Advertisement

இது உங்கள் இடம்

'பை' நிரம்பாததால் இந்த, 'அசால்ட்டோ!'


ரா.முக்கண்ணன், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'மின் வாரியத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகை, பல கோடி ரூபாய்' என, சமீபத்தில், நாளிதழில் செய்தி வெளியானது. அதில், உள்ளாட்சி அமைப்புகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து, கோடிக்கணக்கில், மின் பாக்கி வர வேண்டியுள்ளது என, குறிப்பிடப்பட்டிருந்தது; இதை படித்ததும், அதிர்ச்சி அடைந்தேன்.
ஒரு வீட்டிற்கு மின் கட்டணம் செலுத்தாவிட்டால், உடனே, மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். மீண்டும் கட்டணத்தை செலுத்தி, மின் இணைப்பு பெறுவதற்குள், போதும் போதும் என்று ஆகி விடுகிறது.ஆனால், கோடிக்கணக்கில் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மீது, மின் வாரியம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது... இது, அந்த துறையின் நிர்வாக திறமையற்ற நிலையை எடுத்து காட்டுகிறது. 'மின் கட்டணத்தை வசூலிக்க, சிறப்பு அதிகாரி குழு அமைக்கப்பட்டுள்ளது' என மின்சார வாரியம் அறிவித்துள்ளது; இது, வெறும் சப்பை கட்டும் செயல்!
தனி நபரிடம் காட்டும் கண்டிப்பை, உள்ளாட்சி அமைப்புகளிடமும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் மின்சார இலாகா காட்ட வேண்டாமா... அப்படி காட்டி இருந்தால், இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டிருக்காது! மின் உற்பத்தி, தமிழக தேவைக்கு அபரிமிதமாகி விட்டது. ஆனாலும், உற்பத்தி செய்த மின்சாரத்துக்கு, உரிய கட்டணத்தை வசூலிக்க, அதே வேகத்தையும், அதே ஆர்வத்தையும் மின்சார இலாகா காட்டத் தவறுவது ஏன்?உற்பத்தியில் காட்டும் அக்கறையை, கட்டண வசூல் பெறுவதிலும், மின் இலாகா காட்ட வேண்டாமா... மின்சார மீட்டர்கள் வழங்குவதில் பற்றாக்குறை நிலவுகிறது. புதிய மின் இணைப்பு வழங்க கட்டாயமாக புதிய மின்சார மீட்டர் தேவை; அதிலும் அக்கறை காட்டவில்லை.
ஊராட்சி, மாநகராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் வரி வசூலாக, ஆட்டோ மூலம் அறிவிப்புகள் செய்யப்படும். அதுபோல், அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள், மத்திய - மாநில அரசுகளை தொலைபேசி மூலமாகவும், நேரில் சென்றும் நிலுவை தொகையை பெற, மின்வாரிய அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.கூடுதல் இணைப்பு, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் என, 'வசூல் வேட்டைக்கு' என்றால், அதிகாரிகள் ஜீப்பில் பறக்கின்றனர். அதே போல், வாரியத்தின் கட்டண வசூலிலும், தனி அக்கறை காட்டாதது, அவர்கள் 'பை' நிரம்பாதது என்பதால் தானோ!


ராகுல்...நீங்க வளர வேண்டுமா?

வெ.ச.மோகன் கடலுாரிலிருந்து எழுதுகிறார்: இந்திய ஜனாதிபதி முதல், பல பொருளாதார வல்லுனர்கள் வரை, ஜி.எஸ்.டி.,யை வரவேற்கின்றனர். 'ஒரே நாடு, ஒரே வரி' என்பது தான் ஜி.எஸ்.டி.,யின் முக்கிய நோக்கம். உலகின், 150 நாடுகளில் இதுபோன்று ஒரு நாடு, ஒரே வரியை கடைபிடிக்கிறது.ஆனால், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், திரிணமுல் காங்கிரஸ் மம்தா, தி.மு.க., ஸ்டாலின் போன்றோர் காரணமே இல்லாமல் எதிர்க்கின்றனர்; காம்ரேட்டுகளும் எதிர்க்கின்றனர். அது அவர்களுக்கு புதிதல்ல... மத்திய அரசு எதை செய்தாலும், எதிர்மறையாக பேசுவது தான், 'லெட்டர் பேடு' கட்சியாகி விட்ட காம்ரேட்டுகளின் கொள்கை!
ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறியதும், பிரதமர் மோடி, 'இது தனி கட்சிக்கோ, ஆட்சிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் கிடைத்த வெற்றி' என்றார். அதற்கு, ராகுல், 'இது நள்ளிரவு தமாஷ்' என்றார்; அகில இந்திய கட்சியின் துணைத் தலைவரான அவரின் பேச்சு, நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறையில்லாததையே காட்டுகிறது.ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரியை உருவாக்க பலர் உழைத்திருக்கின்றனர். அதில், காங்கிரஸ் அமைச்சரவையில் நிதியமைச்சரான சிதம்பரமும் ஒருவர். கட்சி பேதமின்றி, ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்த, நீண்ட கால திட்டமாக ஏற்று கொள்ளப்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுக்கு பின், பா.ஜ., ஆட்சியின் போது, லோக்சபா, ராஜ்யசபாவில், ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது, சாமானியர்களுக்கு தெரிந்த விஷயம் கூட, காங்கிரஸ் துணை தலைவருக்கு தெரியாமல் போய் விட்டதே!கடலுாரில் விற்கும் ஒரு பொருள், பாண்டிச்சேரியிலும் அதே விலையில் தான் கிடைக்கும் என்பது தான், ஜி.எஸ்.டி., வரியின் மகிமை. பொத்தாம் பொதுவாக பேசாமல், எதையும் ஆராய்ந்து பேசுங்கள், மிஸ்டர் ராகுல்... அப்பதான் நீங்க வளர முடியும்!


முழங்காலுக்கும்மொட்டை தலைக்கும் முடிச்சு வேண்டாமே!

வி.கார்மேகம், தேவகோட்டை, சிவகங் கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தந்தை செய்த பாவத்தை போக்குகிறார்' என்ற தலைப்பில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை சாடி, வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அதில், ஏரி, குளங்களை துார்வாரும் ஸ்டாலின் பணியை புனித பணி என்று போற்றியும் இருந்தார்; அவருக்கு, என் வாழ்த்துகள்!அத்துடன், அவரது தந்தை கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பராசக்தி என்ற படத்தில் கருணாநிதி எழுதிய வசனத்தில் 'காளி என்றைக்குடா வாய் திறந்து பேசினாள்...' எனக் கூறி கிண்டலடித்து உள்ளார். அந்த வாசகருக்கு சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்... காஞ்சிபுரம் கோவில் கருவறையில், அர்ச்சகர் ஒருவர் கோவிலுக்கு வந்த பெண்ணுடன், 'குஜாலாக' இருந்து, அதை தன் மொபைல் போனில் படம் பிடித்தார். அப்போது, கருவறைக்குள் இருந்த, அம்பாள் ஆங்காரம் கொண்டு அர்ச்சகரின் செவிட்டில் நான்கு அறை கொடுத்தாளா... இல்லையே... 'அயோக்கியப் பயலே வெளியே போடா' என வசனம் பேசினாளா... இல்லையே... கொடுக்க வேண்டிய நேரத்தில் தக்க தண்டனை கொடுத்தாளா... இல்லையே!
கருணாநிதியின் வசனத்தை, வாசகர் இப்படியும் எடுத்துக் கொள்ளலாமே... அதே, பராசக்தி படத்தில், 'கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது' என, கருணாநிதி வசனம் எழுதி இருந்தாரே... ஆகவே, தயவு செய்து நல்ல காரியம் செய்பவரை, பாராட்டும் போது, அவரது குடும்பத்தில் ஒருவர் செய்த அல்லனவற்றை பட்டியலிட்டு, முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போட வேண்டாமே! நல்லது செய்தவரை பாராட்டி, அவரை மேலும் பல நல்லது செய்ய துாண்டுவோமே!


'புருடா'க்கள் காட்டில் மழை!

என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில், 2,850 கோடி ரூபாய் நஷ்டமாம்! போக்குவரத்து துறை, பத்திர பதிவு, வணிக வரி, மின் துறை என, பல துறைகளிலும் பல கோடி நஷ்டம் இருக்குமாம்!தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரிய பெருந்தகைகளுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, சம்பள உயர்வு அளிக்க வேண்டுமானால், 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமாம். தமிழக அரசு செலுத்த வேண்டிய கடன் தொகை, மூன்று லட்சம் கோடி ரூபாயை தாண்டி சென்று விட்டது.இவ்வளவு இக்கட்டான நிலையிலும், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, கொடை வள்ளல் கர்ணனைப் போல், வாரி வாரி வழங்கும் இரக்க குணம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.தமிழக எம்.எல்.ஏ.,க்கள் படும் துயரம் கண்டு மனம் வருந்தி, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறார். எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை, ௫௫ ஆயிரம் ரூபாயிலிருந்து, ௧.௦௫ லட்சம் ரூபாயாக உயர்த்தி மகத்தான சாதனை படைத்து விட்டார்.சிலர் இதை, எரிகிற கொள்ளியில் பிடுங்கும் வரை லாபம் என்பது போல், தமிழக முதல்வர் நடந்து கொண்டிருக்கிறார் என, ஏளனம் செய்யலாம்; அது தவறு. அடுத்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஜெயிக்க வாய்ப்பே இல்லை என தெரிந்து விட்டதால், எம்.எல்.ஏ.,க்கள் மனம் குளிரும் வண்ணம் அள்ளி வழங்கி இருக்கிறார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது, கூவத்துார் ஓட்டல்களில் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டதில் இருந்து நன்கு தெரிகிறது. 'மற்ற மாநிலங்களில், எம்.எல்.ஏ.,க்கள் வெறும், 40 - 50 ஆயிரம் ரூபாய் என சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், தமிழக எம்.எல்.ஏ.,க்கள், ஒரு லட்சம் பெறுவது தர்மம் தானா' என, கேட்போர், ஞான சூனியங்கள். 'மக்கள் சேவையே, மகேசன் சேவை' என, 'புருடா' விடும் எம்.எல்.ஏ.,க்கள் காட்டில் மழை பெய்கிறது!

தலையை சுற்றி மூக்கை தொடும்கமல்!


நவசக்தி சோமு, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்று, அ.தி.மு.க., நிறுவனர், எம்.ஜி.ஆர்., கேட்காமலேயே, தி.மு.க., தலைவர் கருணாநிதி மீதான புகார் மனுக்கள் அவரிடம் குவிந்தன. அவற்றை, தமிழக கவர்னரிடம், எம்.ஜி.ஆர்., சமர்ப்பித்தார். அப்போதைய பிரதமர் இந்திரா, மனுக்களை பரிசீலித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் கமிஷன் அமைத்தார். கமிஷன் விசாரணையில், அது உண்மை என தெரிந்ததும், தி.மு.க., அரசு கலைக்கப்பட்டது; இது வரலாறு!இன்று, 'தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது' என, அரசு மீது, நடிகர் கமல் பாய்ந்தார். தமிழக அமைச்சர்கள் சிலர், கமலை வறுத்தெடுத்ததுடன், 'ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்; யாராயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயார்' என்றனர்.
ஆதாரம் இருந்தால், உடனே முழு விபரங்களுடன் அறிவித்திருக்க மாட்டாரா... தன் மீதான பொறுப்பை தட்டிக் கழித்து, 'ஆதாரங்களை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்புங்கள்' என, தன் ரசிகர்களுக்கு அறிக்கை விட்டார். இதன் அர்த்தம் என்ன... 'நீங்கள் அனுப்பும் ஆதாரங்கள் நிரூபிக்கத்தக்கதாக இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டோர், உங்கள் மீது வழக்கு தொடர்வர். நீதிமன்ற நீண்ட நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள்; நான் பார்வையாளனாக வந்து அமர்கிறேன்' என்று தானே அர்த்தம்!
'எனக்கு அழுத்தம் கொடுத்தால் அரசியலுக்கு வருவேன்' என, நடிகர் கமல் பேட்டியில் தெரிவித்து இருந்தார்; இது, 'எதிர்ப்பாளர்கள் எனக்கு அழுத்தம் தராவிட்டால், அரசியலுக்கு வர மாட்டேன்' என, மறைமுகமாக சொல்வதாக தான் அர்த்தம்; கையால் மூக்கை நேரடியாக தொடாமல், தலையை சுற்றி மூக்கை தொடுகிறார், கமல்.'அமலாக்கத் துறை, வருமான வரித் துறை சார்பில், வெளியான தகவல்களை ஆதாரமாக குறிப்பிட்டு தான், அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறேன்' என்கிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்; அவரது வழி நடக்கும் கமல், தப்பிக்க வழி தெரியாமல் முழிக்கிறாரே...
அரசு மீது புகாரை சுமத்தும் போது, பின்விளைவை சந்திக்கும் ஆற்றல் இல்லாதோர், பேசாமல் இருப்பது தான் நல்லது. வாய்ச்சொல்லில் வீரரடி பாடல், கமலுக்கு பொருத்தமாக உள்ளது!


ஜவுளிக் கடையிலும்ஓட்டலிலும் ஏமாந்தோம்!


டி.ஆண்டாள், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: என் மகளுக்கு திருமண பட்டு புடவை வாங்க, குடும்பத்துடன் காஞ்சிபுரம் சென்றோம். பல்லக்கில் துாக்கி செல்லாத குறையாக, ஒரு பட்டுச்சேலை கடை ஊழியர்கள் எங்களை அழைத்தனர்; கடைக்குள் சென்ற எங்களுக்கு குளிர்பானம் தந்தனர். கடை முதலாளி, 'என்ன விலைக்கு பட்டு சேலை வாங்கப் போகிறீர்கள்' என்றார். நாங்கள், 'தரம் வாய்ந்த பட்டுப்புடவை வேண்டும்' என்றோம்.ஒரு புடவையை தேர்வு செய்தாம்; அதன் விலை, 25 ஆயிரம் ரூபாய்; அரசு தள்ளுபடி, 10 சதவீதமும், 200 ரூபாய் கடைக்காரர்களின் தள்ளுபடி போக, 22 ஆயிரத்து 300 ரூபாய்க்கு, 'பில்' தந்தனர். நாங்கள், 'இன்னும் சற்று, 'பில்' தொகையை குறையுங்கள்' என்றோம். அதை ஏற்று, 20 ஆயிரம் ரூபாய்க்கு, 'பில்' தந்தனர்; பட்டுச் சேலையை வாங்கினோம்.
பின், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்குள் நுழைந்தோம். ஒரு இட்லியின் விலை, 31 ரூபாய் வீதம், மூன்று இட்லியும், ஒரு தோசை, 58 ரூபாய் வீதம் இரண்டு தோசையும் சாப்பிட்டோம். அதற்கு வரி, 25.18 சேர்த்து, ஒரு நபருக்கு 235 ரூபாயுடன், 10 பேருக்கு பில், 2,350 ரூபாயை அங்கு அழுதோம்.கும்பகோணம் வந்த நாங்கள், பட்டுப் புடவையை ஒரு வியாபாரியிடம் காட்டினோம். அவர், ஒரு திரவகத்தை எடுத்து, தலையில் உள்ள எண்ணெயுடன் அதை கலந்து, அச்சேலையின் குஞ்சத்திலுள்ள ஜரிகையில் தேய்த்தார்; செம்பு கலர் அதில் படிந்தன. உடனே, 'இது வெள்ளி ஜரிகை இல்லை; செம்பு ஜரிகையிலான சேலை. இதன் விலை வெறும், ௬,௦௦௦ ரூபாய் தான்' என்றார்.
நாங்கள், 'நயவஞ்சகமாக ஏமாற்றப் பட்டோம்' என்பதை உணர்ந்து கோபப்பட்டோம். முகூர்த்த சேலை என்பதால் திருப்பி தர வேண்டாம் என நினைத்து, 'மோசடியாக சேலையை விற்ற கடைக்காரர்களுக்கு, ஆண்டவன் சரியான தண்டனை தர வேண்டும்' என, வேண்டிக் கொண்டோம்.இதுபோன்ற பட்டு சேலைக் கடை, பிரபல ஓட்டல்களில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும். தரமற்ற பொருட்களை விற்கும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தால், கடைக்கு பூட்டே போட வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Chandrasekaran - cuddalore,இந்தியா

    மத்தியஅரசு சமீபத்தில் சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை விரைவில்செrathuய்வதாக கூறியுள்ளது . பெரும்தும் என மக்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மானியம் என்பது பெரும்பாலும்ஏழை எளியமக்கள் மற்றும் நடுத்தரமக்கள் எதிர்பார்ப்பு ஆகும். எதற்கு மத்தியஅரசு ஆண்டுக்கு பதுலச்சம் குறைவாக உள்ளவர்களுக்கு பொருந்தும் yena அறிவித்து தற்போது பல்டி அடிப்பது அநியாயம். மானியத்தைரத்து செய்டாலும் athai சரிகட்டிக்கொள்ள பல வழிகள் உள்ளன. தம் கட்சியை சேர்ந்தசட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எரிவாயு சிலிண்டர் எத்தனை பயன்படுடுத்திகிறார்கள் என்பதும் அரசின் சலுகைகளை விட்டுக்கொடுக்க மும்வருவர்களா என்பதை பிரதமர் விளக்குவாரா அல்லது அவர்களை அரசு சலுகைகளைவிட்டுக்கொடுக்க ஆணையிடுவாரா ? அப்படி செய்துவிட்டு மக்களின் விருப்பதைக்கேட்டு அதன்படி செயல்படுவார்? என்பதே தற்போதுஉள்ள கேள்வி. முதலில் தம்மைமாற்றிக்கொண்டு பின்னர் மக்களை மாற்றமுயற்சி செய்தல் மக்கள் பெரிதும் வரவேற்பேர். பிரதமர் செய்வாரா?.

  • D.RAMIAH - RAIPUR,இந்தியா

    ஏமாருபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் - யாரும் ஒன்றும் செய்யமுடியாது வாழ்க உலகம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement