Advertisement

இது உங்கள் இடம்

வாழ்வை இனியும் கெடுக்காதீர்கள்!

ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'ஹிந்தி, சமஸ்கிருதத்தை, தமிழன் எவனும் படிக்கக் கூடாது' என போராடி, மூன்று தலைமுறை தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பை கெடுத்தவர்கள், அண்ணாதுரையும், கருணாநிதியும் தான்!

இன்று, அதே கொள்கையை கையில் பிடித்து, மாணவர்களை துாண்டுகிறார், தி.மு.க.,வின் செயல் தலைவர் ஸ்டாலின். மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சியை கெடுத்ததில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்; இன்று, இவர்களுடன் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார்.

'ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும், தமிழகத்தில் நுழைய விட மாட்டேன்' என்கிறார், ஸ்டாலின். மேலும், 'மாணவ, மாணவியரே, கல்லுாரிக்கு மட்டம் போட்டு, மனித சங்கிலி, மறியல் போராட்டத்திற்கு உருண்டு, திரண்டு வாருங்கள்' என, அறிக்கை விடுகிறார்.
'தென் மாநிலங்களில், தமிழகத்தில் உள்ளோர் தான் அதிக அளவில் ஹிந்தி பயின்று வருகின்றனர்' என, தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது. ஹிந்தி படிக்க மாணவர்களிடையே விருப்பம் இருக்கும் போது, அதை தடுக்க அரசியல்வாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது...

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழியை போல், ஹிந்தி மொழியையும் ஒரு பாடமாக வைத்திருந்தால், இன்று வேலைக்காக, 'குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கதை' நடந்திருக்காது. அன்று, திராவிடம் என்ற பெயரில் மாணவர்களின் வாழ்வை கெடுத்தீர்கள். இன்று, இந்தியன் என்ற தேசப் பற்று வளர்ந்து, நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும், எந்த மாநிலத்தவரை சேர்ந்தவரும் வேலை செய்யலாம் என்ற அளவிற்கு நாடு பரந்து, விரிந்து தொழில் மயமாகி விட்டது. தமிழன் வேலை தேடி சென்றால், மொழியால் தடுமாறுகிறான். இனியும், இந்நிலை வேண்டாம்.

போலி போராட்டங்களை நடத்தி, மாணவர்களின் எதிர்கால வாழ்வை இனியும் கெடுக்க வேண்டாம், மிஸ்டர் ஸ்டாலின்!

இவற்றை எல்லாம்நிறைவேற்றினால் யாவரும் நலம்!

வீ.ராஜகோபால், சென் னையிலிருந்து எழுதுகிறார்:
தமிழக அரசால், நிலம் வரைமுறைப்படுத்தல் சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 'இதுவரை, 5,000 பயனாளிகள், தங்கள் நிலங்களுக்காக வரைமுறை படுத்தல் பதிவு செய்துள்ளனர்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 2. 60 லட்சம் நிலங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய நிலையில், பெறப்பட்டுள்ள இப்பதிவுகள் மிகவும் குறைவு. கணினியின் மின்னணு பதிவேற்றம் மூலம், இதை பதிவு செய்யப்பட வேண்டும்; அதனால் தான், இரண்டு மாதங்களில் குறைவான பதிவே நிகழ்ந்துள்ளது.
நிலம் வைத்திருப்போர் வீட்டில் எல்லாம், கணினி இருக்கும் எனவும், அவர்கள் அனைவரும் கணினி அறிவு உள்ளோர் என்றும் கூறி விட முடியாது; கிராமங்களிலும் அதே நிலை தான்! அரசு கூறிய, 5,000 பயனாளிகள் கூட, தங்களுக்கு உள்ள கணினி அறிவு உள்ளதன் காரணமாகவும், வீட்டில் இருந்தே, தங்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்திருப்பர்.

சென்னை, எழும்பூரில் உள்ள, எம்.எம்.டி.ஏ., அலுவலகத்தில், தற்போது புதிய கட்டடங்களுக்கான அனுமதி பெறப்பட மின்னணு பதிவை துவங்கியுள்ளது. ஆனால், நிலங்களுக்கான வரைமுறைப்படுத்தலுக்கு மின்னணு பதிவேற்றத்திற்கு, அலுவலகத்தில் வசதி செய்து தரப்படவில்லை. முதற்கட்ட விசாரணை மட்டுமே பெறப்படுகிறது. இதுவும் ஒரு குறைபாடு!

அதற்கு, முறையாக வசதி செய்யப்பட்டிருந்தால், நிறைய பயனாளிகள் பதிவு செய்ய ஏதுவாக அமையும். எல்லா அரசு கேபிள் 'டிவி' மையங்கள் மற்றும் மண்டல மாநகராட்சி அலுவலகங்களில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னணு சர்வீஸ் மையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா மாற்றம் போன்ற இதர வேலைகளுக்கான சான்றிதழ் பெற வசதி உள்ளது.

அரசு நில வரைமுறைக்கு மின்னணு பதிவு செய்ய அதற்கென வழிமுறை செய்யப்படாததால், பயனாளிகள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். கிராமங்களிலும் நிலம் வரைமுறைக்கான பதிவு அலுவலகம் திறக்க, சில முக்கிய இடங்களில் வழிவகை செய்ய வேண்டும்.
அப்போது எஞ்சியுள்ள, மூன்று அல்லது நான்கு மாத அவகாச காலத்தில் நிறைய பயனாளிகள் பதிவு செய்ய வாய்ப்புண்டு. அதேபோல், பழைய கட்டடங்களுக்கான வரைமுறைப்படுத்தலுக்கும், இதே வழியை பின்பற்றலாம். அதற்கென உரிய கட்டணம் வசூலித்தால் தான் வருமானமும் வரும்!

இந்திய பல்கலைகள்உலக தர பட்டியலில்இடம் பெற முடியும்!

ஈ.எஸ்.சந்திரசேகரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது; இது, ஒப்புக்கு தேர்ச்சி பெற செய்து, மேல் வகுப்புகளுக்கு அனுப்பும் முறையால், கல்வி தரம் குறைவதை தடுக்கும் முயற்சி!

இன்று, பாடத் திட்டத்தில் மாணவர்களின் சிந்திக்கும் செயல் திறனை கண்டுபிடிப்பதற்கு எந்தவிதமான கேள்விகளும் இல்லை. எட்டாம் வகுப்பு வரை எவ்விதமான அறிவை பெறாமலே, அடுத்தடுத்து மேல் வகுப்புகளுக்கு பாஸ் செய்யப்படுவதால், அவர்களால், 'நீட்' போன்ற தேர்வுகளில் ஜொலிக்க முடிவதில்லை.

'தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருந்தார். இது, சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
கட்டட வசதி, தரம் வாய்ந்த ஆசிரியர்களை மட்டும் பணியில் அமர்த்துவது உள்ளிட்ட காரணங்களால் தனியார் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து நிற்கிறது. நுாலகம், மாணவர்களின் தனி திறமைகளை வெளி கொணரும் அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களே, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர்.

'உலக தரத்திலான, 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என, பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இது, பாராட்டுதலுக்குரியது. ஆனால், நாட்டில் எந்தெந்த இடங்களில் நிறுவனங்கள் அமைக்கப்படும் என கூறவில்லை. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், கோடிக்கணக்கான மாணவர்களுக்கு, வெறும், ௨௦ கல்வி நிறுவனங்கள் மூலம் சமசீரான அறிவை வழங்க முடியுமா... ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தபட்சம், ௧௦ உலக தரத்திலான கல்வி நிறுவனங்களை திறந்தாலாவது, கல்வித் தரம் உயரும்!

உலக தரம் வாய்ந்த பாட திட்டத்தை அமைக்கும் முன், மேலை நாட்டு கல்வியாளர்களை அழைத்து ஆலோசித்தால், சிறந்த பாடத்திட்டம் அமையும். இவற்றை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தினால், உலக பல்கலை தர வரிசை பட்டியலில், இந்திய பல்கலைக் கழகங்கள் நிச்சயம் இடம் பெறும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement