Advertisement

யெச்சூரிக்குதொடரும் சவால்கள்!

ராஜ்யசபா என்பது அதிக அமளி நிறைந்த சபை என்று இப்போது ஆகிவிட்டாலும், அது பல்வேறு துறையில் ஆழங்கால்பட்ட அறிஞர்கள் அடங்கிய சபை என்ற கருத்து உண்டு. முன்னாள் ஜனாதிபதி பிரணாப், தன் மலரும் நினைவாக தெரிவித்த கருத்துக்களில், அவர் முந்தைய காலத்தில் ராஜ்யசபாவில் அங்கம் வகித்த சிறப்பான எம்.பி.,க்களை கூறிய போது, கம்யூனிஸ்ட் தலைவர்களான இந்திரஜித் குப்தா, புபேஷ் குப்தா போன்ற தலைவர்கள் பெயரைக் கூறியது, அவர்களது பார்லிமென்ட் வாதத்திறமையைக் காட்டுவதாகும். சபைக்கான சட்டவிதிகளைக் குறிப்பிட்டு, அதே சமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அடிப்படைகளை கடுமையாக விமர்சிக்கும் சீத்தாராம் யெச்சூரி, இனி இச்சபையில் நுழைய வாய்ப்பில்லை. நாடு முழுவதும் மார்க்சிஸ்டு கட்சி தேர்தல் வெற்றி வாய்ப்புகளை இழந்து விட்ட நிலையில், அவர் இனி லோக்சபா எம்.பி.,யாகவும் வர வாய்ப்பில்லை. மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணையும் வாய்ப்பை நழுவ விட்டதை, இப்போது அக்கட்சியினர் உணரலாம்.
இந்திரா பிரதமரானதும், அவருடன் மார்க்சிய சிந்தனை மிக்க தலைவர் மோகன் குமாரமங்கலம் இணைந்து, மார்க்சிய சிந்தனையுடன் கூடிய காங்கிரஸ் கொள்கைகள் நாட்டை ஆள சிறந்த வழி என்ற தத்துவம் நிலை பெற்றது. அதனால், காங்கிரஸ் என்ற மாபெரும் கட்சியில் மார்க்சிய சிந்தனை சேர்ந்ததால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனிப்பட்ட அதீத வளர்ச்சி குறைந்தது என்பதை, அரசியல் வல்லுனர்கள் ஏற்பர்.அதே சமயம் காங்கிரசின், கூட்டணி தர்ம ஆட்சி வந்த பின், அதன், அரசின் அணுசக்தி கொள்கை முடிவைக் காரணம் காட்டி, அவர்களைப் பகைத்து, கூட்டணியை விட்டு வெளியேறியது சரியா என்பதை, இன்று இவர்கள் ஆலோசிக்கலாம்.
மூன்றாவது முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட அக்கட்சி, யெச்சூரியை அனுமதிக்கவில்லை; அவர், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர். கட்சிப் பணியாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர், பார்லிமென்ட் எம்.பி.,யாக பதவியேற்கக் கூடாது என்பது அக்கட்சியின் பொதுவிதியாகும். அதுமட்டும் அல்ல, மேற்குவங்கத்தில் அவர் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில், அக்கட்சிக்கு உள்ள, 31 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு போதாது. அங்குள்ள காங்கிரஸ் ஆதரவுடன் அவர் எம்.பி.,யாக அக்கட்சி விரும்பவில்லை; காங்கிரஸ் ஆதரவைப்பெற முயற்சிக்கவும் இல்லை. கேரளாவில் அவர் மீண்டும் போட்டியிட, அக்கட்சி அனுமதிக்கவில்லை. அவருக்கும் அக்கட்சியின் மற்றொரு பிரபல தலைவர் கராத்துக்கும் உள்ள கருத்து வேறுபாடு, யெச்சூரி தேர்வை தடுத்திருப்பதாக கருத்து உள்ளது.
தவிரவும், முன், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு கூட்டணி தத்துவத்தில் பிரதமராக ஆசைப்பட்ட போது, அதையும் கட்சி தடுத்தது. அதற்குப்பின் லோக்சபா சபாநாயகராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, இந்த இயக்கத்தின் மாபெரும் தலைவர். அவர் லோக்சபாவை சட்டாம்பிள்ளை போல நடத்திய சபாநாயகர் என்றழைக்கப்பட்டவர். அரசியல் சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர். தன் கட்சி, காங்கிரஸ் கூட்டணியை முறித்த பின்னும் அவர் அப்பதவியில் தொடர்ந்து இருந்ததைக் காரணமாக்கி, முதுபெரும் தலைவரான அவரை கட்சியில் இருந்து நீக்கினர். பின், மே.வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற விரும்பி, அவரைச் சரிக்கட்டி கட்சியில் சேர்த்தார் யெச்சூரி. மம்தா ஆட்சி தொடர்ந்தது வேறு விஷயம்.
பொதுவாக, சந்தைப் பொருளாதாரம், அதிக கல்வி முன்னேற்றம், தகவல் பரிமாற்றத்தில் அதிகவேகம் ஆகியவை, இன்று இக்கட்சியின் பழைய சிந்தனைகளுடன் அதிகம் இணைவதில்லை. இந்தியா மிகப் பெரும் ஜனநாயக நாடு என்பதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள வேறுபட்ட பொருளாதாரப் பிரச்னைகளும், இவர்கள் கருத்துக்களை ஏற்கும் நிலையில் இருந்து மாறிவிட்டது. இவர்கள் வலியுறுத்தும் மதச்சார்பற்ற தன்மையும் சமுதாயத்தில் சிலரை, ஓட்டுக்காக தழுவிக்கட்டும் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இச்சூழ்நிலையில், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் கணிசமான மக்கள் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் இக்கட்சியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. அதை தலைமைப் பொறுப்பில் இருக்கும் யெச்சூரி, இனி எப்படிக் கையாளப்போகிறார் என்பதை மற்ற கட்சிகள் உன்னிப்பாக கவனிக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    பொதுவாகவே கம்யூனிச சித்தாந்தம் உலகெங்கும் தோல்வியை தழுவி உள்ளது.இந்தியாவிலும் இவர்களது சந்தர்ப்பவாத அரசியல், (எதிர்க்கும் கட்சியுடனேயே வேறொரு கட்சியை எதிர்ப்பதற்காக கூட்டணி வைப்பது போன்றவை) இவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக ஆக்கிவிட்டது.

  • Kalai Mahal - Madurai,இந்தியா

    இவர் மதச்சார்பற்ற பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை , காசுக்காக கூவுறன் தெரியுது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement