Advertisement

கோவில்கள் பராமரிப்பு புதிய பார்வை தேவை!

பழமை வாய்ந்த திருக்கோவில்கள் புனரமைப்பு, தேர்கள் சீரமைப்பு, கோவில் குளங்கள் துாய்மையாக்கும் திட்டம் ஆகியவை, அறநிலையத்துறை அணுகுமுறைகள் என்று, சட்டசபையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பழநி கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், 15 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே போல, மதுரை கள்ளழகர் கோவிலில் குடிநீர் வசதிக்காக, 2.5 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் தரும் திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர கிராமப்புற கோவில்கள், பெரிய கோவில்களில் சில வசதிகள் உட்பட பல தகவல்கள், அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கோவில்களில் உலோகச் சிலைகள் பாதுகாப்பிற்கு என, சில நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்வதாக அறிவித்த போதும், சிலை கடத்தல் குறித்த பின்னணித் தகவல்கள் அதிர்ச்சி தருகின்றன.ஆன்மிக, கலாசார கேந்திரமாக தமிழகம் இருக்க வழி தேடிய, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உணர்வு மதிக்கத்தக்கது. ஆத்திக கருத்துக்களை அழிக்க, பிரிட்டிஷார் காலத்தில் மறைமுக செயல்கள் அரங்கேறின.ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பழம் பெரும் கலாசார கேந்திரமான கோவில்கள், அதன் மாட்சியை இழந்து வருகின்றன.
அன்னசத்திரம் அல்லது கோவில்களை பராமரிப்பதை விட ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது முக்கியம் என்ற பாரதியாரின் கருத்து, கோவில்களை அழிக்க கூறியதல்ல. சுடர்மிகு அறிவொடும் இறைவி தன்னைப் படைத்ததாக அவரே பாடிஇருக்கிறார். இது எதற்காக என்றால், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை நியமித்து பாதுகாத்தல், எச்சரிக்கை மணி, 'சி சி டிவி' கேமரா என்ற பாதுகாப்பு அம்சங்கள் தேவை என்று அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், கலாசார பொக்கிஷங்களான உலோக, கற்சிலைகள் கடத்தப்பட்டது எளிதாக தொடர்ந்து நடத்திருப்பது, வழக்குகளாகி திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. சிலைகள் இருப்பு பற்றி கணினியில் பதிவு செய்து, நான்கு வாரத்தில் தகவல் தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. சிலை கடத்தலில் தொடர்புடைய போலீஸ்காரர் தலைமறைவாக இருப்பது இதில் முக்கியமானது. தொடர்ந்து ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், இவ்வழக்குகளை கையாள ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. கடத்தலின் முழுப்பரிமாணமும் வெளிவர சிறிது காலம் ஆகும்.தவிரவும், தமிழகத்தில் உள்ள புராதனமான கோவில்களில், 20 சதவீதம் மட்டுமே உரிய வருமானத்தைக் கொண்டிருக்கின்றன. சில பெரிய கோவில்களுக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தி, கடைகளாகவும், வீடுகளாகவும் மாற்றிய பலரது செயல்கள் அம்பலமாகின்றன. கோவில் நிலங்களை கையகப்படுத்தி, அதை பட்டா போட்டு, பலர் கைமாற்றியதை, 30 ஆண்டு கால ஆவணங்கள் எளிதாக காட்டும்.
பழநி போன்ற கோவில் வருமானத்தை, கல்லுாரி கட்டி செலவழிக்க வேண்டும் என்ற அரசு கருத்து, கவர்ச்சியானது.தமிழகத்தின் பழம் பெருமைக்கான ஆதாரங்களை கொண்ட கோவில்கள் வித்தியாசமான சுற்றுலாத் தலங்கள் ஆகும்.ஆகவே, முற்றிலும் ஆன்மிக உள்ளம் கொண்ட, படித்த, அவற்றின் துாய்மையைக் காக்கும் தகுதி நிறைந்தவர்கள், அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்.அது மட்டும் இன்றி, அரிய உலோகத் திருமேனிகளை காக்கும் நடைமுறைகள் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மாறாவிட்டால், அதில் கூட சிலை கடத்தல்காரர்கள் தயாரித்த போலி இடம் பெறலாம்.கோவில்களில் அன்னதான திட்டம் தேவையா, அதன் மூலம் சாப்பாடு தேடி வரும் கும்பல் அதிகரிப்பது தடுக்கப்படுமா என்பதையும் ஆராய வேண்டும். மேலும், பிரசாத கடைகள் என்பது தரக்கட்டுப்பாடு கொண்டதாகவும், அதனால் கோவில் மண்டபங்கள் சிற்றுண்டிச் சாலையாக மாறாமலும் இருக்க வழி தேவை.எல்லாவற்றையும் விட, சில முக்கியமான கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ள இளைய தலைமுறையினர், பூஜை நடைமுறைகளுடன், கணினிஅறிவு பெற்றவர்கள், அவர்களை முக்கிய குழுவில் நியமிக்கும் நடைமுறை ஏற்படுத்துவதுடன், தமிழ் வழிக்கல்வியில் உயர் பட்டம் பெற்ற, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே கோவில் நிர்வாகப் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.இவற்றையெல்லாம் அரசு பரிசீலிக்கும் போது, கோவில் குளங்கள் பாதுகாப்பு, சுற்று சூழல் பராமரிப்பு பற்றியும் முடிவு செய்தால், இக்கலாசார கேந்திரங்கள் அடுத்த நுாறாண்டுகளுக்கு காக்கப்படும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement