Advertisement

சொல்கிறார்கள்

மாணவர்களின்'கமென்ட்' போதும்!

www.examfear.com என்ற இணையதளம் மூலம், இலவச பாடம் எடுக்கும் 'ஆன்லைன்' ஆசிரியை ரோஷிணி முகர்ஜி: பெங்களூரைச் சேர்ந்தவள் நான். பள்ளியில் எங்கள் இயற்பியல் ஆசிரியரின் கற்பித்தல் முறை, எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே, எதிர்காலத்தில் ஆசிரியப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது, லட்சியமாக இருந்தது.

எதிர்பாராத விதமாக அப்பா, மாரடைப்பால் மரணம் அடைய, குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, ஐ.டி., நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். திருமணத்துக்குப் பின் ஒருநாள், 'யூ டியூப்'பில் ஒரு, 'ரெசிப்பி'யைத் தேடி கொண்டிருந்தேன்.அப்போது தான் சமையல், கிராப்ட், பாடல், நடனம் என, பல துறைகளைச் சேர்ந்தவர்களும், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் விதமாக, வீடியோக்களைப் பதிவேற்றி இருப்பதை கவனித்தேன்.

என்னுடைய கற்பித்தல் கனவையும், அப்படி நிறைவேற்றிக் கொள்ளலாமே என தோன்றியது. என் யோசனையை கணவரிடம் சொன்ன போது, 'இன்று ஸ்கூல் பீசுக்கு சமமாக டியூஷன் பீஸ் கட்ட வேண்டியிருக்கிறது. அதைச் சமாளிக்க முடியாமல் இருப்பவர்கள் பலர். அந்த எளிய குடும்பங்களின் மாணவர்களுக்கு உன் வீடியோக்கள் உதவியாக இருக்கட்டும்' என ஊக்கப்படுத்தினார்.

கடந்த, 2011ல், முதல் முயற்சியாக இயற்பியலின் அடிப்படை தத்துவங்களை, வரைபட உதாரணங்களோடு எளிய முறையில் விளக்கி, ஒரு வீடியோ எடுத்து, 'யூ டியூபில்' பதிவேற்றினேன். பதிவேற்றம் செய்த சில மணி நேரங்களிலேயே பலர் அதைப் பார்த்திருந்ததுடன், 'கமென்ட்'களையும் பதிவிட்டிருந்தனர்.அவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு நானும் பதில் சொல்ல, 'வீ வான்ட் மோர் வீடியோஸ் மேம்' என்றனர், உற்சாகத்துடன். அந்த உற்சாகம் என்னையும், தொற்றிக் கொண்டது.

ஆசிரியையாகி, வகுப்பறையில் பாடம் நடத்தியிருந்தால் கூட, 50 மாணவர்களுக்குத் தான் எடுத்திருக்க முடியும். ஆனால், ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பை, இதுவரை, 5,300 வீடியோக்கள், எனக்கு உருவாக்கி தந்தன.காலையில், ஐ.டி., நிறுவன வேலை, மாலை வீடு திரும்பிய பின் வீடியோ வேலை என, வாழ்க்கை ஓடியது. தினமும், 3 - 4 மணி நேரமும், விடுமுறை தினங்களில், 14 மணி நேரமும் வீடியோ எடுப்போம்.

சில வீடியோக்களுக்கு இரண்டு நாட்கள் செலவிட்டதும் உண்டு. ஆனாலும், 'ஈசியா புரிய வெச்சிட்டீங்க மேம்' என்று சொல்லும் மாணவர்களின், 'கமென்ட்' போதும், எங்களின் களைப்பை
எல்லாம் கரைப்பதற்கு.

இப்போது, ஐ.டி., பணியிலிருந்து விடுபட்டு, முழுநேரமாகவே, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில்
கவனம் செலுத்துகிறேன்.அடுத்ததாக, ஆங்கிலப் பாடங்களையும் வீடியோக்கள் மூலம் எடுப்பது, கணிதம், அறிவியல் பாடங்களை தமிழ், கன்னடம், பெங்காலி மொழிகளில் மொழிபெயர்த்து பதிவிடுவது உள்ளிட்ட ஐடியாக்கள் இருக்கின்றன.

நுாறு பெண்களுக்கு இந்திய அரசு வழங்கிய, 'சாதனை பெண்மணி'களுக்கான விருதை, கடந்த ஆண்டு ஜனாதிபதியிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement