Advertisement

டீ கடை பெஞ்ச்

டீ கடை பெஞ்ச்

தி.மு.க.,வில், மா.செ.,க்களை மாற்ற ஏற்பாடு?''பட்டி தாண்டுச்சாம் ஆடு... பதறிப் போனாராம் கீதாரிங்குற கணக்கா போச்சுங்க...'' என்று, சீரியஸான உரையாடலை செருமியவாறே துவக்கினார் அந்தோணிசாமி.
''விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''கோயம்புத்துாருல காங்கிரஸ் பேரியக்க மூத்த தலைவர் ஒருத்தர், போன எலக் ஷன் நேரத்துல, ஜி.கே.வாசனை அம்போன்னு விட்டுட்டு வந்து, ஜெ., கருணையில மேல்சபை எம்.பி., யானாரே... அவரு இப்ப, பழனிசாமி அணியில இருக்காரு...
''அவரோட, மகேசன் பெயரைக் கொண்ட பெண், எம்.எல்.ஏ., இருந்தாங்க... ஆறுகுட்டி எம்.எல்.ஏ., பன்னீர் அணியிலிருந்து கழண்டு, பழனிசாமிகிட்டே ஓடினதும், இந்தம்மா, பன்னீர் அணியில சேர்ந்துட்டாங்க...
''இதனால, அந்த முருகன் பேரு கொண்ட, எம்.பி., ஆடிப் போயிட்டாராமுங்க...'' என்றார்
அந்தோணிசாமி.
''சாமியே வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்க மாட்டேங்காரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''எந்த துறையில, எங்க நடக்குது பா...'' எனக் கேட்டார் அன்வர் பாய்.
''திருவள்ளூர் மாவட்டத்தில, 14 ஒன்றியத்தில, உதவியாளர்களாக வேலை பார்க்குற, 13 பேர், பிப்ரவரி மாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவிக்கு தகுதியாயிட்டாவ... ஆனா, மாவட்ட திட்ட இயக்குனர், அந்த, 13 பேருக்குமான பதிவு மூப்பு பட்டியலை, இன்னும் கலெக்டர் ஆபீசுக்கு அனுப்பி வைக்கலே...
''மத்த மாவட்டங்கள்ல, இந்த வேலையெல்லாம் ஜரூரா நடக்கு... திருவள்ளூர்ல, செத்த மந்தம் தான்...'' என்றார் அண்ணாச்சி.
''நம்ம குமார், ஏதோ டிரான்ஸ்பர் கேட்டுண்டு இருந்தானே... கிடைச்சுதாப்பா...'' என, போனில் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த அன்வர்பாய், பதில் கிடைத்ததும், இணைப்பைத் துண்டித்தார்.
''நானும் ஒரு கோவை மேட்டர் சொல்றேன்... ஆனால் இது, தி.மு.க.,வை பத்தினது...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
''சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''கோவை மாவட்டத்துல, அ.தி.மு.க.,வுக்கு, புறநகர், மாநகர்ன்னு, ரெண்டு மாவட்டம் தான் இருக்கு... ஆனா, தி.மு.க.,வுல, கட்சி வளர்க்கிறோம்னு சொல்லி, நாலு மாவட்டமா பிரிச்சுட்டா...
''ஆனா, ஒரு பலனும் இல்லே... மாவட்ட செயலர், மாவட்ட பொறுப்பாளர்ன்னு எல்லாரையும் மாத்திப் பாத்தாச்சு... சமீபத்துல கூட, எம்.எல்.ஏ., கார்த்திக்கை, ஒரு மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிச்சா...
''மத்த மாவட்ட செயலர்களையும், மாத்தணும்னு, மறுபடி, 'பெட்டிஷன்' பறக்கறது... தெற்கே, பொறுப்பாளராக போட்ட ஒருவரையே மாத்தணும்னு சொல்றா... 'கட்சியிலுள்ள தலித் நிர்வாகிகள் அல்லது தொண்டர்களை மதிப்பதேயில்லை...
'அவர்களுடைய வீடுகளுக்குப் போவதையும், அவர்களை தன் வீட்டிற்குள் அனுமதிப்பதையும் தவிர்க்கிறார்'னு புகார் எழுதி, தலைமைக்கு அனுப்பி இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''நாயரே... உம்ம கடைக்கு, என் பிரண்டு முத்துசாமி வருவார்... அவர் என்னென்ன கேக்கறாரோ எல்லாத்தையும் குடும்... என் கணக்குல எழுதிடும்...'' என்றார்.நாயர், 'சரி' என்றவாறு தலையசைத்தார்; நண்பர்கள் கிளம்பினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அந்த 13 பேரும் அட்வான்ஸ் 'காணிக்கை' செலுத்தி அதிகாரியை திருப்திப்படுத்த வேண்டும் என்ற சிக்னலைக்கூட புரிந்துகொள்ளாத பிகிருதிகளாக இருக்கிறார்களே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement