Advertisement

நல்ல அறிகுறி!

தமிழகத்தில் உள்ள சிறைகளில் அதிக அளவு கூட்டம் நிரம்பி இருப்பதற்கு, விசாரணைக் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தான் காரணம்; இதில், பெண்களும் அடங்குவர். சென்னை புழல் சிறையில், இத்தகைய கைதிகள் அதிகம். அதேசமயம், தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக் கிளை ஆகியவற்றில், நீதிபதிகள் கையாளும்வழக்குகள், முந்தைய காலத்தைப் போல இல்லை. அதற்காக, நீதிமன்றம் முன்பெல்லாம் செயல்படவில்லை என்ற வாதம் தவறானது. இன்று குற்றங்கள் பலவகையிலும், பன்முகப் பரிமாணம் கொண்டதாகவும் மாறி வருகிறது. பொதுவாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், சொத்து குறித்த வன்முறைகள் என்பதுடன், சிவில் வழக்குகளும் அதிகரித்துள்ளன. அடிக்கடி வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் நிலை, ஏழை மற்றும் பாமர மக்களை பாதிக்கிறது. சமீபத்தில், விபத்து காப்பு இன்சூரன்சில் நஷ்டஈடு பெறாமல், 24 ஆண்டுகள் காத்திருந்த பெண்மணிக்கு நியாயம் வழங்கிய நீதிபதி, இத்தனை நாள் காக்க வைத்திருந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்த செயல், நம் நீதியின் மாண்பு உயர்ந்ததின் அடையாளம். குற்ற வழக்கின் தகவல்களை காவல் துறை, மாவட்ட நீதிமன்றங்களில் கூட தராமல், அது ஐகோர்ட்டில் வழக்காக மாறும் போது, அதற்கான ஆவணத்தை பெற வேண்டி காத்திருக்கும் நிலை கூட, இப்போது தகவலாக வெளிவருகிறது. இதில், 'மெகா அதாலத்' என்ற நடைமுறை, தமிழகத்தில் அனாவசியமாக விசாரணைக் கைதிகளாக காத்திருந்த பலருக்கு விடியலைக் கொண்டு வந்திருக்கிறது.சென்னை புழல் தவிர, எட்டு சிறைச்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. சிறு திருட்டு, அமைதியைக் குலைத்த குற்றங்களில் கைதானவர்கள், சந்தேகத்தின் பின்னணியில் பிடிபட்டவர்கள், சமயத்தில் அரசியல் காழ்ப்புணர்வில் பிடிபடும் இளைஞர்கள் ஆகியோர், பிணையில் வெளிவரமுடியாத நிலை ஏற்படும். அவர்களுக்கு பிணையாக நிதி தர சுற்றத்தார் முன்வராத நிலையில் அல்லது அதற்கேற்ற நிதிவசதி இல்லை எனில், அவர்கள் ஜாமினில் உடனடியாக வர முடியாது. அப்போது, கீழமை நீதிமன்றங்கள் அவர்களை சிறையில் வைப்பதைத் தவிர வழியில்லை. சைபர் குற்றங்கள், கோடிக்கணக்கில் பணமோசடி, கொலைக்குற்றங்களில் ஈடுபட்டோர், வலுவான ஆதாரமில்லை என்ற வாதத்தில் வெளியே வரலாம். இதற்காக நீதியை குறை கூற முடியாது. இன்னமும் குற்றவியல் சட்டங்கள், பிரிட்டிஷ் நடைமுறை வாசகங்களையே கொண்டிருக்கின்றன. அதை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன. வேண்டாத, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றும் பணி மத்திய அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன், 570 விசாரணைக் கைதிகளுக்கு, 'மெகா அதாலத் திட்டம்' தமிழகத்தில், உதவியிருக்கிறது. ஒவ்வொரு வாரமும், 'லோக் அதாலத்' என்ற இத்திட்டம் குற்றவியல் வழக்கு மற்றும் சிக்கல் வழக்குகளில் ஈடுபடாதோரை விசாரிப்பது தொடர்கிறது. சிறையில் கஞ்சா, போதைப் பொருள், மொபைல் போன் புழக்கம் ஆகியவற்றை தடுக்க,சிறைத்துறை ஐ.ஜி., சைலேந்திர பாபு நடவடிக்கைஎடுத்து வருகிறார். இருந்த போதும், விசாரணைக் கைதிகள் மற்ற கிரிமினல் தண்டனை பெற்ற குற்றவாளிகளுடன் பழகியபின், அவர்கள் வெளியில் வந்ததும், அவர்கள் ஆணையைச் செயல்படுத்தும் சீடர்கள் ஆகிவிடுவது உண்டு. சிறையில் கற்கும் தொழில் அல்லது வேறு பணிகளில் சேர்ந்து வாழ்க்கைப்பாதையை மாற்றிக் கொள்பவர் சிலரே.
குற்றவாளிகளை கண்டறியும் முறைகளில் போலீசாருக்கு அதிக நவீனத்துவம் தேவையாகி விட்டது. 'காவல் துறை சீர்திருத்தம்' என்பது அதிகமாக பேசப்பட்டாலும் நிறைவேறவில்லை. இந்த நேரத்தில், 'லோக் அதாலத்' அப்பாவிகளுக்கு உதவும் தீர்வாக அமைந்திருப்பது நல்லது.
அதே சமயம், சிறைகளில் கூட்டம் இல்லை என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. கைதிகளை அனுப்பி, அவர்களை கண்காணித்து பராமரிக்க, தொகை கொடுத்தால், அண்டைமாநிலங்களில் உள்ள சிறைகளில் கூட்டம் குறைய உதவலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த யோசனையை ஏற்கும் மாநில அரசு, கைதிகளை பராமரிக்க உரிய நிதி, அந்தவிசாரணையை வீடியோ காட்சியில் நடத்துவது, அதற்கான நடைமுறைகள் உருவாக்குவதுஅவ்வளவு சாத்தியமானது அல்ல. ஆனாலும், சிறைகளில் ஊழல் குறையவும், அங்குள்ள நிலை மேம்பட, 'லோக் அதாலத்' போன்ற நடைமுறைகள், அர்த்தமற்ற பொதுநல வழக்குகள் குறைப்பு உட்பட, பல வழிகள்வந்திருப்பது, நல்ல அறிகுறியாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement