Advertisement

பக்க வாத்தியம்

'நாங்க இன்னும் மறக்கலீங்க!'


சென்னையில், நிதித்துறை அமைச்சர் ஜெயகுமார், சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'அரசியல் என்பது முள்படுக்கை... அரசியலுக்கு வந்தால் தான் அதன் கஷ்டம் தெரியும்... தைரியம் இருந்தால், நடிகர் கமல் அரசியலுக்கு வரட்டும்... ஆனால், 'வருவேன் வருவேன' என, பாவலா காட்டக் கூடாது... வெள்ளம் வந்த போது, அவர் என்ன செய்தார்...' எனக் கூறினார். அதை கேட்ட முதியவர் ஒருவர், 'வெள்ளம் வந்த போது, ஒருங்கிணைந்த, அ.தி.மு.க.,வினர் என்ன செஞ்சீங்க... சமூக ஆர்வலர், இளைஞர்கள், தன்னார்வலர்கள் கொடுத்த நிவாரண பொருட்களில், அப்போதைய முதல்வரின் படத்தை ஒட்டி, அ.தி.மு.க.,வினர் தருவது போல், விளம்பரம் தேடினீங்க... நாங்க இன்னும் அதை மறக்கலீங்க...' என்றாரே பார்க்கணும்!

பூனைக்குட்டி ஆகிட்டாரே!


அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றுப் பேசினார்.எம்.எல்.ஏ., ஆறுகுட்டி, பழனிசாமி அணிக்கு மறுபடியும் சென்றுவிட்டதைச் சுட்டிக் காட்டும் விதமாக, முன்னாள் அமைச்சர் தாமோதரன், 'எங்களுடன் இருந்த கோவையை சேர்ந்த, எம்.எல்.ஏ., ஒருவரை, புலிக்குட்டி என நினைத்திருந்தோம். ஆனால், அவரோ திடீரென பூனைக்குட்டியாகி விட்டார். தற்போது, பழனிசாமி அணிக்கு சென்று எலி பிடித்துக் கொண்டிருக்கிறார்' என்றதும், கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி, விசில் அடித்து வரவேற்றனர்.
நிருபர் ஒருவர், 'பரவாயில்லையே... முன்னாள் அமைச்சர் படுஜோரா பேசுறாரே... இதற்கு முன்னர் இவர் இப்படி பேசி பார்த்ததே இல்லையே... ஆனா, இந்த அணியில, இன்னும் எத்தனை பேர் புலிக்குட்டியாகவே நிலைத்து இருப்பாங்கங்கறது, போக போகத்தானே தெரியும்...' என்றதும், அனைவரும் சிரித்தனர்.


கொளுத்தும் வெயிலில் ஆசிரியைகள் 'செல்பி!'

தமிழ்நாடு அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆவேசமாக கோஷங்கள் எழுப்பி கொண்டிருந்த போது, ஆசிரியைகள் சிலர், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், தங்களது மொபைல் போனில், 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த, மூத்த நிருபர் ஒருவர், 'ஆசிரியைகளே, 'செல்பி' மோகத்தில் மூழ்கி இருந்தால், மாணவர்களுக்கு அறிவுரை கூறி திருத்த முடியுமா...' என, கவலையுடன் கேள்வி எழுப்ப, சக நிருபர்கள்
மவுனமாக ஆமோதித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பல நாட்களுக்கு பின் சந்தித்து, இனி மற்றோர் சந்தர்ப்பம் கிடைப்பதரிது என்ற நிலையில் selfi எடுத்துக்கொண்டிருக்கலாம் . அதை விமர்சிப்பதா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement