர்களுக்கு ஒரு கேள்வி...பகவத் கீதை என்ன பாவம் செய்தது... உங்களை போல இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளால் தான்,தமிழகம், ௫௦ ஆண்டுகளாக சீர் குலைந்து நிற்கிறது.ரம்ஜானுக்கு, இஸ்லாம் தோழர்களோடு நோன்பு கஞ்சி அருந்தியும், கிறிஸ்துமஸ்க்கு கேக் வெட்டி, வாழ்த்து சொல்லும் அரசியல்வாதிகளே, இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா... அது எல்லாம் ஓட்டுக்கு என்பது சிதம்பர ரகசியம் இல்லை.
கொள்கையே இல்லாத நீங்கள் எல்லாம், ஏதோ பெரிய மகான்கள் போல அறிக்கை விடுவதை தான், தமிழர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை!


கமலை மிரட்டினால்ஊழல் இல்லைஎன்றாகி விடாது!


என்.எஸ்.குழந்தைவேலு, சங்ககிரி, சேலம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நடிகர் கமலஹாசன், 'தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது' என்றார்.கொதித்து எழுந்த, தமிழக அமைச்சர்கள், 'ஆதாரமில்லாமல் கமல் போன்றோர் குற்றச்சாட்டு கூறக் கூடாது' என, கண்டித்தனர். அமைச்சர்களின் கூற்று ஏற்கத்தக்கது தான்.இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை, தற்போது மாநில அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளது; இதற்கு, அமைச்சர்கள் என்ன பதில் தர போகின்றனர்.அந்த அறிக்கையில், ௨௦௧௫ - ௧௬ நிதியாண்டில், தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள், ௨,௬௦௨ கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கியதில், ௬.௫௯ கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.திருமண உதவி திட்டம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ௪௮ விண்ணப்பதாரர்களுக்கு, இரண்டு முறை பணமும், தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி சேலை வழங்கியதில், ௪௩.௯௪ கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் திட்டக் கல்வியை, அ.தி.மு.க., அரசு உடனே அமல்படுத்த தவறி, அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை மாற்றி, புதிய புத்தகங்களை வெளியிட்டது.தி.மு.க., ஆட்சியில் அச்சடித்த புத்தகங்களை கிடங்குகளில் தேக்கி வைத்ததால், ௨௦௧௨ - ௧௬ வரையிலான காலக் கட்டத்தில் மட்டும் கிடங்கு வாடகையாக, ௧௩.௩௭ கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை ஜெயலலிதா அரசு விரயமாக்கியுள்ளது.தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பிற்கு, தமிழக அரசு, ௭ லட்சத்து, ௪௮ ஆயிரத்து ௪௫௩ சதுர அடி நிலத்தை, ௧௯௯௫ முதல் ௨௦ ஆண்டுகளுக்கு குத்தகை விட்டுள்ளது. முதல் ஐந்து ஆண்டுகள் மட்டுமே குத்தகையை அரசு பெற்றுள்ளது.
மேலும், ௨௦௦௦ - ௧௬ காலத்திற்கான குத்தகை தொகை, ௨,0௮௧ கோடி ரூபாய், இதுநாள் வரை வசூலிக்கப்படவில்லை. இதில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாபெரும் ஊழல் செய்துள்ளன.இதுதவிர, ௨௦௦௯ - ௧௫ காலக்கட்டத்தில், ஆதிதிராவிட மாணவர்களுக்கும், ஆதிதிராவிட மக்கள் மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துஉள்ளது.சென்னை, சி.எம்.டி.ஏ., எந்தவித புவியியல், நீரியல் ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்ட ௫௪.௩௩ கோடியில், ௫௧ வடிகால் மறு கட்டுமானம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.சென்னையில் நடந்த மழைநீர் வடிகால் பணியில், தரமற்ற குழாய்களை பயன்படுத்தியதில், ௩௫.௯௭ கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை விடவா... கமல் பட்டியல் போட்டு, ஊழல்களை அம்பலப்படுத்தினார்.கமல் மட்டுமல்ல, வேறு யாரும் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறினால், ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். விமர்சனங்கள் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் மீது பாய்வது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!

அப்துல்கலாம்ஆத்மாவிற்குநிம்மதி தருவோம்!


நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மத்திய கல்வி அமைச்சராக இருந்தாலும் சரி, மாநில அளவிலான கல்வி அமைச்சராக இருந்தாலும் சரி, உச்சியைத் தான் பார்க்கின்றனர்; உள்ளங்காலைப் பார்ப்பதில்லை.அஸ்திவாரம் சரியாக அமைந்து விட்டால், எவ்வளவு உயரத்திற்கும் கட்டடம் எழுப்பலாம் என்பது ஆன்றோர் சொன்ன விதி!தேசிய அளவில், எந்த மாநிலத்திலும் துவக்க கல்வியில் தன்னிறைவு அடைய வில்லை. துவக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி தரத்தை இன்னும் அதிகளவில் மேம்படுத்த வேண்டிஉள்ளது.இவ்வளவு காலமாக, அந்த முயற்சி எடுக்கப்படாததால், பள்ளிக் கல்வி துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.துவக்க, நடுநிலை, உயர்நிலைக் கல்வி மட்டும் நன்றாக அமைந்து விட்டால், எந்த பாடத் திட்டம் மாறினாலும், எத்தனை தேசிய அளவிலான பொதுத் தேர்வு வந்தாலும் மிகவும் எளிதே.
எந்த நிலையிலும் மனப்பாடம் தவறு; எதையும் புரிந்து எழுதுவது தான் சிந்தனைக்கல்வி என்பதை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்; அதையே, தேர்வுகளிலும் பின்பற்ற வேண்டும்.'பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் விரைவில் மாற்றப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்; அவரது முயற்சிக்கு சபாஷ் போடலாம்.
பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும், ஒவ்வொரு நடவடிக்கையும், உயர் கல்வி மேம்பாட்டிற்கு நிச்சயம் வழிவகுக்கும்!ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே முன்னேற்றம் போதும்; இதில் எல்லாம் அரசியல் வேண்டாம்.நாட்டின் அஸ்திவாரமான கல்வியை மேம்படுத்த, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கண்ட கனவை நிறைவேற்றி, அவரது ஆத்மாவிற்கு நிம்மதி கொடுப்போம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement