Advertisement

டீ கடை பெஞ்ச்

ரகசிய முடிவுகளை, 'லீக்' செய்யும் அதிகாரிகள்!

''ஜனாதிபதி மாளிகையில, விருந்து சாப்பிட்டுட்டு வந்திருக்காவ வே...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''அவரே, இப்ப தானே பதவிக்கு வந்திருக்கார்... அதுக்குள்ள விருந்தாளிகள் தொந்தரவா பா...'' என, சிரித்தபடியே கேட்டார் அன்வர் பாய்.
''பெரம்பலுார், அ.தி.மு.க., - எம்.பி., மருதராஜா தலைமையில, முத்தரையர் சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், சமீபத்துல, டில்லி போய், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பார்த்தாவ வே...
''அப்ப, 'எங்க சமுதாய மக்களின் கோரிக்கைகள் சம்பந்தமா, கனிமொழி, எம்.பி., பார்லிமென்ட்ல பேசியிருக்காங்க... அதை நிறைவேற்றி தரணும்'ன்னு கேட்டிருக்காவ...
''கண்டிப்பா நடவடிக்கை எடுக்கிறேன்னு சொன்ன ஜனாதிபதி, எல்லாருக்கும் விருந்து சாப்பாடு போட்டு அனுப்பி வச்சிருக்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''கலெக்டர் அறையை, கட்சி அலுவலகம் மாதிரி, மாத்திட்டாங்க பா...'' என, அடுத்த விஷயத்திற்குள் புகுந்தார் அன்வர் பாய்.
''எங்க ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''விருதுநகர் கலெக்டர் ஆபீஸ்ல, சமீபத்துல, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்துச்சு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், அதிகாரிகள் கலந்துக்கிட்டாங்க பா...
''அரசு விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டத்துல, அமைச்சர், எம்.பி., கூட வந்த, 'கைத்தடி'கள் எல்லாம் உள்ளே புகுந்துட்டாங்க... கலெக்டர் நாற்காலி தவிர, மற்ற இடங்கள்ல உட்கார்ந்து, ரெண்டு மணி நேரத்துக்கும் மேலா, வெட்டி அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க பா...
''இது, அதிகாரிகளுக்கு இடையூறா இருந்தாலும், ஆளுங்கட்சியினரை எதிர்த்து, ஏதாச்சும் பேச முடியுமா... அதனால, அமைதியா இருந்துட்டாங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.
''ரகசியங்களை வெளியிடுறாங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''என்ன ரகசியங்களை, யார் வெளியிடுதாவ வே..'' என, விசாரித்தார் அண்ணாச்சி.
''தனியார் நிறுவனங்களிடம், மீட்டர், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட உபகரணங்களை மின்வாரியம் கொள்முதல் செய்யுதுங்க...
''இந்த பணிகளை, உபகரண மேலாண்மை பிரிவு தான் செய்யும்... இங்க, ஏற்கனவே ஒரு நேர்மையான பெண் அதிகாரி இருக்காங்க... இப்ப, நேர்மையான தலைமை பொறியாளரை நியமிச்சு
இருக்காங்க...
''இவங்களுக்கு கீழே இருக்கிற சில அதிகாரிகள், டெண்டர் சம்பந்தமா, உயர் அதிகாரிகள் நடத்துற ஆலோசனை, அதுல எடுக்குற முடிவுகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, 'போட்டு'
கொடுத்துடுறாங்க...
''அதுவும் இல்லாம, சில முக்கிய கோப்புகளை, நகல் எடுத்தும் கொடுத்துடுறாங்க.. அந்த கறுப்பு ஆடுகளை கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுத்தா நல்லதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
வேறு சில நண்பர்களும் வந்து பெஞ்சில் அமர, அரட்டை தொடர்ந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    நல்ல வேளை விருதுநகர் கலெக்டர் உட்கார இடம் குடுத்தாங்களே சந்தோஷ படுங்கய்யா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement