Advertisement

சீனா - இந்தியா: கசப்பான உண்மைகள்!

இந்தியா - சீனா இடையே போர்மேகம் சூழும் என்ற கருத்து பேசப்படும் வகையில், புதிதாக ஒரு பிரச்னை எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய ஊடுருவல், பயங்கரவாதத் தாக்குதல் நீடிக்கும் போது, இது சேர்ந்திருக்கிறதா என்ற கவலை எழுவது நியாயமானது.
பூட்டான், சிக்கிம் ஆகிய இரண்டும், நம் பாதுகாப்பில் உள்ள அண்டை நாடுகள். இவைகளுடன் நம் எல்லை இருக்கிறது. சிக்கிமை பாதுகாக்கும் தார்மீக உரிமையும் நமக்கு உள்ளது. இந்த இரு நாடுகளுடன் நம் எல்லை அமைந்திருப்பதுடன், இமயமலைப் பகுதியில், 'நாதுல்லா கணவாய்' பகுதியில் சீன எல்லையும் அமைந்திருக்கிறது. நம்முடன் பஞ்ச சீலக் கொள்கையை வலியுறுத்திய சீன அரசு முன்பு, 1962ல், நம் மீது போர் புரிந்ததை அனைவரும் அறிவர். அன்றைய பிரதமர் நேருவின் மாட்சியைக் குறைக்கும் விதத்தில், ஒரு பக்கம் நேசக்கரம் நீட்டி, போர்முனையில் தோற்கடித்தனர். லோக்சபாவில் அன்றைய காலகட்டத்தில் சீனாவுடன் நமக்கு உள்ள ஆயிரக்கணக்கான கி.மீ., எல்லைக் கோட்டை ஏன் நிர்ணயம் செய்து காக்க முடியவில்லை என்ற கேள்வி கூட எழுந்தது. அப்போது லோக்சபாவில், சில எம்.பி.,க்கள் சீனாவின் நட்பை அதிகம் வலியுறுத்திய போது, காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான மகாவீர் தியாகி, 'சீனாவுக்கு புத்தியையும், நம் நாட்டில் வயிற்றையும் கொண்டவர்கள் உள்ளனர்' என்று லோக்சபாவில் சாடியதும் உண்டு.
அதன்பின், சீனாவை நாம் எதிர்கொள்ளும் தனித்திறமை அபாரமாக வளரவில்லை.
இன்று சீனா, தன் ஆளுமையை பசிபிக் கடல் பரப்பு, இந்தியப் பெருங்கடல் பரப்பில் அதிகரிப்பதுடன், பாகிஸ்தானை தன்பக்கம் வளைத்து நமக்கு எதிராக காய் நகர்த்துகிறது.
இப்போது பூடான், சிக்கிம் பகுதிகளில், சீன எல்லை அருகே அமைந்த டோகோலாம் என்ற பகுதியில், தன் ராணுவத்தை நிறுத்தி பிரச்னையை துவக்கி இருக்கிறது. இதற்கு அருகே நாதுல்லாபாதை எல்லைக் கோடு அமைந்திருக்கிறது. இது இமயமலைப் பகுதியில் உள்ளது. நாம் சீனாவை கையாள இது வசதியான இடம். இதற்கு முன் இங்கு சிறிய மோதல், 1967ல் நிகழ்ந்த போது, நம் வீரர்கள், 88 பேர் மரணித்த பரிதாபமும் உண்டு. இன்றைய நிலையில் சிக்கிம் இதுவரை, சீன ஆக்கிரமிப்புக்கான முயற்சிகளை பெரிதாக பேசாவிட்டாலும், நம் உதவியை நாடும் வகையில் சில பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இப்பகுதியில் அமைந்த டோகோலாம் பகுதியை சீனா அதிகமாக வளைக்கும் பட்சத்தில் அவர்களது ராணுவத்திற்கு, அசாத்திய தாக்குதல் வலிமை வரும். இதே பகுதியில் நம் எல்லை, 200 கி.மீ., தொலைவுக்கு இருப்பதால், இதை சீனா தன் ஆளுமைப் பகுதி என்ற கருத்து தவறானது என்று, 1967ல் பிரதமர் நேருவே கடிதம் எழுதியது சாட்சியமாகும். அதே சமயம், அருணாசலப் பிரதேச எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் பலம், 40 ஆயிரம் வீரர்களை கொண்டு அதிகரித்திருக்கிறது. அதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் பனி படர்ந்த பகுதிகளில் போரிடும் வகையில், மலைப்பயிற்சி பெற்ற, 10 ஆயிரம் ராணுவ வீரர்கள், லடாக் போர்முனையில் உள்ளனர். சில பகுதிகளில், கவச வாகன பீரங்கிகள் செல்லும் வசதிக்கான சாலைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
நமக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள 3,500 கி.மீ., எல்லைக்கோட்டுப் பகுதியில் எளிதாக பீரங்கிகளை இயக்கி, சிறிய ரக ஏவுகணைத் தாக்குதலை நாம் நடத்தலாம். அதைத்தான் மறைமுகமாக ராணுவ அமைச்சர் ஜெட்லி, 'இது 1962ம் ஆண்டு அல்ல' என்கிறார் போலும். அதன் அடையாளமாக சென்ற மாதம், சீன ராணுவப் படைவீரர்கள் எல்லையைத் தாண்டிய போது, நம் வீரர்கள் அவர்களை முட்டி மோதி, அவர்கள் எல்லைக்குள் நிறுத்திய காட்சிகள் வெளியாகின.
மற்றொரு அம்சமாக, நம் நாட்டிற்கும், சீனாவுக்கும் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு, 70 ஆண்டுகளாக வரையறை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக உள்ளன. இரு நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் நல்லுறவு நீடிக்க, உரிய பேச்சுக்கள் நடத்துகின்றனர். இந்த விபரங்கள் எதிர்க்கட்சிகளுக்கும் அரசால் தரப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், சீனாவின் விஸ்தரிப்பு முயற்சிகளை ஆதரிக்காதது நல்ல சூழ்நிலையாகும் ஆகவே, சீனாவுடன் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனைகளை மத்திய அரசு துவக்கியிருப்பதால், சீனாவின் கருதுகோள் வெளிப்படையாகத் தெரியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement