Advertisement

இமயத்தின் காதலர் ஜே.ரமணன்.

இமயத்தின் காதலர் ஜே.ரமணன்.


கடந்த நாற்பது வருடங்களாக இமயமலையில் பல்வேறு பகுதிகளை படம் எடுத்து இமயத்தின் காதலராகவே மாறிப்போனவர்தான் ஜே.ரமணன்.
இமயமலையில் ஆயிரமாயிரம் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன. மாசுபடாத மலைக்காற்றை சுவாசித்தபடி, அதன் வெளிகளில் அலைந்து திரியும் அனுபவம் அலாதியானது.


ஜே.ரமணனின் புகைப்படங்கள், பசுமை மாறாத அந்த அனுபவத்தை விழிகளுக்குத் தருகின்றன. இந்தியாவின் முதன்மையான 'லேண்ட்ஸ்கேப்' புகைப்படக் கலைஞரான ரமணன், பனிபூத்த மலையடிவாரங்கள், உறைந்து ஓவியமாக மாறியிருக்கும் அருவிகள், ஆபத்தான பனிப்பாளங்கள், நுரைத்துப் பொங்கும் நீரூற்றுகள் என தன் கேமராவால் குறிஞ்சி நிலத்தின் அழகை ரசனையோடு காட்சிப்படுத்துகிறார்.
40 வருடங்களாக ஒரு நாடோடியைப் போல மலைப் பரப்புகளில் சுற்றித் திரிகிற ரமணன், கட்டிடப் பொறியியல் படித்தவர். புகழ்பெற்ற ஆர்க்கிடெக்ட். சென்னை, திருச்சியில் பிரமாண்டமான பல கட்டிடங்களை டிசைன் செய்திருக்கிறார். திருச்சி என்.ஐ.டியில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.சென்னைக்காரரான இவர், தற்போது திருச்சியில் இருக்கிறார்.


எனது குரு சங்கர்லால் தவேயை சந்தித்தபோது எனக்கு 12 வயது அவருக்கு வயது 58. என் வீட்டுக்கு அருகில் குடியிருந்தார். உலகம் அறிந்த போட்டோகிராபர் .கொல்லிமலையில் நான் எடுத்த ஒரு படத்தை அவரிடம் காட்டினேன். அந்த வயதில் என் ஆர்வத்தைக் கண்டு வியந்த தவே, அதன்பின்பு எங்கு சென்றாலும் என்னையும் கூட்டிச் செல்வார். சனி, ஞாயிறுகளில் அவர்கூடவே என் பொழுதுகள் கழியும்.
யூகோஸ்லாவியாவில் ஒரு புகைப்படப் போட்டி நடந்தது. நான் எடுத்த ஒரு படத்தை அனுப்பி வைத்தார் தவே. 27 ஆயிரம் பேர் பங்கேற்ற அந்தப் போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அப்போது 18 வயது. அதன்பிறகு கேமராவும் என் அங்கமாகிவிட்டது. 'போட்டோகிராபி தனிமனிதனுக்கான கலை அல்ல... சமூகத்திற்கு பயன்பட வேண்டும்' என்கிற பொறுப்புணர்வை தவே எனக்கு ஊட்டினார். உத்தராஞ்சல் மாநிலத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் மலையேறும் பயிற்சிப்பள்ளியில் சேர்த்துவிட்டார். பயிற்சி முடிந்ததும் இமயமலைக்குக் கிளம்பிவிட்டேன். அன்றுமுதல் இன்றுவரை வருடத்துக்கு இரண்டு முறை இமயமலையில் ஏறிவிடுவேன்...'' - உற்சாகமாகச் சொல்கிறார் ரமணன்.


''மலைகளில் அபூர்வமான பல விஷயங்கள் உண்டு. எல்லாமே என் கண்களோடு முடிந்து போகின்றன. அதை பிறருக்கும் காட்சிப்படுத்த நினைத்தேன். அதன் விளைவுதான் என் புகைப்பட பயணம்'' என்கிறார்.
''மலையேறுவது ஒரு தவம் மாதிரி. கவனம் சிதறக்கூடாது. மன உறுதியும், கட்டுப்பாடும் வேண்டும். அதிர்ச்சி, ஆச்சரியம் என பலவித அனுபவங்கள் மலைகளில் கிடைக்கும். உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். ஆனால், இமய மலைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இணையான வனப்பும், வளமும் வேறெங்கும் இல்லை. ஒவ்வொரு முறையும் இமயமலை எனக்கு ஆச்சரியம் தருகிறது'' என்கிற ரமணன் இதுவரை 9 புகைப்படக் கண்காட்சிகளை நடத்தி யிருக்கிறார். எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுத் திரும்பிய டென்சிங், சும்கோ டாபி, எட்மண்ட் ஹில்லாரி ஆகியோர் கண்காட்சிகளை திறந்து வைத்துள்ளார்கள்.


இமயமலையில், 20 ஆயிரம் அடிக்கு மேல் உயரம் கொண்ட 900 சிகரங்கள் உண்டு. இவற்றில் கேதார்டோம், ஸ்ரீகண்டா, கோட்டேஸ்வர், கபூருடோம், பந்தர்பூஞ்ஜ், லடாக்கி ஆகிய சிகரங்களைக் கடந்திருக்கிறார் ரமணன். அந்தச் சிகரங்களின் அழகையும், ஆபத்தையும் அழகியலோடு அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது அவரின் கேமரா.
என்.சி.சி முகாமுக்காக மலையேற்ற பயிற்சிக்கு வந்த விருந்தாவை இமயமலையில்தான் சந்தித்தார் ரமணன்.மலையில் மனதை பரிமாறிக்கொண்டார்கள் மணக்கோலம் பூண்டார்கள் தங்கள் தேனிலவைக்கூட ஒரு மலை உச்சியில் கூடாரம் அமைத்து கொண்டாடினார்கள். இன்று தம்பதிகளாக இருவரும் இணைந்தே மலையேறுகிறார்கள்.


''மலை ஏறுவதற்கு இணையான ரிஸ்க், அங்கு புகைப்படம் எடுப்பது. காலையும், மாலையும் மட்டுமே லைட்டிங் நன்றாக இருக்கும். நல்ல படம் கிடைக்கும் என்று கருதினால் பல நாட்கள் ஒரே இடத்தில் காத்துக்கிடப்பேன். லடாக்கியில் ஓடும் சான்ஸ்கர் நதி உலகிலேயே மிகவும் அழகானது. மைனஸ் 35 டிகிரி குளிருள்ள பகுதி. 160 கிலோ மீட்டர் நீளமுள்ள அந்த நதி நவம்பர் மாதத்தில் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கும். அதில் நடந்து செல்வது சொர்க்கத்தில் நடப்பதைப் போன்ற அனுபவம்'' என்கிற ரமணன், இளம் தலைமுறைக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். விஞ்ஞான சாகசக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி, அதன்மூலம் குழந்தைகளுக்கு மலையேற்றப் பயிற்சி தந்து இமயமலைக்கு அழைத்துச் செல்கிறார்.
-தான் எடுத்த இமயமலை படங்களை மையமாக்கொண்டு 'தி ஜாய் ஆப் தி ஹிமாலாயா' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே 'மவுண்டன்ஸ் ஆப் அவர் டெஸ்டினி' என்ற அடுத்த புத்தகத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.தான் எடுத்த படங்களை விற்றுக்கிடைத்த பத்து லட்ச ரூபாய் பணத்தை தசைநார் தேய்வு(மஸ்குலர் டிஸ்ட்ரோபி) நோய் கண்டவர்களுக்கு நிதியாக வழங்கியுள்ளார்.

கடந்த வாரம் பெஸ்ட் போட்டோகிராபி டுடே தமிழ் இதழின் சார்பாக ஜெ.ரமணன் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.அவரை வாழ்த்துவதற்கான எண்:9443359747.


-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement