Advertisement

'டவுட்' தனபாலு

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்: எதிர்காலமே இல்லாத நிலையில், தி.மு.க., சென்று கொண்டிருக்கிறது.

டவுட் தனபாலு:
அ.தி.மு.க.,வில் கடும் பூசலும், எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்கும் போராட்டமும் நடந்துவர்ற சூழலிலும், தி.மு.க.,வில் இருந்து யாரும், அந்த பக்கம் போகலை... அப்புறம் எப்படி, தி.மு.க.,வுக்கு எதிர்காலமே இல்லைன்னு சொல்றீங்க... மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வாகிய நீங்க, தமிழகத்தில் பா.ஜ.,வின் எதிர்காலம் எப்படி இருக்கும்கற ஆருடத்தையும் சொல்லுவீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

ஜெ., அண்ணன் மகள் தீபா: தமிழகத்தில் ஆட்சியில் மறைமுகமாக பங்கெடுத்து, சசி குடும்பம் நெருக்கடி கொடுத்து வருவதால், மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. ஜெ.,வின் மக்கள் நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

டவுட் தனபாலு: தொண்டர்களுக்காக கட்சியையும், மக்களுக்காக ஆட்சியையும் மீட்டே தீருவேன்னு சொல்லும் நீங்க, களத்தில் இறங்கி அவர்களுக்காக குரல் கொடுக்க மறுப்பதேன்... உங்க செல்வாக்கு அப்பட்டமாகிடும் என்பதால் தான், வெறும் அறிக்கை, பேட்டி அரசியல் நடத்துறீங்க என்ற குற்றச்சாட்டு இருக்கே... அந்த, 'டவுட்'டுக்கு என்ன பதில் வெச்சிருக்கீங்க...!

ச.ம.க., தலைவர் சரத்குமார்: மத்திய அரசு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து இன்னும் ஆலோசனை நடத்தி, பாதிப்பு இல்லாத அளவிற்கு அமல்படுத்த வேண்டும்.

டவுட் தனபாலு:
பாதிப்பு இல்லாத அளவிற்கு அமல்படுத்த வேண்டும் என்றால், தற்போதைய நிலையில், ஜி.எஸ்.டி.,யில் உங்களுக்கு ஒப்புதல் இல்லை என்பது தானே அர்த்தம்... அதை, வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது தானே... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அடுத்த நாள், உங்க வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததில் இருந்து, உங்களின் வேகம் குறைஞ்சிடுச்சோ என்ற, 'டவுட்' வந்திடப் போகுது...!லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை:
ஆளும், அ.தி.மு.க., அரசுக்கே, கட்சியும், சின்னமும் சொந்தம்.

டவுட் தனபாலு:
கட்சி யாரிடம் இருக்கோ, அவரிடம் தான் ஆட்சி இருக்கணும்னு பிரச்னைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நீங்க தான்... இப்போ, ஆட்சி தான் கட்சின்னு அந்தர் பல்டி அடிக்குறீங்க... அப்புறம் என்ன, முதல்வர் பழனிசாமியையே கட்சியின் பொதுச் செயலராக்கிட வேண்டியது தானே... அந்த முயற்சியை எப்போ துவக்கப் போறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'

முதல்வர் பழனிசாமி: மழைக் காலங்களில், கண்காணிப்பு கேமராக்கள் மீது, துாசிகள் படிந்து விடுகின்றன. இதனால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உருவம், தெளிவாக தெரியவில்லை.

டவுட் தனபாலு: ஊரு உலகத்துல எங்க தப்பு நடந்தாலும், 'உடனடியா கண்காணிப்புக் கேமராவைப் பொருத்துங்கள்'னு, கறார் காட்டுவதே, காவல் துறை தான்... ஆனா, காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட கேமராக்களின் பராமரிப்பில், எந்த அளவுக்கு அக்கறையா இருக்காங்க என்பது, இதன் மூலம் அப்பட்டமாகிடுச்சு... அறிவுறுத்தல், உத்தரவு எல்லாம், சாமான்யர்களுக்கு மட்டும் தானா என்ற, 'டவுட்' வலுவாகுது...!

பா.ஜ., மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகம்: ஜி.எஸ்.டி., குறித்து மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரத்தை, மக்கள் புறக்கணிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், மக்கள், தேச வளர்ச்சிக்கான திட்டங்களே!

டவுட் தனபாலு: எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை, பொதுவெளியில் மேடை போட்டு நீங்க முறியடிங்க... வெறுமனே, 'நம்பாதீங்க'ன்னு சொல்வது எடுபடுமா... டீக்கடை துவங்கி நகைக்கடை வரை, ஜி.எஸ்.டி.,யை காரணம் காட்டி விலையை கூட்டுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்த விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது உங்க கடமை இல்லையா... இது, ஒட்டுமொத்தமாய் மத்திய, பா.ஜ., மீது தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை, நீங்க எப்போ உணரப் போறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement