Advertisement

டீ கடை பெஞ்ச்

அடிப்பொடிகள் 'கெட்டப்'பை மாற்றிய தினகரன்!


''இந்த கமிஷனை கொடுத்து, எப்படி வேலையை முடிக்கிறதுன்னு புலம்புதாவ வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''பொதுப்பணி துறையில தான்... குடிமராமத்து பணின்னு, குளங்களை துார்வாரி, மதகுகள் அமைக்குற பணி, தமிழகம் முழுக்க நடக்குல்லா... கோவை புறநகர்ல, ஆளுங்கட்சியினர் தான், இந்த 'டெண்டர்' களை நிறைய அளவுல எடுத்திருக்காவ வே...
''ஆனாலும், பொதுப்பணி துறையினர், கறாரா, ௩௦ சதவீதம் கமிஷனை கேட்டு வாங்கிடுதாவ... 'இவ்வளவு கமிஷன் கொடுத்து, வேலையையும் முடிச்சு, நாம எப்படி லாபம் பார்க்குறது'ன்னு ஆளுங்கட்சியினர் மூக்கால அழுதாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.
''மாமூல் வாங்க மட்டும், கரெக்டா வந்துட்டு போயிடுறாருங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரு ஓய் அது...'' என்றார் குப்பண்ணா.
''திருவள்ளூர் பக்கத்துல இருக்கிற கூவம் ஆத்துல மணல் கொள்ளை அமோகமா நடக்குதுங்க... பக்கத்துலயே இருக்கிற ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆதரவு தான், இதுக்கு காரணம்...
''அவர், அயல் பணியா, காஞ்சிபுரத்துக்கு ஒரு வாரம் போயிருந்தார்... ஆனாலும், ரெண்டு நாளைக்கு ஒருமுறை, ஸ்டேஷனுக்கு வந்து மணல் மாமூலை கரெக்டா வாங்கிட்டு போயிட்டாருங்க...
''இது, டி.எஸ்.பி.,க்கு தெரிஞ்சு, இன்ஸ்பெக்டரை கடுமையா திட்டியும், அவர் கண்டுக்கலைங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.''செவ்வாய்பேட்டை சண்முகத்தை பார்க்க போயிருந்தேன்... அதான் லேட்டாயிடுச்சு...'' என்றபடியே வந்த அன்வர் பாய், ''வேட்டி இல்லாம வாங்கன்னு சொல்லிட்டாரு பா...'' என்றார்.
''அடக் கடவுளே... யாரு ஓய் இப்படி சொன்னது...'' என, அதிர்ச்சியாக கேட்டார் குப்பண்ணா.''முழுசா கேளுங்க... பெங்களூரு ஜெயில்ல இருக்கிற சசிகலாவை, தினகரன் அடிக்கடி பார்க்க போறாரே... அவர் கூட, எம்.எல்.ஏ.,க்கள் பழனியப்பன், வெற்றிவேல்னு ஆதரவாளர்களும் நிறைய பேர் போறாங்க பா...
''எல்லாரும் கட்சி கரை வேட்டி கட்டி தான் போறாங்க... ஜெயிலுக்கு, அ.தி.மு.க.,வினர் அடிக்கடி வந்துட்டு போறது, பப்ளிக்கா தெரியக் கூடாதுன்னு, எல்லாரையும், பேன்ட், சட்டை போட்டுட்டு வரும்படி தினகரன் சொல்லிட்டாரு...
''இதனால, அவரோட ஆதரவாளர்களும் பேன்ட், சட்டை போட்டு, 'யூத்' மாதிரி பெங்களூரு போயிட்டு வர்றாங்க பா...'' என, முடித்தார்
அன்வர் பாய்.அதுவரை, அவர்களுடன் அமைதியாக அமர்ந்து, கதை கேட்டு கொண்டிருந்த நாயர் எழுந்து வியாபாரத்தை கவனிக்க செல்ல, நண்பர்களின் அரட்டை தொடர்ந்தது.

கல்வி அதிகாரி உதவியாளரின் கரன்சி வேட்டை!

''என்னையும் சேத்து இழுக்கறாரேன்னு விசனப்படறார் ஓய்...'' என, முதல் விஷயத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரு வே...'' என, விசாரித்தார் அண்ணாச்சி.
''தினகரன் ஆதரவாளரான டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சில அமைச்சர்களிடம் பேசும்போது, 'அ.தி.மு.க., அணிகள் இணைப்பு மட்டும் நடந்துட்டா, நானும், அமைச்சர் ராதாகிருஷ்ணனும் பதவி விலகவும் தயாரா இருக்கோம்'ன்னு சொல்லியிருக்கார் ஓய்...
''இதை கேள்விப்பட்ட ராதாகிருஷ்ணன், 'பதவி விலகறதா இருந்தா, அவர் மட்டும் விலக வேண்டியது தானே... என்னை ஏன் இழுக்கறார்'ன்னு புலம்பிண்டு இருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''தாபா ஓட்டல்கள்ல, தண்டல் வசூல் பண்ணுதாரு வே...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''கோவை புறநகர்ல, ௩௦க்கும் மேற்பட்ட தாபா ஓட்டல்கள் இருக்கு... சுத்து பகுதியில இருந்த 'டாஸ்மாக்' கடைகளை மூடிட்டதால, இந்த ஓட்டல்கள்ல, 'சரக்கு' விற்பனை சக்கை போடு போடுது வே...
''இதனால, அந்த பகுதியின் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதி, விற்பனைக்கு ஏத்த மாதிரி, ஒவ்வொரு கடைக்கும் மாசம், அஞ்சுலேர்ந்து, 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல்
பண்ணிடுதாரு...
''ஏற்கனவே, லோக்கல் போலீஸ ், மதுவிலக்கு, ரோந்து போலீஸ், பறக்கும் படை போலீஸ்னு, மாசம், 40 ஆயிரம் ரூபாய் மாமூல் குடுத்துட்டு இருக்கிறவங்க, மக்கள் பிரதிநிதியும் களத்துல குதிச்சதால, முழி பிதுங்கி போய் கெடக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
திடீரென ஞாபகம் வந்தவராக, ''ஆமா... சூலுார், எம்.எல்.ஏ., கனகராஜ், தலைமைக்கு எதிரா குரல் கொடுத்தாரே... அப்புறம் சத்தத்தையே காணலையே பா...'' என, அன்வர் பாய் கேட்க, ''மக்கள் சேவையில, 'பிசி' ஆகியிருப்பாருங்க...'' என, பதிலளித்தார்
அந்தோணிசாமி.''கரன்சி இருந்தா, இவர்கிட்ட எதுவும் நடக்கும் பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அன்வர் பாய்.''யாரு வே அது...'' என கேட்டார்
அண்ணாச்சி.''திருச்சி பக்கம் இருக்கிற மாவட்டத்தை சேர்ந்த, சி.இ.ஓ.,வின் உதவியாளரை தான் சொல்றேன்... தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கி தர்றது, 'ரிடையர்' ஆகுற ஆசிரியர்களுக்கு பண பலன்கள் வாங்கி தர்றதுன்னு, புரோக்கரா செயல்பட்டு, சம்பாதிக்கிறாரு பா...
''அரசு பள்ளிகள்ல, பெற்றோர் --- ஆசிரியர் கழகம் மூலமா, மாசம், 7,500 ரூபாய் சம்பளத்துல முதுகலை ஆசிரியர்களை நியமிக்க, அரசாங்கம் உத்தரவு போட்டுச்சு... இதுக்கு, பணம் வாங்கிட்டு, ௩9 பேரை இவரே நியமிச்சுட்டாரு பா...
''கிட்டத்தட்ட, ஆக்டிங், சி.இ.ஓ.,வாவே செயல்படறார்... இவர், தி.மு.க.,வை சேர்ந்தவரா இருக்கிறதால, சி.இ.ஓ., எதையும் கண்டுக்கிறது இல்லைங்க...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''சரி... பிரேம்குமார் வந்தா, பேசிண்டு இருங்கோ... ஒரு, 'வாக்' போயிட்டு வந்துடறேன் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • NARAYANAN.V - coimbatore,இந்தியா

    கல்வி மந்திரிக்கு எம்.எல்.ஏ.பதவியே உறுதி செய்யப்படாத ஒன்றாக இருக்கிறது.அவர் எப்படி துள்ளிக் குதிப்பவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் ? அதுதான் வால் கேஸாக இருப்பவனெல்லாம் தலை ரேஞ்சுக்கு ஆடிக் கொண்டு இருக்கிறானுகள் போலும்.

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    பல மாவட்டங்களில் CEO களின் பெயர்களை கெடுப்பதற்காக கூட அவரின் உதவியாளர் என்ற போர்வையில் இது நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதிகாரிகளின் அனுமதியோடு பல மாவட்டங்களில் நடக்கிறது. பல மாவட்டங்களில் அதிகாரிக்கு தெரியாமல் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது. உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிந்தால் அதை அரசியலாக்கி தப்பித்து விடுகிறார்கள். வெளியாட்களும் அலுவலக பணியாளர்கள் என்ற போர்வையில் இது போன்று செயல்பட்டு அலுவலக பணியாளர்களின் பெயர்களையும் கெடுத்து விடுகிறார்கள். உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தால் நல்லது. நல்ல நேர்மையான அமைச்சர் மற்றும் செயலர் இருக்கும் இந்த துறையில் களை எடுப்பது மிகவும் நல்லது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement