Advertisement

நிதிஷ் காய் நகர்த்தியது எந்த அடிப்படையில்...

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அணிமாறியதால், எதிர்க்கட்சிகளின், 'மகா பெரிய கூட்டணி' வாய்ப்பு பறிபோனது என்ற வாதம் எழுந்திருக்கிறது. பீஹாரில் மக்கள் அளித்த ஓட்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு தரப்பட்டது; அதை மாற்றி இப்போது, பா.ஜ.,வுடன் அணி சேர்வதற்கு பதிலாக, தேர்தல் நடத்தி புதிய அணியின் வெற்றி வாய்ப்பை கண்டறிந்து முடிவு செய்திருக்கலாம் என்ற வாதம் பேசப்படுகிறது. ஏற்கனவே மாநில அரசுகளின் தேர்தல் ஆண்டுதோறும் நடக்கும் சூழ்நிலை உள்ள நம் நாட்டில், மத்திய அரசு தன் திட்டங்களை அறிவித்து அமல்படுத்துவது சிரமமாகிறது. எப்போது பார்த்தாலும், எங்காவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடப்பது வழக்கமாகி விட்டது. அப்படி இருக்கும் போது, தேர்தல் மூலம் மக்கள் கருத்தறிய ஒவ்வொரு விஷயத்திற்கும் முடிவு எடுப்பது சாத்தியமல்ல. தவிரவும் காங்கிரஸ் மிகப்பெரும் கட்சியாக ஆட்சி புரிந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட கட்சி தாவல் தடைச்சட்டம், அதன் தொடர்ச்சியாக குடும்ப ஆட்சி என்ற சூழ்நிலை, கட்சிகளின் ஜனநாயக உணர்வுகளை மாற்றிவிட்டது. தற்போது பீஹாரில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்த, 48 மணி நேரத்திற்குள் சபையில் ஓட்டெடுப்பு நடத்தி நம்பிக்கை பெற்றது நல்ல அணுகுமுறையாகும். இனிமேல், அடுத்த, இரு ஆண்டுகள் முடிந்து, 2019ல் லோக்சபா தேர்தல் வரும் போது, அந்த ஆட்சியை மதிப்பீடு செய்யலாம். 2020ல், பீஹார் சட்டசபைத் தேர்தல் வரும் போது, முதல்வர் நிதிஷ் குமார் இக்கூட்டணியை விட்டு ஒதுங்கி, தன்னை மதச் சார்பற்ற தலைவர் என்று கூறிக் கொண்டால், அவரது அரசியல் நேர்மை, அன்று கேள்விக்கு உரியதாகிவிடும். 'மதச் சார்பின்மை' என்று கூறும் கட்சித் தலைவர்கள், கோடிகளில் சொத்து சேர்ப்பதை தன்னால் ஏற்க முடியவில்லை என்று அவர் கூறிய கருத்து சிந்திக்கத்தக்கது. மேலும், லாலு மகன் தேஜஸ்வி மீதான ஊழல் புகார் குறித்து அவரிடமே விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை, என்றிருக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலோ, நிதிஷ் எழுப்பிய ஊழல் புகார் குற்றச்சாட்டு பற்றி லாலுவிடம் பேசி, தனக்கு விளக்கம் தரவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்திரா மற்றும் ராஜிவ் காலத்தில் அபார வெற்றிகளை குவித்த காங்கிரஸ், இன்று முடிவுகளை எடுக்காமல், குறை பேசும் தலைமையை மட்டும் கொண்டிருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. இந்த நிலையில், 'மகா பெரிய கூட்டணி'க்கு, உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி முடிவு எடுக்கலாம் என்றால், அக்கட்சியும் பிளவுண்டு நிற்கிறது. அப்படிப் பார்த்தால், மம்தா மட்டுமே இன்று ஏதாவது முடிவு எடுக்கலாம். ஆனால் அவர், ராகுல் தலைமையை ஏற்பாரா என்பது சந்தேகமே. காங்கிரசும், அடுத்த லோக்சபா தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை.
தவிரவும், முந்தைய காலத்தில் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ராம் மனோகர் லோகியா, அவரையடுத்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர், பா.ஜ.,வின் முந்தைய உருவான ஜனசங்கத்துடன் செயல்பட்டதை, நிதிஷ் அறிவார். ஆகவே, அவர் தன் பெயரை ஊழல் கறை படிய விரும்பாமல், இம்முடிவை எடுத்திருக்கிறார். மோடி தலைமையை பாராட்டும் அவர், பீஹார் வளர்ச்சிக்கு மத்திய அரசைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்; அது எளிதானதும் கூட.
அவரது கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் யாதவ், இன்று பா.ஜ., கூட்டணியால், 'எதிர்க்கட்சிகளின் மிகப்பெரும் கூட்டணி முயற்சி பின்னடைவாகும்' என வருத்தப்பட்டு என்ன பயன்?ஆனால், இக்கூட்டணி பற்றி, தலைவர்கள் தங்கள் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் முடிவு செய்யாமல், மீடியாவில் மட்டும் அதிகம் பரபரப்பாக பேசுகின்றனர். அதை உணர்ந்த நிதிஷ், சாமர்த்தியமாக காய் நகர்த்தி இருக்கிறார் என்பதே உண்மை. அத்துடன், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து லஞ்ச, ஊழல் சமுதாயத்தில் கூடாது என்ற கருத்தை, ராஜிவ் உட்பட அடுத்தடுத்த பிரதமர்கள் வலியுறுத்தினர். அது, ஜனநாயகக் கோட்பாடுகளில் எடுபடவில்லை. இன்று, மோடி பிரதமரானதும், 'லஞ்சம் கொடுப்பதை அனுமதிக்க மாட்டேன்; லஞ்சம் பெறுவதையும் அனுமதிக்க முடியாது' என்ற கருத்து, அதிக அளவில் மத்திய வகுப்பினரிடையே ஊடுருவியிருக்கிறது. அதே மாதிரி ஒரு சோதனையை, பீஹார் முதல்வர் நிதிஷ் செய்கிறார் போலும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • kaalan - perth,ஆஸ்திரேலியா

    பதவிப்பித்து பிடித்து சந்தர்ப்பவாத அரசியல் செய்வதில் நிதிஷை மிஞ்ச தற்போது யாரும் இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement