Advertisement

இது உங்கள் இடம்

நீதிமன்றங்களை கொஞ்சமாவது கவனியுங்கள்!


பா.சு.மணிவண்ணன், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: உரிய காலத்தில் கிடைக்க பெறாத நீதி, பின் எப்போது கிடைத்தாலும், அதனால் எந்த வகை பலனும் யாருக்கும் ஏற்பட போவதில்லை. இன்று, நாடு முழுவதும், பெரும்பாலான நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன; பணியாளர் பற்றாக்குறையால் அலுவலக பணிகள் பாதிக்கின்றன.
டைப்பிஸ்ட் உள்ளிட்ட இதர பணிகளுக்கு, ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. விரைவில் நீதி கிடைப்பதற்காக அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்களிலும், மகளிர் நீதிமன்றங்களிலும் கூட, நீதிபதி நியமனம் நடக்கவில்லை. பல நீதிமன்றங்கள்
வாய்தாகளிலேயே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.உதாரணமாக, திருப்பூர் போன்ற பெரும் தொழில் நகரங்களில், 'செக்' மோசடி வழக்குகள் குவிகின்றன. நீதிபதி பற்றாக் குறையால், பல வழக்குகள் வாய்தாவில் போய் கொண்டிருக்கிறது; திருப்பூர் மட்டுமல்ல, பல ஊர்களிலும்
இதே நிலை தான்.சமீபத்தில், திருப்பூரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், மூன்றாவது மற்றும் நான்காவது திறக்கப்பட்டது. அவற்றிலும் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. உடனடியாக, நீதிபதிகளை நியமனம் செய்ய வழியில்லை என்றால், இதுபோன்ற மாற்று நடவடிக்கைகளை எடுக்கலாம்...
* மாஜிஸ்திரேட் அளவிலான நீதிமன்றங்கள், குறைந்த வழக்குகள் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளை, அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள நீதிமன்ற பணிகளுக்கு அனுப்ப வேண்டும்
* குறைந்த அளவில் வழக்குகள் உள்ள நீதிமன்றங்களுக்கு அருகில் உள்ள நீதிபதிகளை, முழு நிர்வாக பொறுப்பு கொடுத்து நியமனம் செய்யப்பட வேண்டும். இரண்டு நீதிமன்றங்களையும் சேர்த்து, அவர்கள் பார்த்து
கொள்வர்
* 'செக்' மோசடி விரைவு நீதிமன்றங்களுக்கு, நடுவர் நியமனத்திற்கு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில், உரிய அதிகாரம் பெற்ற சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டிலேயே, அந்த வழக்குகளை, விசாரிக்க வழி செய்ய வேண்டும்
* காலியாக உள்ள நீதிமன்ற அனைத்து பணியாளர் இடங்களையும் உடனே பூர்த்தி செய்ய வேண்டும்
* தீர்ப்பு நகல் மட்டுமல்ல, சம்மன், வாரண்ட் போன்ற அனைத்து பணிகளும் விரைவில் நடக்க, பணியாளர் நியமனம் மிக மிக அவசியம்.மக்கள் முழு நம்பிக்கை பெற்ற நீதிமன்றம், விரைந்து செயல்பட்டால் மட்டுமே விரைந்து நீதி கிடைக்கும். நீதிமன்றம் விரைந்து செயல்பட உரிய காலத்தில், உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்க, நீதிபதி, பணியாளர் காலி இடங்களை
உடனடியாக நிரப்ப வேண்டும்!

உபரி பெயரில்பந்தாடுவதைநிறுத்துங்கள்!


மா.தங்காகண்மணி, பட்டாரி ஆசிரியை, ஆத்துார், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தின் கல்வித் துறையில், துவக்க கல்வி, பள்ளி கல்வி, சமூக நலம், ஆதிதிராவிடர் நலம், கள்ளர் சீரமைப்பு, வனம், உயர் கல்வி என, பல பிரிவுகளாக பிரிந்து நிற்கிறது.துவக்க கல்வியில், ஒன்று முதல் ஐந்து வரையும், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் கொண்ட துவக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.துவக்க கல்வி துறையில் பதவி உயர்வு, பதவி இறக்கம், பணி நிரவல் என்பது ஒன்றிய அளவில் சீனியாரிட்டி முறைப்படி பல காலமாக நடைபெறுகிறது.ஒரு ஒன்றியத்தில், ஆசிரியர் - மாணவர் விகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, உபரி ஆசிரியர்கள் வேறு ஒன்றியம், பிற மாவட்டங்களுக்கு கட்டாய மாறுதல் செய்யப்படுகின்றனர்.மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களை பணி இட மாற்றம்
செய்யப்படுவதில்லை.ஒரு ஒன்றியத்திற்கு, 10 இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி என்றால், அந்த ஒன்றியத்திற்கு கடைசியாக வந்து சேர்ந்த, 10 இடைநிலை ஆசிரியர்கள் தான் பந்தாடப்படுவர்!ஒரு ஒன்றியத்தில் கடைசி ஆளாக நுழைந்த, ஒரு இடைநிலை ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை மிக மிக குறைவான பள்ளி ஒன்றுக்கு பணி ஏற்கிறார் என, வைத்துக் கொள்வோம்...அப்பள்ளிக்கு முழுமையான உழைப்பை கொடுத்து, கூடுதல் மாணவர்களைச் சேர்த்து, அப்பள்ளியில் ஆசிரியர் - மாணவர் விகிதத்தை சரியாக பராமரிக்கிறார்.ஆனால், இப்படி உழைத்து மாணவர்களைச் சேர்த்த ஆசிரியர், பிற ஒன்றியத்திற்கு உபரி என்ற பெயரில் பந்தாடுகின்றனர்.
இவரை மாற்றி விட்டு, அதே ஒன்றியத்தில், சீனியர் இடைநிலை ஆசிரியர் இப்பள்ளிக்கு வந்து விடுகிறார்; இது என்ன கொடுமை... உழைப்பவர் ஒருவர், உழைக்காமல் சொகுசாக வந்து சேர்பவர் ஒருவரா...மாணவர்கள் இல்லா பள்ளியில் உள்ள ஆசிரியர்களை மாற்ற, துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை உயர பாடுபட்ட ஆசிரியர்களை மாற்றுவது சரியல்ல!

பிரைமரி பயிற்சிஆசிரியர்களுக்குவாழ்வளியுங்கள்!


சே.பாண்டியம்மாள், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மூலம், பிரைமரி ஆசிரியர் பயிற்சி முடித்தோர், 2006ல் இருந்து அதிகம் பேர் உள்ளனர்.'பிரைமரி ஆசிரியர் பயிற்சி முடித்தோருக்கு, ஆசிரியர் பணி வழங்கப்படும்' என, அரசு அறிவித்தது; ஆனால், இதுவரை எவருக்கும் பணி வழங்கவில்லை.ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் பயிற்சி மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது; ஏராளமானோர் பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.அங்கன்வாடி மையங்களில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பயிற்சி முடித்தோரை, அப்பணியில் நிரப்பினால் அவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.இதனால், அங்கன்வாடி மைய குழந்தைகளின் கல்வி மற்றும் பழக்க வழக்கங்கள் மாறும். பொதுவாக, குழந்தைகளின் சிந்தனை மற்றும் செயல்திறன் வளர்ச்சியில், மூன்று முதல்
ஐந்து வயது வரை உள்ள பருவம் மிகவும் முக்கியத்துவமானது.இப்பருவக் குழந்தைகளுக்கு, முறையான பயிற்சியுடன், கல்வியும் கிடைத்தால் அவர்களின் அறிவு வளர்ச்சி பெறும். பிரைமரி ஆசிரியர் பயிற்சி முடித்தோரை, விரைவில் அங்கன்வாடி மையங்களில் பணியமர்த்த, அரசு ஆவன செய்ய வேண்டும்.இதன் மூலம், அங்கன்வாடி மையங்களின் தரமும் மேம்படும். குழந்தைகளின் எதிர்காலமும் நல்ல முறையில் அமையும். இவ்விஷயத்தில், அரசு துரித நடவடிக்கை எடுக்க
வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement