Advertisement

அக்கம் பக்கம்

தலைகீழ் மாற்றம்!


'இந்த அம்மாவா, இப்படி மாறிப் போயிட்டாங்க' என, ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, வசுந்தரா ராஜே சிந்தியாவை பார்த்து, அம்மாநில அரசியல் கட்சியினர், ஆச்சரியப்படுகின்றனர். வசுந்தரா, ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். இதனால், சாதாரண மக்களுடன், அவ்வளவாக நெருங்கிப் பழக மாட்டார். அதேபோல், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும், வசுந்தரா, அவ்வளவாக மரியாதை கொடுப்பது இல்லை என்ற பேச்சும் அடிபட்டது.இதனால், ராஜஸ்தானில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், வசுந்தராவுக்கு பதிலாக, வேறு யாரையாவது, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என, பா.ஜ., மேலிடத்தில் ரகசிய திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் எப்படியோ, வசுந்தராவின் காதுகளுக்கு எட்டி விட்டது. சமீபத்தில், அமித் ஷா, ராஜஸ்தானுக்கு வந்தபோது, விமான நிலையத்துக்கு, தன் அமைச்சரவை சகாக்களுடன் சென்று, தடபுடலாக வரவேற்றார். தனக்கு கிடைத்த, இந்த அசத்தலான வரவேற்பை பார்த்து, அமித் ஷாவே அசந்து விட்டார். 'இந்த அம்மா நம்மை, அவ்வளவாக சட்டை செய்ய மாட்டாங்களே... இப்போது எல்லாம் தலைகீழா நடக்கிறதே...' என, கட்சி நிர்வாகிகளிடம் ஆச்சரியத்துடன் கூறினார். 'என்னதான், ராஜ குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பாரா; அதனால் தான், அமித் ஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்து, அடுத்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் ஆக, இப்போதே துண்டு போட்டு வைத்து விட்டார்' என்கின்றனர், கட்சி நிர்வாகிகள்.


பதவி போச்சே


பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான, தேஜஸ்வி யாதவ், சோகத்தில் மூழ்கியுள்ளார். ஒன்றரை ஆண்டுக்கு முன், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில், துணை முதல்வராக பதவியேற்ற போது, சந்தோஷத்தின் உச்சியில் இருந்தார், தேஜஸ்வி. 'இளம் வயதிலேயே, நமக்கு பெரிய பதவி கிடைத்து விட்டது; இதை, தக்க வைக்க வேண்டும்; விரைவிலேயே, முதல்வர் பதவியிலும் அமர்ந்துவிட வேண்டும்' என, மனதுக்குள் பிரமாண்ட கனவு கோட்டையை கட்டி வைத்திருந்தார். தன் நண்பர்கள், உறவினர்களிடம் எல்லாம், இதை பற்றி பெருமையாக கூறி வந்தார். 'யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, எனக்கு கிடைத்துள்ளது; பீஹார் அரசியலில், அசைக்க முடியாத அரசியல்வாதியாக உருவெடுப்பேன்' என, கூறி வந்தார். ஆனால், தன் தந்தை, எப்போதோ செய்த ஊழலில், தன் பெயரும், 'டேமேஜ்' ஆனதால், இப்போது, துணை முதல்வர் பதவியை இழந்து, கண்ணீர் வடிக்கிறார்.'பா.ஜ.,வுடன், நிதிஷ் குமார் கைகோர்த்து விட்டார். ஆளுங்கட்சியாக இருப்பதால், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, அவர்களை அசைக்க முடியாது. நம் மீதும், ஏதாவது ஒரு வழக்கை போட்டு, சிறையில் களி சாப்பிட வைத்து விடுவரோ...' என, புலம்புகிறார், தேஜஸ்வி. அவரது நண்பர்களோ, 'முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டவருக்கு, இப்போது துணை முதல்வர் பதவியும் பறிபோய் விட்டதே' என, தங்கள் பங்கிற்கு, சோக கீதம் வாசிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement