Advertisement

டீ கடை பெஞ்ச்

கட்ட பஞ்சாயத்தில் கல்லா கட்டும் போலீஸ்!


''சம்பளம் கிடைக்காம தவிக்கிறவங்க கிட்டே, இடமாறுதலுக்கு லஞ்ச பேரம் நடக்குதுங்க...'' என, பெஞ்ச் மேட்டரைத் துவக்கினார்
அந்தோணிசாமி.''எந்த துறையில பா...'' என்றார் அன்வர்பாய்.
''தமிழகத்துல, 864 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் இருக்குதுங்க... இந்த சங்கங்களுக்கு, புதிய கடன்களுக்கான நிதி பட்டுவாடா ஆகாததனால, நெருக்கடியில இருக்குது...
''இதனால, இங்கே வேலை பார்க்கற, ௪,௦௦௦ பேருக்கு, பல மாசமா சம்பளமே கிடைக்கலே... இவங்களை வேற துறைக்கு மாத்தி, நிலைமையைச் சமாளிக்கலாம்ன்னு அரசு யோசிச்சு, காலி இடம் பட்டியலையும்
எடுத்திருக்கு...''ஆனா, அந்தத் துறை பெரிய அதிகாரி, இதுக்கு ஒத்துழைக்க மாட்டேங்குறாரு... 'வருமானம் உள்ள சங்கங்களுக்காவது மாத்தி கொடுங்க'ன்னு கேட்டா அதுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசுறாங்க...
''பல மாசமா சம்பளமே இல்லாம தவிக்கிறவங்க கிட்டே, லஞ்சம் கேட்டு பேரம் பேசும் பெரிய அதிகாரிக்கு, மனிதாபிமானமே இல்லையான்னு பணியாளர்கள் புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அடடா... நான், 'வெள்ளியங்கிரி' வரைக்கும் போகணும்... திடீர்ன்னு ஞாபகம் வரது... கிளம்பட்டுமா...'' என,
குப்பண்ணா கிளம்பி விட்டார்.''கோவையில நடந்த, அ.தி.மு.க., பன்னீர் அணி செயல் வீரர்கள் கூட்டத்துக்கு, தொண்டர்கள் குவிஞ்சிட்டாவ வே...'' என, அடுத்த தகவலை துவக்கினார் அண்ணாச்சி.
''அதனால, பழனிசாமி அணிக்காரங்க கலங்கிட்டாங்களா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''கலங்கலாம் இல்லே வே... அவங்களே, பன்னீர் அணிக்கு ஆள் திரட்டிட்டு வந்து நின்னாங்கனா பார்த்துக்குமே... இந்த கூட்டத்தைப் பார்த்துட்டு, பழனிக்கு ஆதரவு தர கிளம்பின, மிச்ச சொச்ச பேரும், அமைதியா இருந்துட்டாவ வே...'' எனக் கூறிச் சிரித்தார் அண்ணாச்சி.
''பொதுவா, போலீஸ்காரங்க வசூல் வேட்டை நடத்துவாங்கன்னு சொல்றது வழக்கம்... அதுலயும், நத்தம், சாணார்பட்டி போலீஸ் அதிகாரி அளவுக்கு மீறி வசூலிக்கிறார் பா...'' என, கடைசி விஷயத்தைத் துவக்கிய அன்வர்பாய்,
தொடர்ந்தார்...
''திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில், படிப்பறிவு குறைந்த கிராமங்கள் நிறைய இருக்கு... இங்கே போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்க வர்றவங்கள்ல, வாதி, பிரதிவாதின்னு, ரெண்டு தரப்பிலிருந்தும், ஒரு போலீஸ்காரர் வசூல் செய்யறதுல கில்லாடியா இருக்காரு பா...
''இவருக்கு பக்க பலமா, எஸ்.எஸ்.ஐ., ஒருத்தரும் இருக்கறதா சொல்றாங்க... கட்ட பஞ்சாயத்துலயும், எல்லா தரப்புகிட்டேர்ந்தும் கறந்துடறாங்க...
''இவரோட அலப்பரை தாங்காம, மேலிடத்துக்குப் புகார் போச்சு... அவங்களும், இவரை வேற இடத்துக்கு மாத்த உத்தரவு போட்டாங்க... ஆனா, மதுரையில உள்ள பெரிய அதிகாரி மூலமா, டிரான்ஸ்பரை ரத்து செஞ்சுக்கிட்டாரு பா...'' என்றார்
அன்வர்பாய்.''நம்ம பார்த்திபன், ஏதாச்சும் புதுப் படத்துல நடிக்குதாரா வே...'' என, சினிமா பார்க்கும் ஆசை பொங்க, கேட்டார்
அண்ணாச்சி.''ஆமாம்ங்க... ஒரு படம் ரிலீஸ் ஆச்சு... பக்கத்து தியேட்டர்ல டிக்கெட் கவுன்டர்ல வேலை பார்க்குற, ராமையாவை எனக்குத் தெரியும்... வேணுமின்னா, டிக்கெட் வாங்கித் தர்றேன்...'' என்ற அந்தோணிசாமி, கிளம்பவே, மற்ற இருவரும் பின் தொடர்ந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement