Advertisement

சொல்கிறார்கள்

விஷ ஜுரத்திற்கு அருமருந்து!


'டெங்கு'விலிருந்து தப்ப வழிகளை கூறும், சித்த மருத்துவர் செல்வ சண்முகம்: 'ஏடிஸ்' கொசு மூலமாக டெங்கு கிருமி, உடம்புக்குள் போனால் மட்டுமே, டெங்கு வர அவசியம் கிடையாது. எந்த அறிகுறியும் இல்லாமல் அந்த கிருமி, நம் உடம்புக்குள் வந்து, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வெளியேறவும், 100 சதவீத வாய்ப்பு உண்டு. நம் உடம்பின் எதிர்பாற்றல் நன்றாக இருந்தால், எதுவும் செய்யாது.உடலில் வெள்ளை அணுக்களில், நம்மை காப்பாற்றும் போர் வீரர்கள் போல் இருக்கும், இரண்டு வகை செல்களின் வீரியம் குறைந்தால், கிருமிகள் எளிதில் தாக்கும். செயற்கை ரசாயனக் கலவை உணவுகளால் பலவீனமடைந்து விட்ட நம் உணவு முறை தான், கொள்ளை நோய்களின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்பட காரணம்.அதுமட்டுமின்றி, இயற்கையான வாழ்க்கை முறையில் இருந்து ரொம்ப விலகி விட்டோம். அடிப்படை நோய் எதிர்ப்பாற்றலை குழந்தைகளுக்கு தரும், 'உறை மருந்து' கொடுப்பது, பல குடும்பங்களில் வழக்கத்தில் இல்லை. உறை மருந்து, குழந்தையின் உடலில் உள்ள இயற்கையான எதிர்பாற்றலை ஊக்குவிக்கும் அருமருந்து.கடுக்காய், அதிமதுரம், ஜாதிக்காய், ஓமம், வசம்பு, சுக்கு இதெல்லாம் சம அளவில் கலந்து, அரைத்து, சுண்டு விரல் நுனி அளவுக்கு உருட்டி, நிழலில் காய வைத்து உறை மருந்து தயார் செய்யலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள், சித்த மருத்துவ கடைகளில் உறை மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொள்ளலாம்.அதை, ஒன்று அல்லது இரண்டு உரசல் உரசி, தாய்ப்பாலில் கலந்து, பச்சிளங் குழந்தையின் நாக்கில் தினமும் தடவ வேண்டும். பிறந்த குழந்தை என்றால் ஒரு உறை, இரண்டு மாதங்களில், 2 உறை; மூன்று, நான்கு மாதங்களில் மூன்று, நான்கு உறை; ஆறு மாதங்கள் எனில், அரை மாத்திரை அளவு, தாய்ப்பாலில் குழைத்து தரலாம்.
சிறுவயதில் உறை மருந்து கொடுக்காவிட்டால், ஐந்து - 12 வயது வரை உள்ள குழந்தை களுக்கு, 3 - 5 மாத்திரைகளை தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கலாம்.விஷ ஜுரம் தணிக்கும் மருந்து தான், நிலவேம்பு குடிநீர். குறிப்பிட்ட விஷ ஜுரம் வரக்கூடிய காலக்கட்டத்தில், முன்னெச்சரிக்கையாக இதைக் குடிக்கலாம். 400 மி.லி., தண்ணீரில், 5 கிராம் நிலவேம்பு பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, அதை, 100 மி.லி.,யாக வற்ற விட்டு, வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.காய்ச்சல் வந்து விட்டால், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இதைக் கொடுத்து கொண்டே இருக்கலாம்; எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத கஷாயம் இது. அலோபதி மருந்து சாப்பிட்டாலும், இதையும் சேர்த்து சாப்பிடலாம்; பாதிப்பு எதுவும் இல்லை. விஷ ஜுரம் எல்லாவற்றிற்கும் அருமருந்து இது.இது தவிர, கபசுர குடிநீர், அமுக்குரா, திரிகடுகு, பிரம்மானந்த பைரவம், விஷ்ணு சக்கரம், வாத ராட்சதன், லிங்க செந்துாரம், சண்டமாருத செந்துாரம் போன்ற மருந்துகள், டெங்குவை குணப்படுத்திவிடும்.
ரத்தக்கசிவு நிற்க, ஆடாதொடா இலைச்சாறு, இம்பூறல் மாத்திரை உள்ளது. இவற்றால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. இதிலேயே, 99 சதவீதம் சரியாகிவிடும். உயிரிழப்பு, மிக அரிது.


பெண்ணால் குடும்பம், தொழிலைதிறம்பட செய்ய முடியும்!


சென்னை பட்டாபிராமில், 'தனிரசா பவுண்டேஷனின்' தலைவி பிரியா தன்ராஜ்: ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த, எஸ்.எஸ்.புரம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த எங்கள் பெற்றோர், விவசாயிகள். ஆங்கில வழிக் கல்வியை நான் மேற்கொள்வதற்காக, சென்னையில் வாடகை வீடு எடுத்து வசித்தோம். விவசாயத்தை அங்கே தொடர்ந்த அப்பா, அவ்வப்போது வந்து செல்வார்.பிசியோதெரபி முடித்த நானும், தன்ராஜும் காதலித்து, திருமணம் செய்து கொண்டோம். சென்னை பெரு வெள்ளத்தின்போது, ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ராதா ரெஜென்ட் ஓட்டலின், 'செப்' கோபிநாத், நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த் உதவி செய்தனர்.கிட்டத்தட்ட, 10 ஆயிரம் பேருக்கு சமைத்து, 'பேக்' செய்து வினியோகம் செய்தோம். என் மீதே அப்போது தான், நம்பிக்கை வந்தது. நான்கைந்து தினங்களுக்குப் பின், டில்லியில் இருந்து தோழி ஒருவர், ஒரு லட்ச ரூபாய் பணம் அனுப்பினார்.அங்கிருந்து, இங்கு உதவ வந்த, 'கூஞ்ச்' என்ற தொண்டு நிறுவனம், ஒரு கன்டெய்னர் நிறைய உதவி பொருட்களை தந்தது. 'தன்னார்வலராக மட்டுமே இந்தப் பணியைத் தொடர முடியாது; சேவை நிறுவனமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்' எனவும் ஊக்கம் தந்தது. 2016 ஜனவரியில், 'தனிரசா' உதயமானது.திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 19 குளங்களை சுத்தம் செய்திருக்கிறோம். அதுமட்டுமின்றி, துணிப் பைகளை மறுமதிப்பேற்ற சுழற்சி செய்து வருகிறோம். துணியாலான 'நாப்கின்'கள் தயாரித்து விற்பனை செய்கிறோம். இருளர் பெண்கள் கூடைகள் செய்ய, ஒயர் வாங்கித் தந்து, அவர்கள் உருவாக்குகிற கூடைகளை விற்றுத் தருகிறோம். எங்கள் யூனிட்டில், 26 பெண்கள் பணிபுரிகின்றனர். ஆதரவற்ற பெண்களையே அதிகம் பணிக்கு அமர்த்தி கொள்கிறோம்.
போதிய விவசாய வருமானம் இல்லாமல், திருத்தணியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்பவர்களின் குழந்தைகளுக்கு, நல்ல கல்வியை தர முடிவதில்லை. பிள்ளைகள் பற்றிய அவர்களது கவலையை போக்க, சில ஆண்டுகளே நடந்து வந்த பள்ளியை வாங்கினோம். மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் உள்ளது போல், நன்கு படித்த ஆசிரியர்களால் தரமான கல்வி, யூனிபார்ம் முதல் அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறோம்.குழந்தைகளை தற்சார்புடன் வளர்க்க வேண்டும். 'அம்மா செய்யும் பணி முக்கியமானது' என்ற புரிதல், குழந்தையிடம் வந்தாலே, தன் வேலையைத் தானே செய்ய துவங்கிவிடும். எனக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது, மொபைலை சார்ஜ் செய்வது போன்ற சிறு சிறு வேலைகளை அவர்கள் முன்வந்து மகிழ்ச்சியுடன் மேற்கொள்கின்றனர்.பெண்கள், தாங்களே ஓடி ஓடிக் குடும்பத்தினரின் வேலைகளை எடுத்து போட்டு செய்வது தான் தவறு. குடும்பத்தையும், தொழிலையும் சமமாக நடத்தும் திறமை பெண்களிடம் தான் இருக்கிறது. 'மல்ட்டி டாஸ்க்கிங்' - பன்முக பணி மூளையைப் பெண்ணுக்கு மட்டுமே கடவுள் தந்திருக்கிறார். அதை ஏன் வீணாக்க வேண்டும்... குடும்பம், தொழில் இரண்டையுமே ஒரு பெண்ணால் திறம்படச் செய்ய முடியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement