Advertisement

தலையங்கம்: 'குட்கா' ஆதிக்கம் தடுப்பது எளிதா?

'குட்கா' ஆதிக்கம் தடுப்பது எளிதா?

தமிழகம் மட்டும் அல்ல, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், போதைப் பொருள் அதிகரிப்பு குறித்த தகவல்கள் அச்சமூட்டுகின்றன. தமிழகத்தில், 'குட்கா' ஊழலானது, ஆளும் அரசை விமர்சிக்க, எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த ஆயுதமாக மாறி இருக்கிறது. போதைப் பொருள் கலந்த சாக்லெட், 'மாவா' என்ற போதைப் பாக்கு ஆகியவை, எந்த அளவுக்கு, சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பாதித்திருக்கிறது என்பதை ஆராய்ந்தால், இதன் அபாயம் புரியும்.

போதைப் பொருள் விற்பனை, தயாரிப்பு ஆகியவை பெரிய அளவில் நடப்பதும், அதை காவல் துறை கண்டுகொள்ளாமல் இருக்க, கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதையும், வரித்துறை சோதனைகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. தமிழக போலீஸ் அதிகாரிகள் மீது, இது குறித்த புகார் எழுந்ததை அடுத்து, அதுபற்றி விசாரிக்க, ஆணையம் அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

பல்வேறு விஷயங்களில், ஊழல் நடைமுறையாகும் போது, இது, எல்லாரும் புழங்கும் பொருளாகி விட்டதால், மனிதகுல நலத்திற்கு எதிரானது என்ற வாதத்தை எழுப்பினால் அது, அதிகம் எடுபடுவதில்லை. போதை, 'மாபியா'க்கள் நுாற்றுக்கணக்கானோர், கோடிகள் புழங்கும் தொழிலை கையாளுவதால், இன்று அதை உடனடியாக சந்தித்து, தீர்வு காண்பது சுலபம் அல்ல. இதில், உலகின் பல நாடுகளில் வாழும், 'தாதா'க்களின் தொடர்பும் இருக்கிறது.

சினிமா நடிகை காஜல் அகர்வால், தன் உதவியாளர் ஜோசப் வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது கண்டு அதிர்ந்திருக்கிறார். தெலுங்கு சினிமா உலகில், இதன் ஆதிக்கம் இருப்பதை அதிகம் காண முடிகிறது. இந்த விசாரணையில், முமைத்கான் என்ற நடிகை சிக்கியுள்ளார். அதுமட்டும் இன்றி, ஐ.டி., கம்பெனிகள் மீதும், தெலுங்கானா அரசு புகார் கூறி, அவை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன.

தமிழகத்தில், குட்கா குறித்து வருமான வரித்துறை கண்டுபிடித்த கோப்புகள், காணாமல் போன சர்ச்சையும் உண்டு. சில ஆண்டுகளாக பள்ளிகளின் முன்பகுதிகளிலும், சிறிய கடைகளிலும், குட்கா போன்ற போதைப் பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. சென்னையில் தற்போது, 'குட்கா' பொருட்கள் விற்பனையில் சம்பந்தப்பட்ட பலர் கைதாகி உள்ளனர்.

போதைப் பொருட்கள் அதிகம் புழங்க விடாமல் கண்காணிக்கும், 'நார்காடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ' என்ற அமைப்பு, இந்தியாவின் பெரிய நகரங்களில், 'கொகைன்' போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறது. அதேநேரத்தில், அதிக மக்கள் நெருக்கம் உடைய நகரங்களில் போதைப் பொருள் துவங்கி, போதை சாக்லெட் வரை, எளிதாக கடத்தப்பட்டு விற்கப்படுவதாக தகவல் உள்ளது. பல நுாறு கோடி வர்த்தகம் உடைய இந்த பாதக தொழிலில், ஈடுபடும் தலைவன் யார் என்ற ரகசியம் எளிதில் கண்டறிய முடியாதது.

சிறு சிறு அளவில் இவற்றைக் கடத்தும் கடைசி நபரின், தினசரி வருமானம் அதிகமாக இருப்பதாலும், அவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' தகவல் உட்பட, பல ரகசிய பரிமாற்றங்கள் உதவுவதால், இந்த சாம்ராஜ்யத்தின் பணியாளர்களாக அவர்கள் செயல்படுகின்றனர்.மத்திய அரசு, சமீபத்தில் திறமை குறைந்த, முறைகேடுகள் செய்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலரை பதவிக்காலம் முடிவடையும் முன், 'சஸ்பெண்ட்' செய்திருக்கிறது. அதில், 'போதைத் தடுப்பு சட்டம் 1985'ன் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் போலீஸ் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார்.

ம.பி., மாநிலம் உட்பட சில மாநிலங்களில் உற்பத்தியாகும், நாம் பயன்படுத்தும், 'கசகசா' என்ற நாட்டு மருந்து பயிர், மருத்துவ குணங்கள் உடையது என்றாலும், இதை போதையாக மாற்றும் தொழிலும் நடக்கிறது. புகையிலைப் பொருட்கள் அபாயம் அதிகம் என்ற விழிப்புணர்வு ஒரு பக்கம் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கொகைன், மார்பின் கலந்த அதிக போதைப் பொருட்கள் சமுதாயத்தில், இன்னமும் அதிகம் பரவாததற்கு காரணம், அதன் விலை அதிகமாக இருப்பதாகும்.

ஆனாலும், இப்பழக்கத்தை சிறுவயதினர் மேற்கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு இதனால் ஏற்படும் மூளை நரம்பு பாதிப்பு, அவர்களை செயலாற்ற விடாமல் பாதித்து விடும்.தற்போது, சென்னை உட்பட, பல நகரங்கள் இப்பாதிப்பில் இருந்து எப்போது மீளும்... முற்றிலும் ஒழிக்க அரசு இயந்திரத்தால் முடியுமா? என்ற கேள்விகளுக்கு எளிதில் விடை காண்பது சிரமம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement