Advertisement

நிர்வாக திறன் இனி எப்போது?

தமிழக சட்டசபை கூட்டம் முடிந்து விட்டது. கடைசி நாளில், எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், எம்.எல்.ஏ., ஒருவர், மாதந்தோறும் 1.05 லட்சம் ரூபாய் பெறுவார். தவிர, 2017 முதல், தொகுதி மேம்பாட்டு நிதி, இதுவரை வழங்கப்பட்டதை விட மேலும், 50 லட்சம் ரூபாய் உயர்த்தப்படுவதால், எம்.எல்.ஏ.,வுக்கு, இனி ஆண்டு ஒன்றுக்கு, 2.50 கோடி ரூபாய் கிடைக்கும். மற்ற சில மாநிலங்களை, இவர்கள் சம்பளத்துடன் ஒப்பிட்டால், ஒடிசா உட்பட, ஒன்றிரண்டு மாநிலங்கள் தவிர, அனைத்து மாநிலங்களும் அள்ளித் தருகின்றன.
இச்சம்பள உயர்வு விஷயத்தில், தி.மு.க., ஆதரவு காட்டவும் இல்லை; வேண்டாம் என மறுக்கவும் இல்லை. போதாக்குறைக்கு அரசு இலச்சினை பொறித்த காருடன் பவனி வர வேண்டும் என அக்கட்சிப் பிரமுகர், சட்டசபையில் கோரிக்கை வைத்திருக்கிறார். அதனால், மீண்டும், 'அதிகார ஆதிக்கம்' வராதா? அதேபோல, ராஜ்யசபாவில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, 'எம்.பி.,க்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இன்றைய நிலையில், அரசியல் என்பது தொழிலா அல்லது மாதச் சம்பளம் பெறும் கம்பெனிகள் போன்ற அமைப்பா என்ற கேள்வி எழலாம். அதிகார வர்க்கம் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு, மத்திய, மாநில அரசுகளின் வருவாயில் பெருமளவு செலவாகிறது. அதேபோல, சட்டமியற்றும் திறமை உடைய, இவர்களது சம்பளம் ஏன் குறைவாக இருக்க வேண்டும் என்ற விவாதத்திற்கு முடிவு தேவை. அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோர் சேர்ந்து செயல்படுத்தும் எல்லாத் திட்டங்களும், நுாற்றுக்கு நுாறு வளர்ச்சிப் பாதையில் சென்றிருந்தால், அதன் பலன் மக்களை சென்றடைந்திருக்கும். ஆனால், அதற்கான அறிகுறி இல்லை என்பதை, இப்போது வரும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைகளை ஆராய தனி அமைப்பு வைத்தால், வேறு எந்தப் பணியையும், அரசால் நிறைவேற்ற முடியாது.தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதா மறைவுக்குப் பின், எழும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் அதிகம். முதல்வர் ஆக ஆசைப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இவை செய்தியாக பரபரப்பாக வெளியாகும் சமயத்தில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், அ.தி.மு.க.,வை தற்போது கையில் வைத்திருப்பதாக கூறப்படும், சசிகலா நடத்திய லஞ்ச பேரம் வெளிவந்திருக்கிறது. இதைப் பற்றிய தகவல், அதிக ஆர்வத்தை கிளப்பினாலும், இந்தியா முழுவதும், இன்னமும் சிறைத்துறை சீர்திருத்தம் நடக்கவில்லை. பணப்பரிவர்த்தனை செய்து, வசதிகள் ஏற்படுத்தியதாக சசிகலாவைக் காட்டும், வீடியோ காட்சிகள் இனி விசாரணைக்கு வரும். குறைகளை எழுப்பிய, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா இன்று அப்பதவியில் இல்லை. அவரது உயர் அதிகாரி, டி.ஜி.பி., சத்தியநாராயணா பதவியில் இருந்து அகற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்.
டில்லி திஹார் சிறையில், பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட கிரண்பேடி, தற்போது ரூபாவை பாராட்டி உள்ளார். ஆனால், இன்று இம்மாதிரி ஊழல்களை ஆதாரமாக்கும், 'ஸ்பைகாம்' எனப்படும், சிறைக்குள் கேமரா சென்றது எப்படி என்பது விசாரணையில் தெரிய வரலாம்.
ஏனெனில், 'பிக்சல்' எனப்படும், துல்லியமான பதிவுகள் அதிகம் உடைய இக்காட்சிகள், ஊடகங்களில் பரப்பப்பட்டன. அதேபோல, சில உயர்ரக மொபைல்களும் எளிதாக படம் மற்றும் குரல்களை பதிவு செய்யும் தன்மை உடையவை. இதை திட்டமிட்டு உள்ளே அனுப்பியது யார்? தமிழகத்தின் அரசியலில், தன் குடும்ப முக்கியத்துவத்தைக் காக்கும் சசிகலா அல்லது அவருக்கு வேண்டியவர்களுக்கு, இதை யூகிக்க முடியவில்லையா என்ற கேள்வி இனி வரலாம்.
சிறைகளில், விசாரணை கைதிகள் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. அதிக கிரிமினல் வழக்குகளுக்கு தீர்வு காண முடியாத நிலை இன்றும் இருக்கிறது என்பதும் உண்மை.
தமிழக அமைச்சர்கள் மீதான லஞ்சப்புகார் விசாரணைகள், 'குட்கா' விற்பனையில், உயர் போலீசார் தொடர்பு என்ற புகார்கள், தமிழகத்தை மோசமாக மதிப்பீடு செய்ய வழிகாட்டும்.
இதில், தமிழக அரசின் வருவாய், 5.38 சதவீதமாக குறைந்த செய்தி, அதிக முக்கியத்துவம் பெற வாய்ப்பில்லை. இச்சூழ்நிலையில், தமிழகத்தை சினிமாத் துறை பிரபலங்கள் தான் காக்க முடியும் என்ற கருத்து வலம் வருவது, தமிழகம் நிர்வாகத்திறன் உடைய மாநிலமாக மாறுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement