Advertisement

உறுதிப்பாடு மீதான மோடியின் உறுதி!

பார்லிமென்டின் சிறப்பு கூட்டங்களை நள்ளிரவில் நடத்துவது வழக்கமான நிகழ்வன்று. மிகவும் அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே, அத்தகைய கூட்டங்கள் நடத்தப்படும். அத்தகைய சிறப்பு கூட்டங்களில், பிரதமர் நிகழ்த்தும் உரை, மிகவும் ஆர்வத்துடன் கவனிக்கப்படும்.

ஜூன், 30 நள்ளிரவில், ஜி.எஸ்.டி., தொடர்பான, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தில், பிரதமர் மோடி ஆற்றிய உரை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே இருந்தது.
ஜூலை, 1ல், நாட்டின் பொருளாதார புரட்சி பிறந்த நேரத்தில், பிரதமர் மோடி, சிறந்த ராஜ தந்திரியாக காட்சி அளித்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோருடன் அமர்ந்த படி, ஜி.எஸ்.டி.,யின் முக்கிய அம்சங்களை பட்டியலிட்ட மோடி, ஒவ்வொரு இந்தியருக்கும், ஜி.எஸ்.டி., எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை விளக்கினார். பிரணாப்பும், அன்சாரியும், முந்தைய, காங்., அரசால் நியமிக்கப்பட்டவர்கள்; காங்கிரசுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்கள். தேவகவுடா, 1996ல், பா.ஜ., ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, பிரதமராக்கப்பட்டவர். அவர்கள் முன்னிலையில், பிரதமர் மோடி பேசி முடித்த பின், அவரின் உரை, முந்தைய பிரதமர்களின் உரைகளுடன் ஒப்பிட்டு, அலசப்பட்டது. 1947 ஆக., 15ல், பண்டித நேரு நிகழ்த்திய உரைக்கு இணையாக இருந்தது என்பதே, பலரின் கருத்தாக இருந்தது. ஜனநாயக கோவிலான பார்லிமென்டில், 70 ஆண்டுகளுக்கு முன், காலம் கடந்தும், மக்களின் மனதில் மிகுந்த மரியாதையுடன் வாழும், அன்றைய பிரதமர் நிகழ்த்திய உரையும், அதே தகுதிகள் வாய்ந்த இன்றைய பிரதமரின் உரையும், ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது, ஒரு அதிசய நிகழ்ச்சி தான்.

விதியும் உறுதிப்பாடும் : விதிக்கு முக்கியத்துவம் கொடுத்த நேருவின் உரையும், உறுதிப்பாடு மீதான மோடியின் உறுதி உரையும், வெகுவாக மாறுபட்டே இருந்தது. விதிக்கும், உறுதிப்பாட்டிற்கும் இடையேயான முரண்பாடு, இந்த இரண்டு பிரதமர்களின் உரைகளில் நன்றாகவே வெளிப்பட்டது. நேருவின் உரையின் முக்கிய அம்சமே, அவருடைய, 'ஸ்டைல்' தான். நேருவை போல் சாதுர்யமாக, சரளமாக சிலரால் மட்டுமே பேச முடியும். அவருடைய உரையின் ஒவ்வொரு வார்த்தையும், எதிர்கால பேச்சாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்
ஆனால், மோடியின் உரை, அதற்கு மாறாக, சாதுர்யத்திற்கு பதில், உறுதிப்பாட்டுடன் இருந்தது. செல்ல வேண்டிய திசை மற்றும் பாதையைத் தெளிவுபடுத்துவதாக இருந்தது.
சரியான திசையில் எடுத்து வைக்கும் அடியே, ஜி.எஸ்.டி., என்பதை நாட்டுக்கு உறுதிப்பட தெரிவித்த மோடி, எதிர்நோக்கியுள்ள பாதை குறித்தும் நன்கு விளக்கினார். இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை, அவ்வப்போது கண்டறிந்து நீக்கும் பணியில், 125 கோடி மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தலைவர்களை மறக்காதவர் : காலனி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து, தன் உரையில் மறக்காமல்
குறிப்பிட்டார், மோடி. மஹாத்மா காந்தி, சர்தார் படேல், பாபாசாகேப் அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத், மவுலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, ஆச்சார்ய கிருபளானி ஆகியோரின் பெயர்களை, மோடி குறிப்பிட்டார். ஆனால், மோடி தானாகவே ஆழ்ந்துள்ள, கொள்கை ரீதியான அமைப்பிற்கும், இந்த தலைவர்களுக்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தியாகிகளை குறிப்பிட அவர் தவறவில்லை.
மாறாக, நேருவின் அப்போதைய உரையில், சுதந்திர போராட்டத்தில், அவரின் தோளோடு தோளாக நின்றிருந்த எந்த தலைவர்கள் குறித்தும், அவர் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஜி.எஸ்.டி., குறித்து, மோடி பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் அடங்கிய, ஒருங்கிணைந்த, வலிமையான இந்திய குழு பற்றி குறிப்பிட்டார். இந்த குழுவில், பாஜ., மற்றும் பா.ஜ., அங்கம் வகிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, இதர மாநில அரசுகளும் உள்ளன என்பதை மறக்கக் கூடாது.ஆனால், நேருவின் உரையில் இத்தகைய குழு பணி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உரையாற்றிய மொழி : நேருவும், மோடியும், எந்த மொழியில் உரையாற்றினர் என்பதை கவனித்தாலே, அவர்கள் யாருக்காக பேசினர் என்பது தெளிவாகும். நேரு, அப்பழுக்கற்ற ஆங்கிலத்தில் பேசினார்; அவருடைய ஆங்கிலப் புலமை, பிரிட்டிஷாரின் ஆங்கிலம் போலியானது என, கூறும் அளவுக்கு இருந்தது. பிரதமர் மோடி, ஹிந்தியில் பேசினார். பார்லிமென்டில் அவர் பலமுறை ஹிந்தியில் தான் பேசி இருக்கிறார். 70 ஆண்டுகளுக்கு முன், நேரு ஆற்றிய உரையைப் புரிந்து கொண்டவர்களை விட, மோடியின் உரையைப் புரிந்து கொண்டவர்கள் அதிகம் என்பது, மறுக்க முடியாத உண்மை. ஆங்கிலத்தை விட, ஹிந்தியை அதிகமானவர்கள் புரிந்து கொள்வர் என்பது, இதன் மூலம் தெளிவாகிறது. மேலும், 1947ல் கூட, ஆங்கிலம் அறிந்தவர்கள் குறைவே. ஹிந்தி பேசாத மாநிலங்களில் கூட, ஆங்கிலத்தை விட மாநில மொழிகளே பிரபலமாக இருந்தன.
இதன் மூலம் நேரு ஆற்றிய உரை, இந்திய மக்களுக்கானதல்ல; பிரிட்டிஷார் மற்றும் உலக மக்களுக்கானது என்பது புலனாகிறது. ஒரு பிரதமர் பார்லிமென்டில் உரையாற்றும் போது, அது, நாட்டு மக்களுக்காக இல்லாமல், உலக மக்களுக்காக இருப்பது நியாயமாகுமா?

இந்தியாவை கண்டறிதல் : இந்தியாவை கண்டறிதல் (டிஸ்கவரி ஆப் இந்தியா) என, ஒரு நுாலை, நேரு எழுதி உள்ளார். ஆனால், ஜூன், 30ல், பார்லிமென்டில் மோடி ஆற்றிய, சுருக்கமான, ஆனால், செறிவான உரையை நீங்கள் கேட்டிருந்தால், அதுவே, உண்மையான இந்தியாவை கண்டறிதலை உணர வைத்திருக்கும். இந்திய உணர்வுகளைத் தாங்கி நிற்கும் அனைத்து நரம்புகளையும், துாண்டும் வகையில் மோடி உரை இருந்தது. நம் வரலாற்றை குறிப்பிட்ட மோடி, பிரகாசமான எதிர்காலத்தையும், கண் முன் காட்டினார். சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து, குறிப்பிட்ட அந்த நேரத்தில், இளைஞர்களின் கனவுகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

இந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு குறித்து பேசிய அவர், பொருளாதார ரீதியில் நாட்டை ஒன்றுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையும் குறிப்பிட்டார். கடந்த, 70 ஆண்டுகளாக, இந்திய ஏழைகளுக்கு மறுக்கப்பட்டதை, கொடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.நாட்டின் பொருளாதார எழுச்சியை, நாட்டின் கிழக்கு பகுதியினர் முன் நடத்திச் செல்ல வேண்டிய தேவையை எடுத்துரைத்தார். ஜி.எஸ்.டி., மூலம் தொழில், வர்த்தகத்திற்கு ஏற்பட இருக்கும் சாதகங்கள், ரயில்வேக்கு ஏற்படும் வளர்ச்சி, வணிகம் செய்வதற்கான எளிய சூழ்நிலை, 'டிஜிட்டல் இந்தியா' உருவாவதற்கான சூழ்நிலை ஆகியவற்றை, மோடி பட்டியலிட்டார்.
ஆனால், இதற்கு மாறாக, 1947 ஆக., 15ல், நேரு ஆற்றிய உரையில், இந்தியாவின் வலிமை, விருப்பங்கள் குறித்து எதுவுமே இல்லை.

காங்., ஏன் புறக்கணித்தது? : ஜி.எஸ்.டி.,க்கான சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்ற நிலையில், காங்., மட்டும் புறக்கணித்தது, ஒவ்வொரு இந்தியனையும் ஆச்சரியப்பட வைத்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களின் முயற்சியால் தான், ஜி.எஸ்.டி., தற்போது உண்மையாகி இருக்கிறது.நேருவின் நள்ளிரவு உரையை, மோடியின் நள்ளிரவு உரை விஞ்சி விடும் என, பயந்து தான், அந்த கூட்டத்தை, காங்., புறக்கணித்தது போலும். மாறி வரும் அரசியல் நிலையை, காங்., தலைமை ஏற்றுக் கொள்ள, இயலாமல் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

அனில் பலுானி, பா.ஜ., ஊடக பிரிவின் தலைவர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

    மோதியையும் நெகர்வாலா நேருவையும் ஒப்பீடு செய்யவே முடியாது... நெகர்வாலா நேரு தன் சுயநலத்திற்க்காக நாட்டை எல்லா நிலையையிலும் விட்டு கொடுத்து துரோகம் செய்தார்...ஆனால் மோதி எந்த இடத்திலும் நாட்டையும் நாட்டு மக்களையும் விட்டு கொடுத்தது இல்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement