Advertisement

அ.தி.மு.க.,வில் அதிகமான புதிர்...

தமிழகத்தில் வறட்சி பாதிப்பும், வேறு சில முக்கிய பிரச்னைகள் நீடித்த போதும், ஆளும் அ.தி.மு.க., கட்சியில் எத்தனை அணிகள், அவர்கள் ஒன்றிணைவரா, என்ற அடிப்படையில் எழும் விவாதங்கள் அதிகமாகி விட்டன.

அ.தி.மு.க., கட்சியை இயக்கும் பொதுச்செயலர் சிறையிலிருக்கும் சசிகலா என்றால், அது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம். அவருக்கு கட்சித் தலைமைப் பதவியை, அன்று தந்தவர்கள் இன்று கூறும் பரப்புரைகள் மாறுபட்டதாக உள்ளன. அவரது உத்தரவின்படி தமிழக அரசை முதல்வர் பழனிசாமி நடத்துகிறார் என்று கூறி வழக்கு எழுந்திருக்கிறது. பொதுவாக அரசுப் பதவி வகிக்கும் ஒருவர் தனது பதவி குறித்த தகவல்களையும், அரசின் செயல்பாடுகளை
விவரித்து சிறையிலிருக்கும் ஒருவரிடம் உத்தரவு பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானது என்பது பொதுவானது. இதற்கு மதுரை ஐகோர்ட் கிளை தரப்போகிற தீர்ப்பு முக்கியமான வழிகாட்டலாம். அத்துடன் தமிழகத்தில் நலவாழ்வு அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், தன்மீது வருமான வரித்துறை சோதனைகள் நடத்திய போதும், அதற்காக பதவி விலக போவதில்லை என்பதை அழுத்தமாக கூறிவருகிறார். அதை முதல்வர்
ஆதரிப்பது ெவளிப்படையானது. அவருக்கு கடந்த தேர்தலில் 139 ஏக்கரும், புளூமெட்டல் தொழில் இருப்பதாகவும், பினாமி சொத்து இல்லை என்றும் தன் ஆவணங்களில், தெரிவித்திருக்கிறார். அவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது நெருங்கிய வட்டத்தின் மூலம் பின்னணிகளை அறிந்து தானே எம்.எல்.ஏ. பதவிக்கு தேர்வு செய்திருக்கிறார்? அதை இப்போது கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் அறியாமலா இருப்பர்? தவிரவும் 'கூவத்துார் 'சம்பவத்தில் ஏன், வருமான வரித்துறை சோதனை நடத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்பது போல, அ.தி.மு.க.,அம்மா அணித் தலைவர் பன்னீர்ச் செல்வமும் அதே கேள்வியை எழுப்புகிறார். முதல்வர் பழனிசாமி அணியில் இணையப்போவதில்லை என்று அறிவித்த இவர், எப்படி அ.தி.மு.க., கட்சி முழுவதும் தன் வசம் உள்ளது என்பதை நிரூபிப்பார் என்பது சந்தேகமே.
அணிகளுக்கு நடுவே அதிக முரண் இருக்கும் போது, தேர்தல் கமிஷன் எந்த ஆவண ஆதாரத்தில், 'இரட்டை இலை' யாருக்கு என்பதை முடிவு செய்யும்? முந்தைய காலத்தில் வலுவாய்ந்த தலைவர்களான நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே. பட்டேல் ஆகியோர் அணியை 'சிண்டிகேட்' என்றாக்கி, 'கை' சின்னத்தை காங்கிரஸ் சின்னமாக மாற்றிய இந்திரா அரசியல் துணிவு போல, அ.தி.மு.க.,வில் தலைமை இல்லை: அதை மாநிலக்கட்சிகளிடம் அதிகம் எதிர்பார்க்கவும் முடியாது. தற்போது அ.தி.மு.க.,வில், கட்சி நிர்வாக உறுப்பினர்கள் பட்டியலை ெவளியிட்டிருக்கிறார் தினகரன். அக்கட்சியினருக்கே, யார் அணியில் இடம் பெற்றால் நிலைக்க முடியும் என்பது
ஏற்கனவே புதிரானதால், மாறுபட்ட கருத்துக்களைப் பலரும் பேசுகின்றனர். இந்த நிலையில், இப்பட்டியல் நீண்ட குழப்பத்திற்கு வித்திட்டிருக்கிறது. எவர் தலைமையில், யார் யார் என்ற அடுத்த விளக்கங்கள் இனி வரத்துவங்கும். அதிருப்தி கொண்டவர்கள், தி.மு.க., பக்கம் அணி சேரலாம் என்றால், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் முன் ஆயிரக்கணக்கில் இதுவரை வந்து சேர்ந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்கிற போது, அ.தி.மு.க., என்பது தி.மு.க.,வை ஆட்சிக்களத்தில் எக்காலத்தும் அனுமதிக்க விரும்பாத கட்சியாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்ற கருத்து மட்டும் தெளிவாகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், இதில் உள்ள அதிக குழப்பங்கள் வெடிக்கும். கூவத்துார் சம்பவத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தாதது ஏன் என்பதை, இன்று பெங்களூரு அமைச்சர் வீட்டு வரிச் சோதனையுடன் இணைத்து ஒப்புமை கூறக்கூடிய விஷயம் அல்ல: அ.தி.மு.க., என்பது மாலுமி இழந்த கப்பல் போல இருந்த காலத்தில், மற்றொரு தேர்தலை சந்திக்க துணிவில்லாத, எம்.எல்.ஏ.,க்கள் கூவத்துாரில், அணியாக இருந்தது மட்டும் இன்றி, அதில் இடம்பெறாத பன்னீர் அணி எம்.எல்.ஏ.,க்களும், அரசுக்கு ஆதரவாக சட்டசபையில் ஓட்டளித்தனர் என்பது வரலாறு. அதற்குப் பின் அக்கட்சியில் அதிக குழப்பங்கள் தொடர்ந்தது ஏன் என்பதே இன்றைய வினா? தமிழகத்தில் உள்ள கட்சிகளில் இம்மாதிரியான, 'அரசியல் விசுவாசம்' ஜனநாயகத்தைத் தாண்டி நிற்பது வழக்கமாகி விட்டது. எதிர்த்தால், 'துரோகி' என்ற பட்டத்தை பெற அஞ்சி, பதவியில் நீடித்து வளமான வாழ்வு காண விரும்புகின்றனர். இதற்கு முடிவு காண்பது, ஓட்டளிக்கும் மக்கள் சுயசிந்தனை சம்பந்தப்பட்ட விஷயமாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement