Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: கமல் போன்ற சினிமா துறையினர் மட்டுமின்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசை விமர்சனம் செய்ய உரிமம் உண்டு. அது, நாகரிகமாகவும், ஆதாரத்துடனும் இருக்க வேண்டும். நடிகர் கமல் பங்கேற்றுள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சேரி மக்கள் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை, அவர் நிறுத்த வேண்டும்.


பள்ளி கல்வி செயலர் உதயசந்திரன் பேச்சு: பள்ளிகளில், தமிழ் கலை இலக்கிய மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், பசுமைப்படை, செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம் போன்ற அமைப்புகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்பதில் மட்டும் அல்லாமல், புற வழி செயல்பாடுகளில் அதிகமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் நுாலகம் அமைத்து, நுாலக பாடவேளை ஏற்படுத்த வேண்டும்.



பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி:
தமிழகத்தில், மணல் விற்பனையை அரசே நடத்தும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பல லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலை இல்லாமல் உள்ளனர். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு, என்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் என, யோசிக்காமல், மக்கள் பிரச்னைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.



அகில இந்திய பிசியோதெரபி மருத்துவர் சங்க மதுரை அமைப்பாளர் பிரேம்குமார் பேட்டி: மாநில அளவில், 150 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே உள்ளனர். இதனால், வாதம், மூட்டுவலி உள்ளிட்ட நோய்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை கிடைக்காமல், நோயாளிகள் தவிக்கின்றனர். மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.




'தமிழக மக்கள், உங்களை ஆட்சியில அமர்த்துவாங்கன்னு இன்னுமா நீங்க நம்புறீங்க...' என, பரிதாபமாக கேட்கும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேச்சு:
தமிழகத்தை, 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகள், மக்களுக்கு நல்ல திட்டங்களை அளிக்கவில்லை. தமிழக மக்கள், சாராயத்திற்கும், நடிப்பு, வசனத்திற்கும் இனி ஏமாற மாட்டார்கள். நடிப்பவர்கள் ஆண்டது போதும்; இனி படித்தவர்களும், இளைஞர்களும் தான் தமிழகத்தை ஆள வேண்டும். மக்கள் மீது அக்கறை கொண்ட, பா.ம.க.,வுக்கு, ஒருமுறை ஆள வாய்ப்பளித்தால், மது, ஊழலற்ற ஆட்சி அமையும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement