Advertisement

இது உங்கள் இடம்

நரியூருக்கு பயந்து புலியூருக்குள் நுழைந்தானாம்!ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'வாட்' வரிக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி., என்ற பொது விற்பனை வரியை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஷேவிங் பிளேடு, பற்பசை, ஷேவிங் கிரீம் மீது, 14.5 சதவீத வரி இருந்தது. அவற்றிற்கு, ஜி.எஸ்.டி., பெயரில், 28 சதவீதமாக, ஒரே அடியாக வரியை உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிக்கும்!அதேபோல், 'துாய்மை இந்தியா துப்புரவு மேம்பாட்டு திட்டம்' என, மற்றவர்களுக்கு பாடம் சொல்லி தரும், மத்திய அரசு, 'கிளீனிங் லிக்விட்' போன்றவற்றை விட்டு வைக்காமல், அதற்கும், 14.5 இருந்து, 28 சதவீத வரியாக அறிவித்துள்ளது; இது, சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வரியை, மக்கள் வரியாக செலுத்தும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். மாறாக, ஜி.எஸ்.டி., வரியை அபராதமாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்; இது தான், எதார்த்தமான உண்மை!எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பொருளின் விலையில், மூன்றில் ஒரு பங்கு வரி விதிப்பது. எந்த வகையில், நியாயமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சாமானியனும் அன்றாடம் உபயோகிக்கும் மின் விசிறிக்கும், 14.5ல் இருந்து, 28 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. சிமென்ட் மீதான வரியும், இதே அளவில் உயர்த்தப்பட்டுள்ளது; இது, மிகவும் வருத்தம் அளிக்கிறது.
வரி உயர்வால், கட்டுமானத் துறை பெரிதும் பாதிப்படையும். சொந்த வீடு கனவில் உள்ள சாமானியன் வெகுவாக பாதிக்கப்படுவான். இவற்றை எல்லாம், மத்திய அரசு மறந்தது ஏனோ என, தெரியவில்லை.மொத்தத்தில், 'வாட்' வரியில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறியது, 'நரியூருக்குப் பயந்து புலியூருக்குள் நுழைந்தானாம்' என்ற பழமொழியை நினைவுப்படுத்துகிறது!வெளிநாடு வாழ்இந்தியர்களுக்கு'கிரேட் சல்யூட்!'

வி.எஸ்.மோகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: இன்று, தமிழகத்தில் விவசாயம் பொய்த்து விட்டது. பருவமழை சரிவர பெய்யாததால், ஏரி, குளம், அணைகள் வற்றி கிடக்கின்றன.குடிநீருக்காக, மக்கள் தெரு தெருவாக காலி குடங்களுடன் அலைகின்றனர். நிவாரணம் கேட்டு, விவசாயிகள் பல நாட்கள் டில்லியில் போராடி வருகின்றனர்.தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியினர் ஊர் ஊராக சென்று, ஏரி, குளங்களை துார்வாரும் பணிகளை மேற்கொள்கின்றனர்.இது, அரசியல் ஆக்கப்பட்டாலும், நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியை, கட்சி சார்பு இல்லாதோர் வெகுவாக பாராட்டுகின்றனர்.அதையும் தாண்டி, 'அனாதைக்கு தெய்வமே துணை' என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழக விவசாயிகளின் நிலைமையை அறிந்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது உதவ முன் வந்துள்ளனர்.'அமெரிக்க வாழ் தமிழ் அன்பர்கள், தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை துார் வாருவதற்கென்றே, மொய் விருந்து நடத்தி உள்ளனர்; அதில் கிடைத்த வருமானத்தை பயன்படுத்தி, தமிழக நிலங்களின் தரத்தையும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்' என்ற செய்தி சமீபத்தில் நாளிதழில் வந்தது; இது, நிச்சயம் வரவேற்கத்தக்கது.அதற்காக, 'எய்ம்ஸ் இந்தியா பவுண்டேஷன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியது. மொய் விருந்து மூலம், 58.௭௦ லட்சம் ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.இது, 'தமிழர்களை பற்றி கவலைப்பட, உலகில் சகோதரர்கள் உள்ளனர்' என்ற எண்ணத்தை, தமிழக விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.இவர்களைப் போல், உலகில் மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களும், குறிப்பாக, தமிழர்களும் இந்நிகழ்ச்சியை முன்னோடியாக்கினால், மாநிலத்தில் ஏரி, குளங்களை துார்வார முடியும்; விவசாயிகளின் துயர் நீங்கும்.
இம்முயற்சி, தமிழக அரசுக்கு செய்யும் சிறு உதவியாகவும் இருக்கும்!கருணாநிதியின்தப்புக்கணக்கால்வந்த வினை!


பி.முருகேசன், விரகனுார், மதுரை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: போராட்டம் அறிவிக்கும் அரசு ஊழியர்கள், 'பெரும்பான்மையான பொதுமக்களின், ௧ சதவீத ஆதரவாவது நமக்கு இருக்கிறதா' என, எண்ணிப் பார்ப்பது கிடையாது.எந்த அரசுத் துறை அலுவலகம் சென்றாலும், தங்கள் வேலையை, மக்கள் லஞ்சம் கொடுக்காமல் செய்து முடிக்க முடியுமா... அரசு அலுவலகங்களின் கதவுகளுக்கும், ஜன்னல்களுக்கும் வாய் மட்டும் இருந்திருக்குமானால், லஞ்சம் கேட்க அதுவும் தயங்காது!ஒரு நாள் சம்பளமாக, கொத்தனார்களுக்கு, 600 முதல், 800 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக சொல்வர். அக்னி நட்சத்திர வெயிலிலும், மழையிலும் வேலை பார்ப்பதை போல, மின் விசிறி, 'ஏசி' இல்லாமல் இவர்கள் வேலை பார்க்க முடியுமா...தனியார் வாகன ஓட்டிகள், ஜவுளிக் கடை தொழிலாளிகள், பெட்ரோல் பங்க் தொழிலாளர்களுக்கு வெறும், 200 அல்லது 300 ரூபாய் தான் தினச்சம்பளம் கிடைக்கிறது. இதுபோல, குறைந்த சம்பளம் பெறுவோர் ஏராளம்!அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதில், திராவிட கட்சிகள் சளைத்தவை அல்ல.கருணாநிதி, ஒரு படி மேலே போய், 'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்' என, அவரது ஆட்சி காலத்தில் அறிவித்தார்.இது, தனக்கும், தன் சந்ததியினருக்கும் மட்டும் நிரந்தரமாக ஓட்டளித்து, நிரந்தரமாக ஆட்சியில் மக்கள் வைத்திருப்பர் என்ற தப்புக் கணக்கு!ஆனால், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய, அரசு ஊழியர்களை ஒரு கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பினார், ஜெயலலிதா. பின்னாளில், அவரும் ஓட்டு வங்கியை கருதி, அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க துவங்கினார்.அரசு சாரா தொழிலாளர்கள் எவ்வளவோ கஷ்டங்களிலும், குறைந்த சம்பளத்தில், வட்டியும், தவணையுமாக இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். அரசு அலுவலர்களுக்கு, எவ்வளவு சம்பளம், சலுகை அளித்தாலும் திருப்திபடுவது கிடையாது.அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், போதவில்லை எனக் கூறி, வீதியில் இறங்கி போராட வருவதை தான், மக்கள் வெறுக்கின்றனர்.மற்றவர்களின் வாழ்க்கை தரத்தை பார்த்தாவது, அரசு ஊழியர்கள், தங்கள் மனநிலையை மாற்றியே தீர வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் பொதுமக்களைப்பற்றி ஏகத்துக்கும் கவலைப்பட்டு ஜி எஸ் டி வரி ஒரு தண்டனையாகவே உள்ளது என எழுதியுள்ளார். அந்த தண்டனையைக்குறைக்க ஒரே வழி நீங்கள் உங்களது உறுப்பினர்களிடம் சொல்லி பில் இல்லாமல் எந்த பொருளையும் விற்கக்கூடாது என்ற உறுதிமொழியை எடுக்கச்சொல்லுங்கள். அதுவே மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். விலைவாசியும் ஏறாமல் இருக்கும்.

  • G Mahalingam - Delhi,இந்தியா

    Total taxes PREGST rate : s cream, paste etc. 28.5% including Excise Duty and VAT. Now it is 28%

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement