Advertisement

சொல்கிறார்கள்

தன்னம்பிக்கையை கொடுத்து நோயை விரட்டும் புன்னகை!

'ஸ்மைல் வித் ரஷ்மி' என்ற முகநுால் பக்கம் மூலம், புற்று நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வரும், ரஷ்மி மெஹ்ரா குமார்:மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத், சொந்த ஊர். 2000ம் ஆண்டில், மும்பை வந்தோம். எம்.பி.ஏ., முடித்தவுடன் திருமணமானது. என் கணவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

எனக்கு இரு குழந்தைகள். நானும் நிதி ஆலோசகராக இருந்தேன். 2016 ஜனவரியில் எனக்குள் சோர்வை உணர்ந்தேன். பயங்கரமான முதுகுவலி வரும்; சாப்பிட்டதும் ஜீரணமாகாத மாதிரி இருக்கும்; மாதவிடாயும் சரியாக இல்லை. டாக்டர் சில மாத்திரைகள் கொடுத்தார். ஆனால், என் உள்ளுணர்வு, 'சோனோகிராபி' பரிசோதனை எடுக்க கூறியது.

டாக்டரிடம் கேட்டு எடுத்ததில், கருப்பையில் கட்டி இருப்பது தெரிந்தது. கர்ப்பப்பை புற்றுநோயால் ஆரம்பத்தில் அழுதாலும், கொஞ்சம் கொஞ்சமாக மனசை திடப்படுத்தி கொண்டேன். ஆப்பரேஷனுக்கு பின் மருத்துவமனையில் இருந்த, 10 நாள் பெரும் வலியானது.

அதுவரை என் குழந்தைகளை, அவ்வளவு நாள் பிரிந்து இருந்ததில்லை. அம்மா, அப்பா கூடவே இருந்தனர். எப்பவுமே எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார் அப்பா. அவர் கையை பிடித்து கொண்டாலே போதும், 'பாசிட்டிவ் எனர்ஜி' வந்துவிடும். நான் துவண்டு போகும்போதெல்லாம், என் கணவர் ஆறுதல் படுத்தினார்.

அப்போது, 8ம் வகுப்பு படித்து வந்த என் மகனுக்கு, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை பிடிக்கும். அவர் எழுதின, 'தி டெஸ்ட் ஆப் மை லைப்' புத்தகத்தை படிக்க கொடுத்தேன். அதை அவன் படித்து முடித்ததும், 'அம்மாவுக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்கு. தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், நான் குணமாயிடுவேன்'னு சொன்னேன்.

அதற்கு அவன், 'நீயும் யுவராஜ் சிங் மாதிரி, அமெரிக்கா போய் சிகிச்சை எடுத்துக்கோ' என்றான். பக்குவமான அவனது பதிலை கேட்டு சந்தோஷப்பட்டதுடன், இங்கேயே சிகிச்சை எடுத்து கொள்வதாக கூறினேன்.

ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மகளிடம், 'அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை' என்றேன். 21 நாட்களுக்கு ஒருமுறை, கீமோ தெரபி சிகிச்சை எடுக்க வேண்டும். கீமோ தெரபி செய்தால், வலி மூன்று நாள் இருக்கும் என்பதால், வெள்ளிக்கிழமை செய்து, அடுத்து வரும் விடுமுறை நாட்களில் குடும்பம் சூழ இருந்து, வலியை மறப்பேன். 'உனக்கு என்ன வேணும்மா... நான் மசாஜ் பண்ணி விடவா...' என, மகன் கேட்கும் போது கண் கலங்கி விடுவேன்.

நோயிலிருந்து மீண்ட பின், 'ஸ்மைல் வித் ரஷ்மி' என்ற முகநுால் பக்கத்தை துவக்கி இருக்கிறேன். என்னை மாதிரி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஆரம்ப நிலையில் இருக்கிறவர்களின் பயம், சந்தேகங்களை போக்க, நிறைய விஷயங்களைப் பதிவிட்டேன். பலரும் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தனர்.

தொடர்ந்து, 'கேன்சர் கோ' என்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தேன். டில்லி, மும்பை, கோல்கட்டா என, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு போய் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். அதையெல்லாம் என் முகநுால் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுகிறேன்.
வலிகளோடு இருக்கிறவர்களுக்கு நாம் சிந்தும் புன்னகை, பெரும் தன்னம்பிக்கையை கொடுத்து நோயை விரட்டும். என்னாலான சின்ன சேவை இது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement