Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை '

இந்த பலவீனமான ஆட்சியை அகற்றி விட்டு, பலமான, த.மா.கா.,வின் ஆட்சியை விரைவில் அமைப்போம்னு சொல்ல முடியாம, உங்களை எது தடுக்குது' என, கேட்க தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன் பேட்டி:

கல்வி, தற்போது வியாபாரம் ஆக்கப்பட்டு உள்ளது. கல்வியை, ஏழை, எளிய மாணவர்கள் பெறுவதற்கு காமராஜரின் நேர்மை, எளிமை, ஊழலற்ற ஆட்சி தேவை. தற்போது, தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க., ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி. இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த முடியாத பலவீனமான ஆட்சியாகவே, இது உள்ளது.

மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: 'நீட்' தேர்வு விவகாரத்தில், ஒரு கட்சி மீது அல்லது அரசு மீது உடனடியாக குற்றச்சாட்டு கூற முடியாது. இது, நீண்டகால பிரச்னை. கல்வித்துறையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் முன்னேற்றம் கொடுக்கப்பட்டு இருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், இந்த ஆண்டு விலக்கு அளித்திருக்கலாம். நான், இது குறித்து, மத்திய கல்வி அமைச்சரிடம் பேசுவேன். தமிழக அரசு, தமிழக கல்வித் துறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., - டி.கே.ரங்கராஜன் அறிக்கை:
பிளஸ் 2 மதிப்பெண்ணை புறக்கணித்து, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதனால், இரண்டு ஆண்டுகள் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும், ஏழை மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீட் தேர்வு பயிற்சி மையங்கள், தொடர் தேர்வுகள் நடத்தி, சிந்திக்கும் திறனை சிதைத்து விடுகின்றன. எனவே, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, உள்துறை அமைச்சகத்தில் உள்ள, நீட் மசோதா மீது, பிரதமர் தலையிட்டு, தமிழகத்திற்கு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தின் ஆய்வறிக்கையில், தமிழகத்தில், தனியார் வேலைவாய்ப்புகள், இந்த ஆண்டு, 12 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இந்தியா முழுவதும், 11 சதவீத வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு, 2016 - 17ல், 5,802 பேருக்கு மட்டுமே வேலை வழங்கி உள்ளது. தனியார் மூலம், 20 ஆயிரத்து, 778 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. தொழிற்சாலைகள், அண்டை மாநிலங்களுக்கு சென்றதே இதற்கு காரணம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டங்களை அரசு பட்டியலிட வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement