Advertisement

என் கடன் எழுதிப்போடுவதே...

என் கடன் எழுதிப்போடுவதே...

மதுரை உத்தங்குடியில் உள்ள ஒரு ஒட்டலில் சாப்பிட வருகின்றவர்களை கைகூப்பி வரவேற்று அவர்களை பசியாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார் ஒருவர்.
அவர் சட்டைப்பையில் நிறைய போஸ்ட் கார்டுகள் இருந்தது வித்தியாசமாகப்பட்டது, விசாரித்தேன்

பெயர் தேவமைந்தன்
நெல்லையில் பிறந்தவர் இயற்பெயர் கோபால்,நேர்மைக்கு மாறாக அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்க மனது இடம் கொடுக்காததால் அரசாங்க வேலையை இழந்தவர்.அதுபற்றி கவலையில்லாமல் கிடைக்கும் வேலையை பார்க்க மதுரை வந்தார், ஒட்டலில் உணவு பரிமாறும் வேலை கிடைத்தது.

மக்களை திருப்தியும் சந்தோஷமும் படுத்தும் வேலை என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்,கிட்டத்தட்ட நாற்பது வருட காலம் கொஞ்சமும் அலுத்துக்கொள்ளாமல் சலித்துக்கொள்ளாமல் இந்த வேலையை தொடர்கிறார் இப்போது மேற்பார்வையாளராக இருக்கிறார்.
அறுபத்தைந்து வயதிலும் பதினைந்து கிலோமீட்டர் துாரம் சைக்கிள் ஒட்டுகிறார் எந்த நோயும் இல்லாமல் இருக்கிறார் இதில் வரும் வருமானத்தை வைத்தே பிள்ளைகளை படிக்கவைத்து நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்துவிட்டார், உழைத்தது போதும் என்று பிள்ளைகள் சொன்னாலும் 'உழைத்து சாப்பிடும் சுகமே தனி' என்று சொல்லி அவர்களது வேண்டுகோளை நிராகரித்துவிட்டு ஒய்வுக்கு ஒய்வு கொடுத்தவர்.


நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நிறைய படிப்பார் அவ்வப்போது கவிதையும் எழுதுவார் இதன் காரணமாக கவிஞர் தேவமைந்தனாகிவிட்டார்.
வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிளில் வரும்போது மூடாத பள்ளம்,எரியாத தெருவிளக்கு,அள்ளாத குப்பை என்று கண்ணில்படும் அவலங்களை எல்லாம் குறித்துவைத்துக் கொண்டு அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஒரு கடிதம் போட்டுவிடுவார், ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய விஷயங்கள் என்றால் அதுபற்றி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிவிடுவார்.

இப்படி ஒரு நாளைக்கு நான்கு கடிதமாவது எழுதிவிடுவார்.பல விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருப்பார்.இப்படி இதுவரை இவர் எழுதிய கடிதங்கள் பல ஆயிரம் இருக்கும்.

என் வருமானத்திற்கு பணம் செலவிடமுடியாது, ரோட்டில் இறங்கி போராடமுடியாது ஆனால் அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டுவரமுடியும் அதைத்தான் செய்கிறேன், நான் நியாயமாக எதையும் எடுத்துச் சொன்னால் கேட்கும் அதிகாரிகளும் இருக்கின்றனர் உதாரணமாக ஒரு முறை அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோவை ஒரங்கட்டி நிறுத்திவைத்திருந்தார் ஒரு போக்குவரத்து ஆய்வாளர்.

நேராக சென்றேன், 'ஷேர் ஆட்டோக்காரர் செய்த தவறுக்கு பாவம் பொதுமக்கள் என்ன செய்வார்கள்? நேரத்திற்கு போனால் மட்டுமே வேலை கிடைக்கும் கூலி ஆட்கள் உள்ளே இருக்கின்றனர் அவர்கள் வாழ்க்கையை ஏன் சிரமப்படுத்தவேண்டும்' என்று சொன்னவுடன் லைசென்ஸை மட்டும் வாங்கிக்கொண்டு ஷேர் ஆட்டோவை ரீலீஸ் செய்தார் இப்படி மனதிற்கு சரி என்று படுவதை சொல்லாமலும் இவர் விடுவதில்லை.

ஒரு நாளைக்கு ஒரு நல்ல காரியம் அதுவும் பொதுக்காரியம் செய்யவிட்டால் எனக்கு அன்றைய நாள் நாளாகவே இருக்காது லட்சாதிபதிதான் புதைக்கப்படுவான் லட்சியவாதி விதைக்கப்படுவான் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் நிம்மதியுடன் தானும் வாழ்ந்து மற்றவர்களுக்காகவும் வாழும் லட்சியவாதி நான்.

மக்களுக்காக நான் எழுதும் கடிதங்களை மதித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் நன்றியும் கடமையும் பட்டுள்ளேன் என்று சொல்லும் தேவமைந்தனுடன் பேசுவதற்கான எண்:7449289311.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • usMaN Ali / உஸ்மான் அலி - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  பணத்துக்கு இல்லாமல் மன நிம்மதிக்கு வாழும் மனிதன் தான் நிம்மதியாக இருப்பான் வாழ்துக்கள் அன்பரே

 • sudharshana - chennai,இந்தியா

  உண்மையான தேவ மைந்தன். வாழ்த்துக்கள்

 • எல்.கே.மதி - Lalgudy,இந்தியா

  லட்சாதிபதிதான் புதைக்கப்படுவான் லட்சியவாதி விதைக்கப்படுவான்... சபாஷ் சரியான விளக்கம் தோழர் ஊத்தங்குடி கோபால் எனும் தேவ மைந்தன்.. கொள்ளையடித்து சேர்த்த கோடிக்கணக்கான சொத்தையும் அனுபவிக்காமல், கல்லறையில் புதைக்கப்பட்ட உத்தமியைப் பார்க்கிறோம்...கைப்பணத்தை செலவிட்டு, சேவை செய்யும் இதுபோன்ற உத்தமர்களையும் நாம் பார்க்கிறோம்... எல்லாருமே நமது தமிழக சரித்திர கதா நாயகர்கள் என்று பெருமைப்படுவோம்.....

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  செவிட்டு அதிகாரிகளின் காதிலும், அரசியல்வியாதிகளின் காதிலும் என்று விழுமோ விழட்டும்.

 • LAX - Trichy,இந்தியா

  சபாஷ்.. உமது பணி தொடரட்டும்.. சிறக்கட்டும்.. வாழ்க வளமுடன்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement