Advertisement

சொல்கிறார்கள்

கலை சிறக்க, கலைஞர் வாழ்வு மேம்பட அரசு ஆதரவு தேவை!மூங்கில்களால் கலை பொருட்களை உருவாக்கி வரும், கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்த நடராஜன்: 1981க்கு முன் வரை, இலங்கையில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வந்த எங்கள் குடும்பத்தினர், அதன் பின், இங்கு இடம் பெயர்ந்தோம். வந்தவுடன் பிழைப்புக்கு வழி தேடிய போது, என் தந்தை, மூங்கிலை வைத்து நுணுக்கமான கலைப்பொருட்கள் செய்ய கற்றுக் கொடுத்தார்.என்னுடன் இணைந்து, என் மனைவி, மகள்கள் இருவர் உதவி செய்ய ஆரம்பித்தனர். நாட்கள் செல்லச் செல்ல, கலைப்பொருட்களை அற்புதமாக வடிவமைக்க, அவர்களும் கற்றுக் கொண்டனர்.ரப்பர், பிளாஸ்டிக், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றில் கலைப்பொருட்கள் செய்யப்பட்டாலும், மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள் காற்று மாசைத் தடுத்து, சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்றன. செயற்கை வண்ணப் பூச்சுகள் எதுவும் சேர்க்காமல், இயற்கை தன்மையுடன் தயாரித்து விற்கிறோம்.
வீட்டின் முன் ஹாலில், மூங்கிலால் ஆன பொருட்களை வைப்பது, வாஸ்துப்படி அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.புது மூங்கில்கள் இந்த வேலைக்கு உதவாது; நான்கைந்து ஆண்டுகளில், பூச்சி அரித்து விடும். வீடுகளை பிரித்து கட்டுபவர்கள் அல்லது பழைய மூங்கில்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து வாங்குவோம். பின், அவற்றை சுத்தப்படுத்தி, செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்ற மாதிரி சீவி, வடிவமைத்து கொடுப்போம்.
மூங்கில் வீட்டின் அஸ்திவாரம் உறுதியாக இருக்க, கனமான பிளைவுட்டை அடிப்பாகம் அமைத்து, அதன்மேல் மூங்கில் குச்சிகளை வைத்து மேல்தளம், ஜன்னல், கதவு, பால்கனி அமைக்கிறோம். மேற்கூரையை அலங்கரிக்க, 'ஷீட்' வைத்து ஒட்டி விடுவோம். நாங்கள் உருவாக்கிய வீடுகள், பதினைந்து ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் சொல்வதை கேட்டு, ஆத்ம திருப்தியும், பெருமிதமும் ஏற்படுகிறது.
அரசு கைவினை கலைஞர்கள் அபிவிருத்தி ஆணையத்தில் உறுப்பினராக இருப்பதால், கண்காட்சிகளில், 'ஸ்டால்' அமைக்க அழைப்பு வருகிறது. இதுவரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை, கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளோம்.பல ஆண்டு முயற்சிகளுக்கு பின், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி, 'தாட்கோ' நிறுவனத்தில் இருந்து, 5,000 ரூபாயும், சென்ட்ரல் பேங்கில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயும் கடனாக கிடைத்து உள்ளது.இந்த கலையைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் பயிற்சி தருகிறோம். கல்லுாரி மாணவர்கள் நிறைய பேர், புராஜெக்ட் வேலைக்காக உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது, மனதுக்கு
திருப்தியாக இருக்கிறது.என் மகள்கள் இருவரும் பட்டதாரிகள். இந்த கைவேலைகளில் நல்ல அனுபவம் மிக்கவர்கள். அரசோ, வங்கிகளோ முன்வந்து, கணிசமான தொகையை கடனாக கொடுத்தால், பெரிய அளவில் பயிற்சி கூடம் அமைக்கலாம்; நிறைய பேருக்கு பயிற்சிகள் தரலாம். வேலைவாய்ப்புகள் தந்து பலருக்கும் வழி காட்டலாம்.எங்களை போன்ற தெருவோர கலைஞர்களில் பலர், திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். நலிவடைந்த கலைஞர்களை ஆதரிக்க அரசு முன்வந்தால், கலையும் சிறக்கும்; கலைஞர்களின் வாழ்வும் மேம்படும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • sundaram - Kuwait,குவைத்

    இவர் வடிவமைத்த கலைப்பொருட்கள் புகைப்படங்களை பிரசுரிக்கலாமே. நடிகைகள் படமென்றால் தேடித்தேடி பிரசுரிக்கும் தினமலர் இந்த கலைஞன் திறமையில் உருவான கலை பொருளை புறக்கணிக்கலாமோ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement