Advertisement

சொல்கிறார்கள்

பெண்ணினத்துக்கேகிடைத்த அங்கீகாரம்!

'சிம்பொனி' பெயரில் கர்ட்டன் தொழிலில் கலக்கும் பானுமதி லட்சுமணன்: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்தவள் நான். பிளஸ் 2 படிக்கும் போதே திருமணம் ஆனது. ஆர்க்கிடெக்டான என் கணவர், புதுச்சேரியில் வேலை பார்க்க, மதுரையில் நான் டிகிரி படித்து கொண்டிருந்தேன்.அப்போது, டில்லி மாற வேண்டிய சூழல் கணவருக்கு ஏற்பட்டதால், படிப்பை நிறுத்தி, அங்கு சென்றேன். வீட்டில் போர் அடிக்க, கணவரின் துறைக்கு சம்பந்தமாக, 'டிப்ளமா இன் இன்டீரியர் டெகரேஷன்' படித்தேன்.

டில்லியிலிருந்து கோவை வந்து செட்டில் ஆனதும், பாதியில் விட்ட டிகிரி படிப்பை முடித்து, கணவருடைய ஆபிசில், 'பார்ட் டைமாக' வேலை பார்த்தேன். குழந்தைகள் வளர்ந்தவுடன், 'சிம்பொனி' என்ற பெயரில், 20 ஆண்டுகளுக்கு முன், படங்களை பிரேம் செய்வதுடன், பர்னிஷிங்கும் சேர்த்து செய்ய ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்களில் பலர், கர்ட்டன்ஸ் டிசைனிங் கேட்டதால், அதை செய்ய ஆரம்பித்தேன். கடைசியில், பிரேமிங்கை விட்டு விட்டு, கர்ட்டன்ஸ் அண்ட் பர்னிஷிங் தான், இப்போது மெயின் பிசினசாக உள்ளது.

மும்பை, ஆமதாபாத் போன்ற வட மாநில நகரங்களில் இருந்து தான், மீட்டர், 150 - 6,000 ரூபாய் வரை, மெட்டீரியல் வருகிறது. முன்பெல்லாம், மீட்டர், 250 - 300 ரூபாய் தான். இப்போது வாடிக்கையாளர்களின் விருப்பமும், தேர்வும் தரமாக இருக்கிறது. அதேபோல் முன்பு, எல்லா டிசைன்களையும் வாங்கி, 'ஸ்டாக்' வைக்க வேண்டும்; முதலீடும் அதிகம். ஆனால், இப்போது சாம்பிள் புத்தகம் வந்துவிட்டது. அதில் பார்த்து, 'ஆர்டர்' செய்தால், அனுப்பி விடுவர். அதனால், கொஞ்சமாக முதலீடு செய்தால் போதும்.

வீட்டு அலங்காரத்தில், வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமாக செய்வது தான் இப்போதைய, 'டிரெண்ட்!' வீட்டின் உட்புறத்தை போட்டோ எடுத்து, சுவர் பெயின்ட், பர்னிச்சர் என எல்லாவற்றையும் பார்த்து, அதற்கு பொருத்தமான சோபா கவர், கர்ட்டன், கார்ப்பெட் செய்து கொடுக்க வேண்டும்.

இதில், 'தீம்' ஆகவும் செய்கிறோம். குழந்தைகள் அறை, பூஜை அறை, ஹால் என, ஒவ்வொன்றும் வித்தியாசம் காட்டுகிறோம். அதனால், ஒரு வீட்டுக்கு கர்ட்டன்ஸ் அண்ட் பர்னிஷிங் செய்தால், அதை பார்த்து நிச்சயம் மூன்று ஆர்டர்கள் கிடைக்கும். மதுரையிலும் எங்கள் கிளை இருக்கிறது. மைசூரில் ஒரு ஓட்டலுக்கு செய்தது தான், இதுவரை செய்ததில் பெரிய புராஜெக்ட்.
இந்த பிசினசை ஆரம்பிக்கும் முன், வடமாநிலத்தில் கர்ட்டன் துணிகளை வினியோகம் செய்யும் பெரிய ஜவுளி தயாரிப்பாளரை பார்க்க சென்றோம். அங்குள்ள முன்னணி வினியோகஸ்தர், 'இந்த பிசினசை ஒரு பெண்ணால் நடத்த முடியாது. ரொம்ப கஷ்டம். நான் உங்களுக்கு வினியோகம் பண்ண முடியாது. நீங்க வேறு கடை பாருங்க' என்றார்.அதே வினியோகஸ்தர்,

சிம்பொனியை ஆரம்பித்து ஓர் ஆண்டு கழித்து என்னை பார்த்து, தன் தவறான மனப்போக்குக்காக வருத்தம் தெரிவித்ததுடன், தான் துணிகளை வினியோகிப்பதாக கூறி, இந்த தொழிலில் இறங்கும் பெண்களை ஊக்கப்படுத்தவும் செய்கிறார். இது, எனக்கு மட்டுமல்ல, பெண்ணினத்துக்கே கிடைத்த பெரிய அங்கீகாரம்.

வாசனை திரவியங்கள்முத்தின் பொலிவைமங்க செய்யும்!

தங்கம், வைர, வெள்ளி நகைகளை பராமரிக்க, எளிய வழிகளை கூறும், தங்கம், வைர வியாபாரிகள் சங்கதலைவர், ஜெயந்திலால் சலானி: பொதுவாக நகைகள் வாங்கும் போது, பளபளவென ஜொலிக்கும்; ஆனால், 24 கேரட் தங்கமாக இருந்தாலும், சில நாட்களிலேயே பொலிவிழந்து விடும்.

ஓரிரு முறை தங்க நகையை அணிந்து, கழற்றி வைக்கும் போது, சோப்பு அல்லது ஷாம்பு நுரையில் போட்டு கழுவி, காட்டன் துணியால் துடைத்துபத்திரப்படுத்த வேண்டும்.வெகு நாட்களாக நகையை அணியாமல் பெட்டியில் வைத்திருந்தால், செந்நிறமாக மாறி விடும். அப்போதும், சோப்பு நுரையில் போட்டு எடுக்க வேண்டும்.

விசேஷ தினங்களில் மட்டும் உபயோகிக்கும் பெரிய நகைகளை, அதற்கென உள்ள பெட்டிகளில் தனித்தனியாக வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று உரசினால், தங்கம் தேய வாய்ப்புள்ளது. செயின், ஆரத்தை மடங்கும்படி வைத்தால், விரைவில் விட்டுப் போகும். ஈரம், அதிக வெப்பம் இல்லாத, உலர்ந்த இடத்தில் தான் நகைகளை வைக்க வேண்டும்.

தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், செயின், வளையல் போன்றவை, அதிக பயன்பாட்டால், மங்கிப் போகும். அப்போது ஷாம்பு நுரை அல்லது பூந்திக் கொட்டை கழுவிய நீரில் போட்டு எடுத்தால், புத்தம் புது நகைபோல் ஜொலிக்கும். குறைவாக பயன்படுத்தும் நகைகளை பெட்டியில் வைக்கும் போது, துணியில் சுற்றி வைத்தால், நிறம் மங்காமல் இருக்கும்.

தங்க நகைகளுடன்கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், ஒன்றோடு ஒன்று உராய்ந்து, தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.கற்கள் பதித்த நகைகள் மீது பற்பசையை பூசி, பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின், நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், கற்களில் பதிந்துள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கி, மின்னும்.

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைப்பதால், கறுப்பாவதை தடுக்கலாம். வெள்ளி கொலுசில், சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறிய பின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால், பளபளவென்று ஆகிவிடும். மேலும், வெள்ளி நகைகளை காற்று புகாத, 'ஏர் டைட்' கவரில் வைத்து, அதில், சாக்பீஸ் போட்டு பாதுகாக்கலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் அமோனியா மற்றும் பாஸ்பேட் இல்லாத, 'டிஸ்வாஷ்' சோப்புகளை கரைத்தும் அல்லது பேக்கிங் சோடாவை தண்ணீரில் குழைத்து பேஸ்டாக்கி, அதை வெள்ளி நகைகள் மீது தடவி, சுத்தமான துணியால் தேய்த்தும்,கருமையை போக்கலாம்.

முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், அதன் பொலிவு மங்கிவிடும். எனவே, ஒப்பனை முடிந்து, முத்து நகைகளை அணியலாம்.வைர நகைகளை, எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கழற்றி வைத்து விட்டால், எண்ணெய் இறங்கி ஜொலிப்பு குறைவது தடுக்கப்படும். மேலும், வைர நகைகளை தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. மென்மையான வெல்வெட் துணியில் வைர நகைகளை வைப்பதுடன், கண்ணாடி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement