Advertisement

இது உங்கள் இடம்

மூத்த குடிமக்களை நோகடிக்காதீர்!

கே.எஸ்.சுப்ரமணியன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:
சமீப காலமாக, ரயில்களின் சேவை மிகவும் மோசமாக இருப்பதாக, வாசகர்கள் பலர், இதே பகுதியில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ரயிலில் முன்பதிவு செய்து பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
என் வயது, 87; மனைவியின் வயது, 72. மதுரையில் இருந்து சென்னை வர, பாண்டியன் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பில், இருவருக்கும் டிக்கெட் ரிசர்வ் செய்தேன். பி.என்.ஆர்., எண், 443 - 3604273. அந்த டிக்கெட்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு, ஏ-2/33 என்றும், என் மனைவிக்கு, ஏ-3/33 என்றும் இருந்தது.
டிக்கெட் கவுன்டரில், அதை மாற்றி, ஒரே கோச்சில் எதிர் எதிரே பயணிக்கும் வகையில் மாற்றித் தர கேட்டேன்; ஊழியர் மறுத்து விட்டார். வயதானோர் எனக் கூறியும், அதை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
அந்த டிக்கெட்டை, ஜூலை 8ல் மதுரை டிக்கெட் கவுன்டரில் ரத்து செய்ய விண்ணப்பித்தேன். அதை ரத்து செய்வதற்கான கட்டணம் போக, மீதிக் கொடுத்த பணத்தை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பயண நாளைக்கு, 10 நாட்கள் முன் ரத்து செய்ததற்கு, 420 ரூபாய் போக, பாக்கி, 935 ரூபாய் கொடுத்தார்; இது எவ்வளவு பெரிய பகல் கொள்ளை! மூத்த குடிமகன்களிடம், ரயில்வே நிர்வாகம் கொள்ளையடிப்பதை, மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது.
இதை கண்டிக்க, நாதி இல்லையா... மூத்த குடிமக்கள் விஷயத்தில், ரயில்வே தனிக்கவனம் செலுத்த வேண்டும்!

கண்டிப்பில்லாத பள்ளிகள் உருப்படாது!

க.அண்ணாமலை, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த, கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருக்கு, சபாஷ் போடலாம்.என்ன தான் மாற்றங்களை அரசு ஏற்படுத்தினாலும், அதை செயல்படுத்த வேண்டியவர்கள் கல்வித் துறை அதிகாரிகள்; அவர்களை விட, பள்ளியை தரமாக்க, தலைமையாசிரியர்களால் தான் முடியும்!
அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளியை திறம்பட நடத்த முடியும் என்பதற்கு சில உதாரணங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
மதுரையில், 'மதுரா' கோட்ஸ் மில் ஆலையின் தொழிலாளர்களின் குழந்தைகள் பயில்வதற்காக, மதுரை மில் தொழிலாளர்கள் நல உரிமை கழக மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
அதில், ஆறு முதல் பிளஸ் ௨ வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ௧௯௮௩ - ௮௭ல், அங்கு படித்த மாணவன் என்ற முறையில், பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ் என்பவரை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்...
பள்ளி மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, தலைமையாசிரியரை கண்டால் நடுங்குவர். சீருடை அணியாமல் மாணவர் யாரும் பள்ளிக்குள் நுழைய முடியாது. முடி வெட்டி இருக்க வேண்டும்.
அதை விட, மாதந்தோறும் நடத்தப்படும் தேர்விலும், காலாண்டு, அரையாண்டு தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் காதை பிடித்து கிள்ளி விடுவார்.
ஒரு பாடத்திற்கு ஒரு கிள்ளு இருக்கும். ரத்தக் கறை படிந்த காதை பார்த்து, மாணவன் தேர்ச்சி பெறாதவர் என தெரிந்து கொள்ளலாம். மூன்று பாடத்திற்கு மேல் தேர்ச்சி பெறாதவர்களை, கம்பால் உதை உதை என, உதைப்பார்.
அந்த பள்ளியில், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ பொதுத் தேர்வுகளில், ௯௦ சதவீத அளவிற்கு தேர்ச்சி இருக்கும். அதை போல், அங்கு படித்த மாணவர்கள் கல்வியை காட்டிலும், ஒழுக்கத்தை கற்றவர்களாக வெளியேறி உள்ளனர்.
'தலைமையாசிரியர் அடித்து எங்களை கொடுமைப்படுத்துகிறார்' என, எந்த மாணவரும், பெற்றோரிடம் கூறியதும் இல்லை. 'என் மகனை எப்படி நீங்கள் அடிக்கலாம்' என, எந்த பெற்றோரும் அவரை கண்டித்ததும் இல்லை.
அடியாத மாடு படியாது என்ற பழமொழி உண்டு; அதை, அன்று தர்மராஜ் கடைபிடித்தார்.
இன்று, எந்த மாணவரையும் கண்டிக்க முடியவில்லை; ஆசிரியரையும் தட்டிக் கேள்வி கேட்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும், 'மனித உரிமை மீறல்' என, பேசுகின்றனர்.
'சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என, மிரட்டுகின்றனர்; இந்நிலை மாறினால் மட்டுமே, பள்ளி கல்வித் துறையினர் சீர்திருத்தம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்!

'தண்ணீரில்'மட்டுமேதன்னிறைவு!

என்.சிவசுந்தர பாரதி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
'மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றுவது கட்டாயம்' என்ற செய்தி சமீபத்தில் நாளிதழில் வெளியாகி இருந்தது.இது வரவேற்கக்கூடியது தான்; ஆனால், கிராமங்களில் பணியாற்ற செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் அந்த கிராமங்களில் செய்து தரப்பட்டுள்ளதா என்பதை, அரசு விளக்க வேண்டும்.
மருத்துவ மாணவர்கள் மீது, வலுக்கட்டாயமான சூழலை அமல்படுத்துவதை விட, கிராமங்கள் அளவில் எல்லாவிதமான தன்னிறைவு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு, மத்திய, மாநில அரசுகளின் உத்தரவாதம் தான் என்ன... மாநிலங்களின் செயல்பாடுகளில், இன்றளவும், ஓட்டு வங்கி மற்றும் மக்கள் ஏய்ப்பு மட்டுமே, முதன்மையாக உள்ளது.
இன்றும், தமிழகத்தில் தரமான சாலைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லாத எத்தனையோ கிராமங்கள் உள்ளன.நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி, தற்போது குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது; பல கிராமங்களில் இன்னும் மின்சாரம் கிடையாது.
இப்படிப்பட்ட இடங்களில் மருத்துவமனைகளை திறந்து, மருத்துவ மாணவர்களை நியமிக்க, எப்படி அரசுக்கு மனசு வந்தது. அங்கு பணியாற்றுங்கள் என்றால் எப்படி...
திராவிட கட்சிகளின் ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும், எங்கும், எதிலும் தன்னிறைவு இல்லை.
ஆனால், ஒரு விஷயத்தில் மட்டுமே தன்னிறைவு அடைந்துள்ளனர். 'டாஸ்மாக்' மதுக் கடைகளை திறந்து, இளைஞர்கள் முதல், முதியோர் வரை குடிகாரர்களாக ஆக்கி விட்டனர்.
கிராமங்களின் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு அடைந்தால், நிச்சயம் மருத்துவ மாணவர்கள் கிராமங்களை நோக்கி ஆர்வத்துடன் பணியாற்ற படையெடுப்பர்.
எனவே, மத்திய, மாநில அரசுகள், கிராமங்களின் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை எடுக்க வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement