Advertisement

சொல்கிறார்கள்

நாட்டியம் தவிர்த்து கவுன்சிலிங் வரை உண்டு!


சென்னையில், 30 ஆண்டுகளாக, 'பரத நாட்டியாலயா' என்ற பெயரில், நாட்டியப் பள்ளியை வெற்றிகரமாக நடத்தி வரும், ரோஜா கண்ணன்: 5 வயதில் பரதம் கற்க ஆரம்பித்து, 1972ல், 12 வயதில் அரங்கேற்றம் பண்ணினேன். 30 ஆண்டுகளாக, 'டான்ஸ் ஸ்கூல்' நடத்தி வருகிறேன்.இதற்கெல்லாம் காரணம், புகழ்பெற்ற நடன குரு, அடையாறு கே.லக் ஷ்மணன் தான். அவருக்கு நாட்டியம், நாடகம், பாடல் எழுதுவது, அதற்கு மெட்டமைப்பது, நடனம் அமைப்பது என, எல்லாமே தெரியும். அவர் ஒரு முழுமையான குரு! அவர் இறந்து, மூன்று ஆண்டுகளாகிறது. அவருக்கு நாட்டியத்தால், மரியாதை - உபசாரம் செலுத்த வேண்டும் என தீர்மானித்தேன்.அப்புறம், என் அம்மா. இந்தாண்டு அவருக்கு, 80 வயதாகிறது. என் கணவர், எதிர்பாராமல் திடீரென இறந்ததில் இருந்து, என்னை மீட்டு, 'மோட்டிவேட்' பண்ணி, இத்தனை ஆண்டுகள் என்னை பாதுகாப்பதே அவர்கள் தான். அவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்.அடுத்ததாக, 'பரத நாட்டியாலயா' ஆரம்பித்து, 30 ஆண்டுகள் ஆகின்றன. இதை என் சிஷ்யக் குழந்தைகளோடும், என்னை தெரிந்தவர்களோடும் கொண்டாட விரும்பினேன். இந்த மூன்று விஷயங்களையும் காரணமாக வைத்து, ஜூலை 6, 7ல், 'நிருத்யோ உபசாரம்' செய்தோம்.முதல் நாள் விழாவில், என், 56 மாணவர்கள் மேடையில், டான்ஸ் - அந்த நடனங்கள் எல்லாமே என் குரு கோரியோகிராப் செய்தது. இரண்டாவது நாள், என்னுடைய பரதம் - இது, என் கோரியோகிராப்!எங்கள் காலத்தில், பழைய சாதத்தைப் பிழிந்து, தயிர் போட்டு சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு போவோம். டான்ஸ் ஆட அவ்வளவு சக்தி கிடைக்கும். இப்போது இருக்கும் பிள்ளைகள் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு, நாட்டிய வகுப்புக்கு வருகின்றனர்.
ஒரேயொரு அரை மண்டி போடும் போதே, சோர்ந்து போய் விடுகின்றனர். டான்ஸ் ஆட பிள்ளைகளுக்கு கால்சியம் சத்தும், வைட்டமின், 'டி'யும் ரொம்ப அவசியம். இதுகுறித்து நான், மாணவர்களின் பெற்றோரிடமும் பேசி இருக்கிறேன். ஒரு குரு, தன் சிஷ்யர்களின் ஹெல்த் விஷயத்திலும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.எங்கள் காலத்தில், வீட்டில் இருந்து நாட்டிய வகுப்புக்கு நடந்து தான் போவோம். அதுவே எங்களுக்கு, 'வார்ம் - அப்' ஆயிடும். இந்தக் கால குழந்தைகள், ஸ்கூல், டியூஷன் முடித்து, எங்கிருந்து நடந்து வருவது... டயர்டாகி காரில் தான் வருகின்றனர். அவர்களுக்காக, சில வார்ம் - அப் யோகாசனங்களை சொல்லித் தருகிறேன்.முக்கியமாக, என் மாணவர்களுக்கு பரதநாட்டியம் தவிர்த்து, நடனத்துக்கான பாட்டு பாடுவது, நட்டுவாங்கம், ஜதி, லைட்சைப் பொறுத்து எப்படி மேக்கப் செய்வது, அவரவர்களின் உடல் வாகைப் பொறுத்து, அரங்கேற்றத்தின் போது, எந்த கலர், வடிவமைப்பில் டிரஸ் போடுவது என்பதில் இருந்து, சில பர்சனல் பிரச்னைகளுக்கும் கவுன்சிலிங் வரை, பல விதத்தில் கைடு பண்ணுவேன்.
என் குருவைப் பற்றி, இன்று நான் பெருமையாக, மரியாதையாக பேசுவது போல், நாளை என் சிஷ்யக் குழந்தைகள், என்னைப் பற்றி பேச வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement